கடன் மட்டும் கொடுக்காதீங்க...

வைகைப்புயல் வடிவேலு, ஒருத்தனுக்கு கடன் கொடுத்திருந்தார். ரொம்பநாள் கண்ணிலேயே படாதவன் ஒருநாள் போகிற வழியில் இவரிடம் வகையாக சிக்கிக்கொண்டான்.

"ஏண்டா கடன் வாங்கிறதுக்கு மட்டும் வந்திர்றீங்க... வாங்கினதுக்கப்புறம் தலைமறைவாகிடுறீங்களே எப்புடிடா வெண்ரூ?"

மாட்டிக்கொண்டவனுக்கோ அவசரம்.("வீட்டில் அக்காவுக்கு பயங்கரத்தலைவலி. தலைவலி பாம் வாங்கிட்டு, போறதுக்குள்ள, இவன் வேற...")

அந்தப்பக்கம் ஒருத்தன் வந்தான். "என்னண்ணே, உன்ன பாம் வாங்கியார சொன்னிச்சில்ல அக்கா. இங்க மசமசன்னு நிக்கிற...சீக்கிரம் போண்ணே"

'பாம்' என்றதுமே அதிர்ச்சி வடிவேலுவிற்கு. ('என்னது பாமா? ஐயையோ இப்ப என்ன செய்வேன்?')

இவனுக்கு போன் வருகிறது,"என்னக்கா?...'பாம்'ஆ? ரெண்டு வாங்கிட்டேன். கவலையேப்படாத...இனிமே எந்த தொந்திரவும் இருக்காது..."

வடிவேலு அழ ஆரம்பிக்கிறார்.
"டேய் டேய், ஒண்ணும் செஞ்சிடாதடா...சும்மா ஒரு வெளையாட்டுக்குதான்டா கேட்டேன்.கொடுத்த காசை நீயே வேணாலும் வச்சுக்க. தீபாவளிக்கே பட்டாசு சத்தத்தை டேப்ல ரெக்கார்ட் பண்ணி போட்டுத்தான் கொண்டாடுவேன். உண்மையான பாம்'னா ரொம்ப பயம்டா."

"அடயேண்ணே நீ பயப்புட்ற. நா சொல்றது இந்த தலைவலி பாம். வேணுமா?"

"அடச்சே...அதானே பார்த்தேன். நம்மகிட்ட வாலாட்ட எந்த கொம்பனுக்கு தைரியம் இருக்கு? நாங்கள்லாம் யாரு? புகுந்து வெட்டிடமாட்டோம்..."

(தனக்குள், "நம்ம வீக்னஸ் எப்பிடியெல்லாம் வெளிப்படுது பாரு சே")

குடியரசு தினவிழாக்கொண்டாட்டம்

இன்று காலை, எங்கள் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாடத்தில், சின்ன நாடகம் ஒன்று மனதைக்கவர்ந்தது.

பெரிய விஷயமொன்றுமில்லை. ..அடிக்கடி கேட்கிற கதைதான்...

வெட்டியாக பொழுதைக்கழிக்கும் மூன்று பேர் இருக்கிறார்கள். வருவோர்போவோரிடம் ஏமாற்றிக்காசு வாங்குவதுதான் அவர்கள் வேலை.

ஒவ்வொரு மதத்தினர்களாக அந்தப்பக்கமாக வருகிறார்கள். அவர்களுக்குமுன் அந்த மதத்தினை போற்றுவதுபோல நடிக்கிறார்கள்...அவர்களிடம் ஏமாற்றி தட்சணை மற்றும் காசுகள் வாங்கிகொள்கிறார்கள். அவர்கள் போனபின் அந்தக்காசைவைத்து சூதாடுகிறார்கள்.

உண்மை அந்த மதத்தினர்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் இவர்களை தங்கள் மதத்திற்கு வந்துவிடுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

பெரிய இழுபறியாகிறாது...
மோதல் ஏற்படுகிறது...
ஒரு பெரியவர் தலையீட்டால், எல்லாம் சுபமாகி எல்லோரும் நண்பர்களாகி அமைதியாகின்றனர்.

"மதங்கள் மாறினாலும்
இறைமை ஒன்றே !!!
மனங்கள் மாறினாலும்
மனிதம் ஒன்றே !!!"

"மதங்களில்
நமது அடையாளங்களை
தொலைத்துவிடாமல்,
'நாம், இந்தியர்கள்' என்பதை மட்டும்
ஞாபகத்தில் கொள்வோம்"

"மனிதம் வளர்த்து
இந்தியம் காப்போம்."

