கண்ணுக்குத் தெரியாத பகைவன்

என்.எஸ்.எஸ் முகாமின்போது, ஒரு பேராசிரிய நண்பர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்திருக்கிறது...

"ஒரு மொபைல் போன் வைத்திருந்தாலே அந்த கதிர்வீச்சு, பாதிப்பேற்படுத்தும்னு சொல்றாங்க. செல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட இந்தக்காலத்தில், நிறைய கதிர்வீச்சுக்கள் மனிதனை பாதிக்காதா?" இதுதான் அவருடைய சந்தேகம்...

"உடல் உபாதைகள் ஏதும் தோன்ற வாய்ப்பில்லை... மனநிலையில் சிறுசிறு மாற்றம் நிகழ வாய்ப்புண்டு", என்று அப்போதைக்கு சொல்லிவைத்தேன்...

இன்று(5/3/06), தி கிண்டுவில் ஆனந்த் பார்த்தசாரதி ஒரு தகவல் எழுதியிருந்தார்... ஈ.எம்.ஐ.ஸி(Society of ElectroMagnetic Interference and Compatibility) என்ற வல்லுனர்களின் கருத்தரங்கில், 'ரேடியோ கதிர்வீச்சினால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?' என்று விவாதித்திருக்கிறார்கள்.

நீர், காற்று, ஒலி மாசுபடுவதுபோல இதுவும் ஒரு மாசுசீர்கேடுதான்(Radiation Pollution) என்று ஒரு கருத்தையும் சொல்கிறார்கள்.

Cogent என்ற தில்லி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, "இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அதிர்வெண் அளவு - ஒரு சதுர மீட்டருக்கு 10 மைக்ரோவாட்ஸ் ஆகும். ஆனால், இந்த அளவே சிறுசிறு பாதிப்பை ஏற்படுத்துகிறது..."

உதாரணத்திற்கு, தூக்கத்திலிருந்து திடீர் என எழுந்துவிடுதல் பத்து பேர்களில் ஒருவருக்கு ஏற்படுகிற பொதுவான பாதிப்பு.

மேலும், கதிர்கசிவினால் ஏற்படும் பாதிப்புகள்-பசியின்மை, தூக்கமிடர்பாடு, மிகுந்த எரிச்சல்...

இது பெரும்பாலும் மனநிலையோடு தொடர்புடையதாக இருக்கிறது... ஏனெனில், இந்த செயற்கை அலைகள், மனிதனின் (இயற்கையான)எண்ண அலைகளோடு ஒத்துவமையாக இயங்குவதுதான் காரணம் (closer to natural resonance)...

மொபைல் கதிர்வீச்சாவது பரவாயில்லை... எப்.எம் அலைகளால் ஏற்படும் கதிர்வீச்சில் சீர்கேடு இன்னும் அதிகம். மொபைல் கதிர்வீச்சை விட 4 அல்லது 5 மடங்கு பாதிப்பு, எப்.எம் ரேடியோவின் கதிர்வீச்சினால் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது...

காரணம்...எப்.எம் ரேடியோக்கள் இயக்கப்படுவது, 30 மெகாகெர்ட்ஸிருந்து 300 மெகாகெர்ட்ஸ் வரையுள்ள அதிர்வெண் பட்டையில். (மனித எண்ண அலைகளின் அதிர்வெண்ணுக்கு ஒத்தது)

ஆனால், மொபைல் போனில் இரண்டே அதிர்வெண்களில்தான் இயக்கப்படுகிறது.(இந்தியாவில் 900 மெகாகெர்ட்ஸ் மற்றும் 1800 மெகாகெர்ட்ஸ்). அதனால், எப்.எம் ரேடியோ கதிர்வீச்சின் பாதிப்புதான் அதிகம்...

'செம HOT மச்சி' என்று விஷயம் இல்லாமலா சொல்லுவார்கள்...

'இங்கே இதைப்பற்றி இன்னும் படிங்க படிங்க படிச்சிகிட்டேயிருங்க'

மனிதன்பாதி...(கிளைமாக்ஸ்)-(அறிவியல் தொடர்கதை)

7

கோர்ட்...

குற்றவாளிக்கூண்டில் சக்ரவர்த்தி...

நீதிபதி, "எல்லா வாதங்களையும் சாட்சியங்களையும் வைத்துப்பார்க்கும்போது, குற்றவாளியாக இங்கு நிற்கும் சக்ரவர்த்தி என்ற சிதம்பரம்தான் கொலையைச் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

ஆனால், குற்றவாளி இதை சுயநினைவுடன் செய்யவில்லை என்றும் தெரியவந்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்" .

"நான் ஒரு கருத்தைச் சொல்லவிரும்புகிறேன் நீதிபதி அவர்களே" அரசுத்தரப்பு வக்கீல் எழுந்தார்.