என்பதுதான் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

கல்கியின் பொன்னியின் செல்வன்...

கல்கியின் பொன்னியின் செல்வன்(the son of Kauveri) நாவலைப்பற்றி மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதில் ரொம்ப சந்தோஷம் உண்டு.

பொ.செ ரேடியோ நாடகக்குழுவினருக்கு விருதுகள் தரப்பட்டது என்ற செய்தியை The Hinduவில் பார்த்ததும் ஒரு கேள்வி என் மனதுக்குள்..."ஏன் பொ.செ.னை (சினிமா)படமாக எடுக்கமுடியவில்லை?"

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி பத்மC கமல் வரை முயற்சி பண்ணிப்பார்த்துவிட்டார்கள்...

"நான்கு தலைமுறை வாசகர்களைக்கொண்டது பொ.செ., ஒவ்வொரு வாசகனும் கதாப்பாத்திரங்களை ஒவ்வொரு விதமாக கற்பனை பண்ணிவைத்திருப்பார்கள். அவர்களை திருப்தி செய்வது கடினம்..." என்பது திரு.கமல் அவர்களின் வருத்தம்.

இந்தக்காரணத்தால், ஒரு விறுவிறுப்பான, சஸ்பென்ஸ் நிறைந்த மகாக்காவியத்தின் visual treat-டை எதிர்பார்த்த நல்ல ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

கொஞ்ச நாட்களுக்குமுன், தமிழ் டிவிக்காக இரு வெவ்வேறு தயாரிப்பாளர்களால் தனித்தனியே தொடங்கப்பட்டு பிறகு பிரச்சனை ஏற்பட்டு அதுவும் நிறுத்தப்பட்டது...ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்.

பலகாலம் பலபேரால் படிக்கப்பட்டு, அத்தனை கதாப்பாத்திரங்களும் போர்க்காட்சிகளும் ஆழமாகப்பதிந்த இராமாயணமும், மகாபாரதமும்தான் இந்தி டிவியில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டது... ('சக்திமான்' பார்த்தால் 'பீஷ்மர்' ஞாபகந்தாங்க வருது)

சரித்திரக்கதைக்கு திரைவடிவம் கொடுப்பதில் ஒரு சிக்கல் உண்டு...அரண்மனை செட் போட்டு கஷ்டப்பட்டு எடுத்துக்கொண்டிருப்பார்கள், தூரத்தில் டொயாட்டோ கார் போய்கொண்டிருக்கும்...நவீன காலத்தின் அடையாளங்களை என்ன வேஷம் போட்டும் மறைக்கமுடியாது.

தற்பொழுது நம்மளால் முடிந்தது, ஒன்றே ஒன்றுதான்... எந்தெந்த கதாப்பாத்திரத்திற்கு யார்யார் பொருத்தமாகயிருப்பார்கள் என்று பேசிக்கொண்டிருக்கலாம்...

கவுரவமிக்க இராஜராஜச்சோழனுக்கு கமல்,சரிதானே?.
துறுதுறு வந்தியத்தேவனுக்கு, சூர்யா. கம்பீரமான பெரியபழுவேட்டரையருக்கு (காலஞ்சென்ற) ஆர்.எஸ்.மனோகர். கண்டிப்பான சின்னபழுவேட்டரையருக்கு ராஜ்கிரண். நந்தினிக்கு ஐஸ்(வில்லி)..என்ன நான் சொல்றது?

ஆழ்வார்க்கடியானுக்கு வடிவேலு அவர்களைப்போடலாம் என்றால், அவருடைய 'எக்குத்தப்பாக ஏதாவது பேசி எல்லோரிடமும் உதை வாங்கும்' இமேஜ் இடிக்கிறது...
புலிகேசி-23 காமெடியான அரசர்.அதற்கு அவர்தான் பொருத்தமானவர்.
(ஆழ்வார்க்கடியான் சிக்கலில் மாட்டிக்கொள்பவர் இல்லை...அதிலிருந்து சாதுர்யமாக தப்பிப்பவர்)

ஆமா...ரொம்பநாளா ஒரு சந்தேகம்...
ஆதித்தகரிகாலன் இறந்தது எப்படி?

சென்னை புத்தகக்காட்சியில்...

(பத்ரி அவர்களின் 'விகடன்,குமுதம்,பிறர்' படித்தபின் பதித்தது)

கிழக்குப்பதிப்பகத்தில் மற்றும் மிகச்சில ஸ்டால்களில் மட்டும்தான் புத்தகங்கள் இருத்திவைக்க நடுவில், மர அலமாரி போல இருந்தது...

ஆனால், பெரும்பாலான ஸ்டால்களில், இப்படியில்லாமல் 'புத்தகக்கோட்டை' கட்டிவைத்திருந்தார்கள். இரசிக்கும்படியாக இருந்தாலும், மூச்சுத்திணற வைக்கும் 'மாநகரப்பேருந்து கூட்டம்போல்' இருந்த நெரிசலில் தடுக்கி, 'கோட்டை' கலைந்து விழுந்து அந்த இடமே பேஜாராகியது...

ஒருவேளை, இதனால்தான் என்னவோ விகடனில் அப்படி புத்தகங்களை கொட்டிவைத்திருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும், எப்பேற்பட்ட கூட்டநெருக்கடியாக இருந்தாலும் கிடைக்கிற சந்துபொந்தில் நின்றுகொண்டு, 'படித்துப்பார்த்துதான்' வாங்குவேன் என்று அடம்பிடிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு, பாலிதீன் பாக்கெட்டில் 'பத்திரப்படுத்தப்பட்ட' நூல்களை வாங்க முடியவில்லை...('கதாவிலாசம்' மற்றும் வேறு சில ஸ்டால்களில் கவிதை தொகுப்புகள்)

அடுத்தது...
சாதாரணமாக எல்லா ஸ்டால்களிலும் விற்பனைப்பிரதிநிதிகள் இருந்தார்கள். விகடனில் (உள்ளே) இல்லை. தேவையில்லை என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால், எல்லா தலைப்புகளும் நன்கு பரிட்சயமானவை. அதோடு, அந்த மகாகூட்டத்தின் நடுவில் கடைக்காரர்கள் வந்துநின்று பேசிக்கொண்டிருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், அவர்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக பில் போட்டிருந்திருக்கலாம். 'என் நம்பர் எப்போ வருமோ' என்று எக்ஸாம் ரிசல்ட் போல காக்க வேண்டியிருந்தது.

குமுதத்தின் எண்ணமே வேறு...அங்கு போய் "பாஸிட்டிவ் பாயிண்ட் இருக்கா?" என்று கேட்டால், "ப்ரிண்டிங்கில் இருக்கு. மூணு நாள்ல வரும்" என்றார்கள் இறுக்கமாக. கேள்விப்படாத தலைப்புகளை வைத்துக்கொண்டிருந்தார்கள். பிரபலமாகாதவைகள் காட்சியில் இருந்தால் பிரபலமாகிவிடும் என்ற வியாபார கணக்கு, தப்பாகிவிட்டது. Hope they would recognize their negative point...

"எப்படியெல்லாம் இருந்த குமுதம்..." என்ற வாசகர்களின் பெருமூச்சுதான் கடைமுழுவதும். ("குமுதக்குதிரை ரேஸுக்கு எப்போ வரப்போகுது")

மற்ற நண்பர்கள் சொன்னதுபோல, சில்லறையின்றி சில இடங்களில் வாங்கமுடியவில்லை...இந்த சில்லறை(யில்லா?) பிரச்சனைக்குத்தீர்வு, கடனட்டைதான்...

என்னைப்போன்ற கடனட்டையில்லாத வாசகர்களுக்கும் உதவுகிற வகையில் நூல்களின் விலையை(தள்ளுபடிக்கப்புறம்) roundoff செய்துதந்தால் நன்றாகயிருக்கும்... :-)

ஆங்...அப்புறம்...இவ்ளோ பெரிய (மைதானம் கொண்ட) 'காயிதே'யை விட்டுவிட்டு, வேறு எங்கு நடத்தமுடியும் என்று நினைக்கிறீர்கள்...?

கடனும், கட்டைவண்டியும்...

பயங்கர சலம்பல் பேர்வழியான எங்கள் நண்பனின், 'ஊருக்கு வழியனுப்பும்' ஸ்டைலே தனி.

ஒரு தரம், வேறொரு நண்பனின் send off-க்கு எழும்பூர் போயிருந்தோம். பஸ்ஸில் ஏறியமர்ந்தவனிடம் சத்தமாக இப்படி சொன்னான்..."டேய் மச்சான்...ஊரில் நம்ம ராமசாமி பயபுள்ளட்ட 1-ணே கால் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன்.வட்டியோட சேர்த்து 2 ரூபாய் கேப்பான்...ஏமாந்திடாத...அப்புறம் குப்பன் கிட்ட சொல்லிருக்கேன். அவன் உன்னை கட்டைவண்டியில் வந்து 'பிக்கப்' பண்ணிப்பான்...",

எல்லோரும் பார்த்தார்கள். கூனிக்குறுகிப்போய் பஸ்ஸுக்குள் மறைந்துகொண்டான் ஊருக்குப்போகிறவன்.