"கடும் விசாரணைக்குப்பிறகும் இந்த சக்ரவர்த்தியிடமிருந்து உண்மை வெளிவரவில்லை என்பதால்தான் சந்தேகப்பட்டு மருத்துவசோதனை செய்ய கோர்ட் உத்திரவிட்டது. அதில் இவர் உயிரற்றவர் எனவும், எதையும் தன்னிலையிலிருந்து செய்யவில்லை எனவும் தெரியவந்திருக்கும்போது, இதற்குமேல் இவரிடம் விசாரணை செய்து பயனேயில்லை...

இவரை ஏவிவிட்டது யார் என்பதை வேறுவகையில்தான் அறியவேண்டும் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்"

"அப்படியென்றால் உண்மையான குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது?"

"அதை நான் சொல்கிறேன்" என்று ஒரு புதிய குரல் கேட்டு எல்லோரும் திரும்பினார்கள்...

8
ஒரு அறுபது எழுபது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் கோர்ட் வாசலில் நின்றுகொண்டிருந்தார்...

நீதிபதி வியந்தவாறே, "எதுவாயினும் சாட்சிகூண்டுக்கு வந்து சொல்லவும்"

சாட்சிக்கூண்டுக்கு வந்தவர், உறுதிமொழி கொடுத்துவிட்டு, "என் பெயர் இராமநாதன். பயோ-டெக்னாலஜியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பவன்.
கணினியின் அறிவை மனிதன் அளவுக்கு மாற்றிக்கொண்டிருக்கிற காலத்தில், ஒரு சக்தி வாய்ந்த கணினியை மனிதனுக்குள் புகுத்தி அவன் வாழ்நாளையும் செயல்திறனையும் அதிகரிக்க வைக்கமுடியுமா என்பதை திவீரமாக ஆராய்ந்துகொண்டிருப்பவன்.

முழுவதும் வெற்றியடைந்த நிலையில் நான் சில சிக்கல்களை சந்திக்கநேர்ந்தது...

நிறைய சமூகவிரோத சக்திகள் என்னை மிரட்டி என் ஆராய்ச்சி முடிவுகளை கைப்பற்றி ஆதாயம் அடைய பார்த்தார்கள்... அதில் ஒருவர்தான் கொலைசெய்யப்பட்ட வேலுச்சாமி.

எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்...

ஆராய்ச்சி முடிவுகளை சொல்லவேயில்லை என்ற கோபத்தில், என் மகள் நந்தினியையும் அவளுடைய கணவனான இந்த சிதம்பரத்தையும் ஒரு லாரி விபத்து போல ஏற்பாடு செய்து கொலை செய்துவிட்டார்கள்...

என்மேல் உள்ள கோபத்தில் இரு அப்பாவிகளை கொன்றதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை... இந்த அப்பாவிகளின் கொலைக்கு வஞ்சம் தீர்க்கத்தயாரானேன்...

ஆமாம்...

கொலையுண்டதற்கு பின், சுத்தமாக செயலற்று இருந்த என் மருமகன் சிதம்பரத்தின் மூளை ந்யூரான்களில் கட்டளைகளுக்கு ஏற்ப சின்னச்சின்ன மின்னதிர்வுகளை உள்ளீடாகச் செலுத்தினேன்... மிகுந்த பிரயாசைக்குப்பிறகு, மூளை செயல்படத்தொடங்கியது... மூளையிலிருந்து தொடங்கும் நரம்புமண்டலம் முழுவதையும் செயற்கை இழைகளால், பிண்ணிபிணைத்தால் ஒரு மனிதனுக்கு உயிர்கொடுக்கமுடியுமோ என்று தோன்றியது...அதில் செய்துபார்த்ததில் கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது...
என் வாழ்நாள் லட்சியமான Bio-machines என்ற 'மனிதன்பாதி-கணினிபாதி' தொழில்நுட்பத்தில் நான் வெற்றி கண்டேன்...

இப்படி படிப்படியாக மாற்றி சிதம்பரம் எடுத்த அவதாரம்தான் - சக்ரவர்த்தி.
வேலுச்சாமியைக் கொல்ல சக்ரவர்த்திக்கு கட்டளை எழுதியவன் நான்தான். அதுமட்டுமல்ல, அதற்கு உடந்தையாக இருந்த ஒரு லாரி டிரைவரையும் கொன்றதும் நான்தான்"

சற்றுநேரத்திற்கு, அமைதியானார்... கண்களில் கண்ணீர்...