வெகுசீக்கிரத்திலேயே பதிலடி கிடைத்தது.

நண்பர்கள் கும்பலாக திருச்சிக்கு கிளம்பினோம்...send off கொடுக்க இவனும் வந்திருந்தான்.

ரயிலில் ஏறியதும், எங்களுடன் கிளம்பிய நண்பன் ஒருவன் இவனைப்பார்த்து சத்தமாக இப்படி சொன்னான்...

"டேய் மச்சான்...போலீஸ் நடமாட்டம் அதிகமாயிடுச்சு. நம்மளது, பகல்ல செய்யிற பிஸினஸ் இல்ல...மாட்டிக்காத...ஜாக்கிரதையா இருந்துக்கோ..."

இவன் ஓடி ஒளிய, இடம் தேடினான்...

விக்ரோம்...வாங்குறோம்...

என் பொறியியல் காலத்தில், விக்ரம் என்ற வகுப்புத்தோழனை இப்படித்தான் கூப்பிடுவார்கள்... (வகுப்பிலிருந்தாலும்)

"விக்ரோம்... விக்ரோம்..."('விக்ரம்' படத்தில் வருமே ஒரு பாடல்)

இன்னொரு பக்கமிருந்து இப்படி பதில்பாட்டு வரும், "வாங்குறோம்...வாங்குறோம்..."

ஆசிரியன் என்பவன்...

ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு என் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சில விஷயங்கள் அடிக்கடி சொல்வார்...

"a Teacher must know...
Something about Everything and
Everything about Something..."
(இதில் நான் எந்த வகை?)

மேலும்... "a teacher must encourage but not discourage...

Encourage-னா 'ஊக்கு' விக்கிறது, Discourage-னா 'பின்'வாங்குறது..."

குடுகுடு...தர்ர்ர்ர்றேன்

ஒரு தவளை, இன்னொரு தவளைக்கு கடன் கொடுத்திருந்தது....


கொடுத்த கடனை திரும்பக்கேட்டது இப்படி...

"குடுகுடுகுடு குடுகுடு குடுகுடுகுடு..."


கடன் வாங்கியிருந்த மற்றொரு தவளை சொன்னது, "தர்ர்ர்ர்றேன்...தர்ர்ர்ர்ர்ர்ர்றேன்..."

- அடிக்கடி மிமிக்ரி பண்ணிக்காட்டும், எங்கள் நண்பரின் வித்தை இது...

டெஸ்டும், மாட்சும் !!!

அடுத்தநாள் மிக முக்கியமான பரீட்சை...

இன்று மாலையிலிருந்து டிவியில், இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்து, 'மேன் ஆப் த மேட்ச்' கொடுக்கிறவரை பார்த்தாச்சு...

இரவு 11 மணி. எப்படி படிப்பது அடுத்த நாள் பரீட்சைக்கு?

"ஏண்டா கவலப்பட்ற? இருக்கவே இருக்கு பிட்டு. டேய் மச்சான் அந்த 'மர ஸ்கேலை' எடுத்தா?" .
மர ஸ்கேலில் எல்லா பதில்களும் இடம்பெயர்ந்தன...

"மச்சான் நீதான் முன்னால இருக்க. நீயே இதை வச்சுக்க. பரீட்சை ஆரம்பம் ஆனதும் அப்படியே எல்லோரும் எழுதவேண்டியதுதான். என்ன சரியா?"

ஆனால், விதி அவர்களுடைய விஷயத்தில், 'பிட்ச் போட்டு' விளையாடியது.

முன்னால் இருக்கிறவனோடு அந்த காலின் நம்பர் முடிந்து, மீதி இருக்கிறவர்களையெல்லாம் அடுத்த அறையில் போட்டுவிட்டார்கள்...

இவர்களுக்கெல்லாம் ஒரே குமைச்சல்...("சே எல்லா பிட்டும் அவன்ட்ட மாட்டிக்கிச்சே?")

எல்லாம் முடிந்து வெளியே வந்ததும், அவனைப்பார்த்து, (வயிற்றெறிச்சலுடன்) "டேய் ஒரு கலக்குகலக்கிருப்பியே?"

"எங்க....?அதான் எல்லாத்தையும் ரூம்லயே மறந்து வச்சிட்டுவந்திட்டனே !!!" என்றான் நொந்துபோய்.

"ஏன் லேட்டு?"

மூன்றாம் வருட பொறியியல் படிப்பின்போது,
ஒரு நாள் வகுப்பிற்கு ரொம்ப லேட்டாக வந்து சேர்ந்தான் என் நண்பன்
(படு வெகுளியான இவனை யாராவது கோபமாக திட்டினால் சிரித்துவிடுவான். இவன் மற்றவர்களிடம் கோபப்பட்டு பார்த்ததில்லை).

அப்பொழுது, கணிதப்பேராசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.
தாமதமாக வந்தவனைக் கண்டதும் பயங்கரக்கோபம்...
"ஏன் லேட்டு?" என்றார் கோபத்துடன்.

"அதுவா சார், நான் ஸ்டாப்பிங்க்கு வந்துட்டேன் சார்.
பஸ்ல ஒரே கூட்டம். தொங்கிகிட்டு வந்தாங்க்ய.
ஃப்ரீயா வந்த பஸ்ல பொறுமையா வந்தேன். அதான் லேட்டாயிடுச்சு" என்றான் அப்பாவியாக.

ஆசிரியருக்கு கோபம் தலைக்கேறியது.
"அப்படீன்னா இங்க இருக்கவனெல்லாம் இங்கேயே குடிசை போட்டு தங்கி, காலைல எந்திரிச்சு வர்றானுங்களோ?"

இப்படி அவர் கேட்டதற்கு...

அவன் சிரித்தேவிட்டான்...

காக்டெய்ல்

டீக்குடித்துக்கொண்டிருந்த நண்பனுக்கு திடீர் சந்தேகம்,
"டேய், 'காக்டெய்ல்'ன்னா என்னடா?"

பெப்ஸி குடித்துக்கொண்டிருந்த மற்றொருவன், "இதுதான்டா, 'காக்டெய்ல்'" என்றபடி, பெப்ஸியை டீயில் ஊற்றிவிட்டான்.

பால் திரிந்து, டீ பாழாகியது...(கவித கவித...)

வைகைப்புயலும் பேப்பர்திருத்துதலும்...

வைகைப்புயல் வடிவேலு, ஆசிரியராக இருக்கும்போது, 'மஜாவாக' விடைத்தாள்கள் திருத்தப்போனார்.

விடைத்தாள்களில், பக்கம் பக்கமாக கதை எழுதிவைத்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார் வடிவேலு,

"அங்க வந்தேன் டெர்ம் டெஸ்ட்ல கதையடிச்சு வச்சிருந்திங்க, போனாபோகுதுனு பெருந்தன்மையா பாஸ்போட்டுட்டு வந்தேன். இப்போ யுனிவர்ஸிட்டி எக்ஸாம்லயே பக்கம்பக்கமா எழுதிவச்சிருக்கேனா,

புரிஞ்சுபோச்சுடா புரிஞ்சுபோச்சு. இனிமே 'யாரையும் ஃபெயில் ஆக்க மாட்டேன்'னு எங்க சீஃப்கிட்ட சத்தியம் பண்ணதை எப்படியோ ரகசியமா தெரிஞ்சுவச்சுக்கிட்டுதானே இப்படி எழுதிவச்சுருக்கீங்க?

சத்தியத்தை இப்பவே கான்சல் பண்ணிபுடுவேன்டா...கான்சல் பண்ணிபுடுதேன்.

ஏழுவயசு புள்ளையா இருந்தபோது எங்கப்பன்ட்ட 'எக்ஸாம்னா என்னப்பா?'னு ஒரு ஆர்வத்துல கேட்டேன்...

உடனே, 'சிவனே'னு ரோட்ல போனவனை உட்காரவச்சு, எக்ஸாம் எழுதவச்சு,அதை திருத்தி, 'இதாண்டா மவனே எக்ஸாம்'னாரு...அப்பேற்பட்ட எச்சீகேட்டட் ஃபேமிலியில பிறந்த எச்சீகேட்டட் ஆளுக்கு பிறந்த எச்சீகேட்டட் ஆளுடா இந்த புலிப்பாண்டி..."

"Key கொடுடா..."

அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த இரவில், தாமதமாக வந்து சேர்ந்தான் அறை நண்பன்...

மாடி ரூம் பூட்டியிருந்தது...
கீழே படுத்திருந்தவர்களிடம் வந்து, "டேய் மச்சான், 'கீ' கொடுடா மாடிக்கு போகணும்" என்று நச்சரித்தான்.