"ஒரு விஞ்ஞானி துறவி போன்றவன்...அவனுடைய அறிவால் சமூகத்திற்கு நன்மை கிடைக்கவேண்டும்... ஆனால், நான் என் நிலையை மறந்து, எப்பேற்பட்ட ஒரு இழிவான செயலைச் செய்திருக்கிறேன் என்பது என் கோபம் போனபின் தான் புரிகிறது...

அதனால்தான்...என் முடிவை நானே தேடிக்கொள்கிறேன்"

என்று சடாரென கூண்டுக்குள் சரிந்து விழுந்தார் நிரந்தரமாக...

(முடிந்தது)

மனிதன்பாதி...6-(அறிவியல் தொடர்கதை)

ஆஸ்பத்திரியின் கிளிசரின் வாசனை...

"நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. நாங்க அடிச்ச அடிக்கு இவன் ஜாதகத்தையே சொல்லிருக்கணும்...ஒரு சத்தம் இல்ல...ரத்தம் இல்ல... விசித்திரமான ஆளா இருக்கான்"

டாக்டர் சக்ரவர்த்தியை சோதித்தார்...முகம் மாறியது...
"கொஞ்சம் வெளில இருக்கீங்களா இன்ஸ்பெக்டர்"

வெளியில் வந்தார்...

சுமார் ஒரு மணிநேரம் கழித்து...

அவசரமாக நர்ஸ் ஓடிவந்தாள்.

முகத்தில் பதட்டம்...

"சார்...உங்கள டாக்டர் உடனே கூப்பிட்டார்."

உள்ளே அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

டாக்டர் முகம் இறுக்கமாகிருந்தது...

"இன்ஸ்பெக்டர்...நான் இப்போ சொல்லப்போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்...

இவர்... ரொம்ப நாளா உயிரே இல்லாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கார்ங்கிறது உங்களுக்கு தெரியுமா...?"

(நாளைக்கு கிளைமாக்ஸ்)

மனிதன்பாதி...5-(அறிவியல் தொடர்கதை)

போலீஸ் ஸ்டேசனில்...

கமிஷனரை சுற்றி மற்ற போலீஸ்காரர்கள் கவலையுடன் நின்றுகொண்டிருந்தார்கள்...

"நல்லா விசாரிச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"

"விசாரிச்சுட்டேன் சார். வாயே திறக்கமாட்டேங்கிறான்"

"ஏதும் தீவிரவாதியா இருப்பானோ?"

"இல்லீங்க சார்.அழுத்தக்காரனா தான் இருக்கான். ஆனால், தீவிரவாதி மாதிரி தெரியல..."

"நாமளா முடிவு செய்யமுடியாது இன்ஸ்பெக்டர். இன்னும் முயற்சி பண்ணிப்பாருங்க.எதுவும் சொல்லலைனா ரெட்ரூம் ட்ரீட்மெண்ட் தான் பண்ணணும். கோர்ட்டிலிருந்தும் அனுமதி கிடைச்சாச்சு. என்ன சொல்றீங்க?" என எழுந்தார் கமிஷனர்.

"யெஸ் சார்" விறைப்பாக ஒரு சல்யூட் போட்டார் இன்ஸ்பெக்டர்.

ஆனால், சக்ரவர்த்தி அசரவில்லை... அடித்துஅடித்து காவல் அதிகாரிகளின் கைதான் வலித்தது...

இன்ஸ்பெக்டர் யோசித்தார்..."இவ்ளோ அடி அடிச்சிருக்கோம்...ஒரு கதறல்...ஒரு இரத்தம்...ம்கூம்"

திடீரென அவருக்கு ஒன்று தோன்றியது, "ஒருவேளை அப்படி இருக்குமோ?"

போனில் சிற்சில எண்களைத் தட்ட கமிஷனர் தொடர்பில் வந்தார்...

சற்றுநேரத்திற்கெல்லாம் அவர் சக்ரவர்த்தியை அழைத்துப்போனது...

மருத்துவமனைக்கு...

(அடுத்த பதிவில் தொடர்கிறது)

மனிதன்பாதி...4-(அறிவியல் தொடர்கதை)

அதிகாலை நேரம்...

தேவ் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்...

'காலைக்காபியுடன் பேப்பர் படிப்பது எவ்வளவு சுகம்?'

தொழிலதிபர் வேலுச்சாமி கொலையுண்டதுபற்றி தலைப்புசெய்தி வெளியாகியிருந்தது...
முதல்பக்கம் தாண்டி அடுத்தபக்கம் ஒரு செய்தி கவனத்தை கவர்ந்தது. அது ஒரு லாரி ட்ரைவரின் மர்மக்கொலை பற்றியது...

கூர்ந்து கவனித்தால்...
தேவ்விற்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது...
அன்று கோவிலில் பார்த்த அதே ஆள்...கொடூரமுறையில் கொலையாகி...