தூக்கக்கலக்கத்தில், ஒருத்தன் சொன்னான், "த சும்மா 'கீ கொடு கீ கொடு'ங்காத. 'கீ கொடுத்து' மாடிக்குப் போறதுக்கு நீ என்ன பொம்மையா?"

இன்னொரு குரலும் கேட்டது,
"டேய் மச்சான்...எந்திரிக்கிற நிலமையில இல்ல...ஒண்ணு நீயா கீ கொடுத்துக்கோ...இல்ல, பேட்டரி வாங்கிப்போட்டுகிட்டு மாடிக்கு போய்க்கோ"

கடுக்காய் வைத்தியர்

புகழ்பெற்ற வைத்தியர் ஒருவருக்கு, தன் முட்டாள் மகனின் முன்னேற்றத்தைப்பற்றி பெரிய கவலை...

அதனாலேயே ஒருநாள் உயிர் துறந்துவிட்டார்.

தந்தையின் காலத்திற்குப்பிறகு, 'வைத்தியம் பார்க்கப்படும்' என்று அறிவித்துக்கொண்டான்...

ஒருத்தன் வந்தான்.காணாமல்போன தன் விலையுயர்ந்த நகை திரும்பக்கிடைக்க ஒரு வைத்தியம் சொல்லுமாறு கேட்டான்.

"4 கடுக்காய்கள் சாப்பிடு! நகை கிடைக்கும்" என்றான் தயக்கமில்லாமல்.

4 கடுக்காய்கள் சாப்பிட்டவனுக்கு வயிறு தாங்காமல் பேதியாயிற்று...

அடிக்கடி குளத்தங்கரைக்கு போய் தளர்ந்து அங்கேயே படுத்துவிட்டான்...காற்றில் அசைந்த மரத்தின் உச்சியிலிருந்து, சிறிய துணிமுடிப்பு ஒன்று கீழே விழுந்தது...எடுத்துப்பார்த்தால் தொலைந்த நகை !

கடுக்காய் வைத்தியர் புகழ் பரவிற்று...

அந்நாட்டு மகாராணியார் ஒரு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ("எப்பொழுதும் அந்தப்புரத்திலேயே இருக்கும் மன்னர் திரும்பிவரவேண்டும்")

"6 கடுக்காய் கொடுங்கள்" என்று தனக்குத் தெரிந்த வைத்தியத்தை சொன்னார் வைத்தியர்...

உள்ளே போன கடுக்காய்கள் சும்மா இருக்குமா?
மன்னருக்கு பயங்கர பேதியாகி, அரண்மனையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
'என்ன ஆச்சோ?' என்று பதற்றத்துடன் பணிவிடை செய்த மனைவியின் அன்பைப்புரிந்துகொண்டார்.

தன் திறமையால்(?) அரண்மனை வைத்தியர் ஆகவும் ஆனார்.

சிலநாட்களுக்குப்பிறகு, மன்னர் கவலையுடன் இருப்பதைக்கண்ட மகாராணி, 'என்ன ஆச்சு?' என்று வினவ, "பக்கத்து நாட்டு மன்னன் பெரும்படையுடன் போருக்கு வருகிறான். சிறுசைனியத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என வருந்தினார்.

"இதுக்குப்போயா கவலைப்படுவது? நம் அரண்மனை வைத்தியரிடம் சொன்னால் ஏதாவது செய்வாரில்லையா?"

"நம் படையிலுள்ள அத்தனை பேருக்கும் தலா 10 கடுக்காய்கள் கொடுங்கள்" என்றார் வைத்தியர்...

ஒற்றர் மூலம் இதையறிந்த பக்கத்துநாட்டு மன்னன் தன் சைனியத்திற்கு தலா 20 கடுக்காய்கள் தர உத்திரவிட்டான்.

20 கடுக்காய்கள், 10 கடுக்காய்களை விட அதிகமாக வேலையைக்காட்டியது.

போரில் அண்டைநாட்டு மன்னன் தோற்றோடினான்.

கடுக்காய் வைத்தியருக்கு விலையுயர்ந்த வெகுமதிகள் தரப்பட்டன...

தனக்குத் தெரிந்த எல்லா மருத்துவத்தையும் சொல்லிவிட்டவருக்கு, இப்பொழுதுதான் பயங்கர பயம்.

தன் வீட்டுக்கு தீ வைத்தார். ("மருத்துவக்குறிப்புகள் எல்லாம் சாம்பாலாகிவிட்டன. இனி என்ன செய்யபோகிறேன்?")

மன்னர் அவருக்கு ஆறுதல் சொல்லி, அவர் வாழ்நாளுக்கு தேவையான வெகுமதிகள் கொடுத்து உதவிசெய்தார்.

**************

கதைசொல்லி: ஆகவே மக்களே...இதன் நீதி என்னவென்றால்...

பொதுஜனம்: 'கடுக்காயை மறக்கமுடியாது'. அதானே?

க.சொ: இல்லப்பா. 'வாழ்க்கையில தன்னம்பிக்கை முக்கியம்' அதான் நீதி.

பொ.ஜ: யே என்னப்பா இவன் இப்படி பழம் ஆகிட்டான்?

BAPASI 29வது புத்தகக்காட்சி - ஒரு திருவிழா

எல்லோருக்கும் சிற்றிலக்கியங்கள் பற்றி ஒரு awareness கிடைத்திருப்பது, ஆரோக்கியமான விஷயம்.

புத்தகப்பிரியர்கள் அதிகரிப்பதில் லாபம் எல்லோருக்கும்தான். மொழிக்கு உட்பட...
எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், மிகக்குறைந்த விலையில் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவைகளை வெளியிட்டிருக்கிறார்கள். (கையடக்க பொ.செ. பதிப்புகளில், சுருக்கியிருப்பார்களோ?) வரவேற்கவேண்டியது.

எப்பொழுதும் இல்லாமல், திடீர் புகழ்பெற்ற சில புத்தகங்களையும் பார்க்கமுடிகிறது. (சுந்தரகாண்டம், சூ|டோ|கூ, Albert Einstein...)

இது தவிர 'உன் வாழ்வு உன் கையில்' என்பது போன்ற சுயமுன்னேற்றநூல்கள், குழந்தைபுத்தகங்கள், சமையல் புத்தகங்கள், நிறைய இலக்கிய நூல்கள், ஒரு பெரிய திருவிழாதான் அது.

மூலிகை மருத்துவநூல்கள் வாசிக்கும்போது, கடுக்காய் கதை ஒன்று ஞாபகம் வந்தது(அடுத்த பதிவில் அதைத்தான் சொல்லபோகிறேன்).

வழக்கமாக, நிறைய மி.மு.ம.க்களை(VIP தமிழாக்கம்) இங்கே பார்க்கலாம்.

சென்ற தடவை, (சமீபத்தில் மறைந்த) சுரா அவர்கள், சுகிசிவம்,கனிமொழி, ருத்ரன், 'நக்கீரன்' கோபால், டைரக்டர் விக்ரமன் ஆகியோர் இருந்தார்கள்.

அப்பொழுது, அப்பாவிற்காக வாங்கிய 'நெடுங்குருதி'யில் கையெழுத்திட்டுத்தந்தார் மனுஷ்யபுத்ரன்.

இன்று மனுஷ்யபுத்ரனையும், பத்ரி(கிழக்கு பதிப்பகம்)யையும் பார்க்கமுடிந்தது.

'காயிதே'க்கு வெளியில் பழைய புத்தகங்கள் கடை 'காயுமே' என்று நினைத்தது தப்பு...பயங்கர கூட்டம் அங்கேயும்...

செல்போன்கள் ஜாக்கிரதை...

செல்போன்கள் அதிகம் அறிமுகமாகாத காலக்கட்டம் அது.
சண்முகா வளாகத்தில் யாராவது செல்பேசினால்,
பாலிடெக்னிக் மாணவர்களின் கவலை இதுதான்...

"அய்யோ, ஆரு பெத்த புள்ளையோ தனியா பேசிச்சிரிச்சிக்கிட்டிருக்கு..."

ஒரு மன்னரின் கவலை...

ஒரு மன்னர் இருந்தார்.
அவருக்கு தீராத மனக்கவலை ஒன்று இருந்தது.
அது அவருடைய வழுக்கைத்தலை பற்றியது.
என்னசெய்தும் தலையில் முடி வளரமாட்டேன் என்கிறது...

அரண்மனை வைத்தியர்களுக்கெல்லாம் கெடு வைத்தார்...
("இன்னும் ஒரு மாதத்தில் மருந்து கண்டுபிடித்து கொண்டுவராவிட்டால் சிறைதண்டனை !!!")

எல்லா மருத்துவர்களும் கலங்கிக்கொண்டிருந்தபோது, வயதான ஒருவர் முன்வந்தார், "மன்னரிடம் என்னைக்கூட்டி போங்கள்"

மன்னரிடம் ஒரு தைலத்தை கொடுத்தார் பெரியவர்...
"மன்னா...இது மிகவும் சக்திவாய்ந்த தைலம்...இதை தினமும் காலையில் தலையில் தடவிவந்தால், கேசம் வளர்ந்துவிடும். ஆனால் ஒரு நிபந்தனை...இதை உபயோகப்படுத்தும்போது, எக்காரணம் கொண்டும் 'தேங்காயை' நினைத்து விடக்கூடாது!!!"