திடீரென வாசலில் அழுத்தமான வாகன ப்ரேக் சத்தம்...தொடர்ந்து பூட்ஸ்களின் சத்தம்...

நொடியில் ரூமிற்குள் சிற்சில காக்கிச்சட்டைக்காரர்கள் தோன்றினார்கள்...

"சார் இங்கே சக்ரவர்த்தி யாருங்க?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"எ...என் ப்ரெண்ட் தான். என்ன விஷயம் சார்?"

"கொஞ்சம் கூப்பிடுறீங்களா?"

அழைத்ததும் சக்ரவர்த்தி வந்தார்.
"யோவ், இவர்தானா பாத்துச்சொல்லு"

அருகில் வந்திருந்த ஆள் "ஆமா சார், இவர்தான் பிறந்தநாள் கிப்ட்டுனு சொல்லி, ஒரு கிப்ட் பாக்ஸை எங்கிட்ட குடுத்து வேலுச்சாமி ஐயாகிட்ட கொடுக்கச்சொன்னார்"

"மிஸ்டர் சக்ரவர்த்தி...இவர் அந்த ஓட்டலில் பணிபுரிகிற ஆள். நீங்கள் செஞ்ச கொலையை கண்ணால் கண்ட முக்கியமான சாட்சி. என்ன போலாமா?" இன்ஸ்பெக்டர் கண்டிப்பான குரலில் கேட்டார்.

மறுவார்த்தை சொல்லாமல் சக்ரவர்த்தி அமைதியாக பின் தொடர்ந்தார்.

(தொடரும் - கிளைமாக்ஸை யூகிக்கமுடிந்தால் உடனே சொல்லுங்களேன்)

மனிதன்பாதி...3-(அறிவியல் தொடர்கதை)

அன்று அந்த நட்சத்திர ஓட்டலில் திருவிழா களைகட்டியிருந்தது.
காரணம்...தொழிலதிபர் வேலுச்சாமியின் பிறந்தநாள்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் காரில் ஏறியமர்ந்தார் வேலுச்சாமி. கேட்-ஐ திறக்க ஆளின்றி டிரைவரே இறங்கிப்போனார்...

"ஐயா...இத உங்ககிட்ட கொடுக்கச்சொன்னாங்க..." என்று ஒருவன் கிப்ட்டை நீட்டினான்.

'யார் அனுப்பிருப்பாங்க?' கிப்ட்டின் முகப்பு லேபிளில் பார்த்தால் 'சிதம்பரம்' என்றிருந்தது...

'எந்த சிதம்பரம்?' என்று திரும்பியவருக்கு அதிர்ச்சி...அங்கே நின்றது சக்ரவர்த்தி...

"ஆ...நீயா?"

அடுத்து சுதாரிப்பதற்குள் கிப்ட்டுக்குள் இருந்த வஸ்து உயிர் பெற்றது...நிமிடநேரத்தில் காரின் உலோகப்பாகங்களுடன் வேலுச்சாமியும் சிதறினார்.

அமைதியாக திரும்பிப்போனார் சக்ரவர்த்தி.

(நாளை தொடரும்)

மனிதன்பாதி...2-(அறிவியல் தொடர்கதை)

ஸ்பென்ஸருக்கு சக்கரவர்த்தியும் தேவ்வும் போயிருந்தார்கள்...

"மிஸ்டர் சிதம்பரம் மிஸ்டர் சிதம்பரம்...கொஞ்சம் நில்லுங்க"

பின்னாலிலிருந்து ஒரு பெண்குரல் கேட்டதும் திரும்பினால், "என்ன சார், பார்த்தும் பாக்காதமாதிரி போறீங்க...என்னைய ஞாபகமிருக்கா?" என்று சக்கரவர்த்தியை நோக்கி வந்துகொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.

"நான் நந்தினியோட ஃப்ரெண்ட் கலா சார். மேரேஜுக்கு கூட வந்திருந்தேனே...."

கலா பேசப்பேச குழப்பமானார் சக்கரவர்த்தி...தேவ்வுக்கும் ஒன்றும் விளங்கவில்லை...
அன்றிரவு தேவ்வுக்கு சுத்தமாக தூக்கம் இல்லை...

'சக்கரவர்த்திக்கு மறுபெயர் சிதம்பரமா? அல்லது சிதம்பரம் என்று இவரைப்போலவே ஒருத்தன் இருக்கிறானா?'
'இவருக்கும் கோவிலில் பார்த்த அந்த லாரிக்காரனுக்கும் என்ன சம்பந்தம்? ஸ்பென்ஸரில் வந்த கலா யார்?'

அவருடைய கேள்விகள் பல பதிலின்றி இருளில் மறைந்தன...

(அடுத்த பதிவில் தொடர்ச்சி)