'நாம் என்றைக்கு 'தேங்காயை' நினைத்திருக்கிறோம் இன்றைக்குமட்டும் திடீரென நினைப்பதற்கு?'

மறுநாள்...

தைலத்தை கையில் எடுத்தார் மன்னர்..."மிக முக்கியம்...தேங்காயை நினைத்துக்கொண்டால் மருந்து வேலை செய்யாது..."

"ஆ...ஐயோ நினைத்துவிட்டேனே...வேறு வழியில்லை. நாளைக்குத்தான் பயன்படுத்தவேண்டும் !!!"

அடுத்தநாள்...

"இன்றாவது தேங்காயை நினைக்கக்கூடாது...அடச்சே!!!"
இவ்வாறே பலநாள் தொடர்ந்தது...

சற்றுநாளைக்கெல்லாம் 'தேங்காய் எண்ணை, இளநீர்,தேங்காய் பர்பி எல்லாம் கூட' ஞாபகத்திற்கு வந்தது.

தேங்காயைக் கண்டாலே வெறுக்க ஆரம்பித்தார் மன்னர். திடீரென ஒரு நாள்..."ஏன் இந்தத் தலைக்கு என்ன? தேங்காயை விட நன்றாகத்தானே இருக்கிறது ???!!!" என்று அவர் கருதினார்.

இது தோன்றியதற்குப்பிறகு மன்னரின் கவலை மறைந்தது.

(Courtesy: The Hindu - Young World)
* * * * * *

கதைசொல்லி: ஆகவே இதன் நீதி என்னவென்றால்...
பொதுஜனம்: என்ன...?
க.சொ: எப்பேற்பட்ட ஆளாக இருந்தாலும்...
பொ.ஜ: இருந்தாலும்...?
க.சொ: என்ன முயற்சி செய்தாலும்...
பொ.ஜ: செய்தாலும்...?
க.சொ: தேங்காயை மறக்கமுடியாது !!!
பொ.ஜ: புய்யாங்க...நீயும் உன் நீதியும்!!!

விடைத்தாள்கள் திருத்தப்போகும் இடத்தில்...

விடைத்தாள்கள் திருத்தும்பணிக்காக, சென்னை பொறியியல் ஆசிரியப்பெருமக்கள் திருவிழா போல வந்திருந்தார்கள்.

டூவீலரில் வருகிற ஒரு நண்பர், மிகத்தாமதமாக வந்துசேர்ந்தார்.

"கெல்மெட் போட்டிருந்ததால இடம் தெரியாம (பழைய மகாபலிபுர சாலையில்) ரொம்ப தூரம் போயிட்டேன்"

கேட்டுக்கொண்டிருந்த நண்பர், ஆறுதல் சொல்கிறவாறு இப்படி சொன்னார்... "பார்த்துங்க...இப்பல்லாம் பஸ்ல போறவங்ககூட கெல்மெட் போட்டுக்கிறாங்களாம்"

("அதான் காலேஜ் வாசல்ல, அம்மாம்பெரிய ஆர்ச் கட்டிவச்சிருக்காங்கல்ல?")

நிஜ ஸ்டால்

சமீபத்தில், அயோத்தியா மண்டபம் பக்கம் நானும் மற்ற இரண்டு நண்பர்களும் போயிருந்தோம்.

ஒரு நண்பர் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

'என்ன?' என்றபோது,
"இங்கு ஒரு போளி ஸ்டால், ரொம்ப நல்லா இருக்கும். அதான் தேடினேன்"

இன்னொரு நண்பர் சரியான ரவுசு பார்ட்டி...உடனே சொன்னார்,"யப்பா, ஏதாவது 'நிஜ' ஸ்டாலுக்குக் கூட்டிட்டுப்போங்கப்பா"

நன்றி தினமலர்...

சென்ற சனிக்கிழமை தினமலர் 'டாட்காமில்'(31/12/05) தமிழ்ப்பூ பற்றி வந்திருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள் (காசி, சந்தோஷ்). இதில் உள்ள ஒரு சிறு சம்பவத்துடன் முகவரியைத் தந்திருந்தார்கள்...

ரொம்ப சந்தோஷம்...

இந்த ப்ளாக்கின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிற என் நண்பர்களுக்கும்...

அனைவருக்கும் என் நன்றி...