(50). திருடியவனும், தொலைத்தவனும் (இரட்டைக்கதை)

ஒரு பொருள் காணாமல்போகிறது. அதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் அடுத்து என்ன ஆகிறார்கள்? அந்த இருவரும் தங்களுக்கு நேர்ந்ததை கதையாக்குகிறார்கள்.

'நான்' தொலைத்தவன்

ஸ்சின் நகர்வுக்கு ஏற்றபடி பின்னோக்கி நகர்ந்த மரங்களையும் கட்டிடங்களையும் பார்த்துக்கொண்டே இருந்த மனமும் பழைய நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தது.

நெரிசலில் நகரக்கூட முடியாமல் ஒரே இடத்திலேயே நின்றேன்.

அங்கிங்கு மக்கள் இடம்பெயரும்போது மட்டும், சிறுசிறு இடைவெளிகளில் மெல்லிய காற்றுக்கு விடுதலை கிடைத்தது. வாழ்க்கை பயணமும் இப்படித்தானே, கவலை நெரிசலில் திக்குமுக்காடியிருக்கும்போது அவ்வப்போது இந்த காற்று போல மகிழ்ச்சியும் வீசுகிறது.

அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தது... தன்னிச்சையாக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுபொழுதுதான் உணர்ந்தேன்...'பகீர்' என்றது. மொபைலைக் காணவில்லை...

'அய்யோ, யார் எடுத்திருப்பார்கள்?இல்லை தவறிக்கீழே விழுந்திருந்திருக்குமோ?' கீழே குனிந்து பார்த்தேன்... பார்வையின் எல்லைவரை இல்லை...

சந்தேகத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தேன்... ஒன்றும் நடவாததுபோல அமைதியாக நின்றிருந்தார்கள் அருகிலிருந்தவர்கள். செல் திருடுப்போன என் அதிர்ச்சிக்கும், இவர்களின் ஒன்றும் அறியாத அமைதிக்கும் போர் ஆரம்பித்திருந்தது.

அருகிலிருந்தவரிடம், "சார் ஒரு உதவி... என் செல் தவறி பஸ்சுகுள்ள விழுந்துடுச்சு... ப்ளீஸ் ஒரு ரிங் தர்றீங்களா? நம்பர் சொல்றேன்"

நம்பர் டயல் செய்து பார்த்தபொழுது, "ரிங் போகுதுங்க. நீங்க சைலண்ட்ல வக்கல இல்ல.பஸ்ல இருந்திருந்தா இந்நேரம் சத்தம் வந்திருக்குமே சார். போனை பிக்பாக்கெட் அடிச்சிருக்காங்க சார். போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுங்க. இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது."

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினேன்.

இழப்பு...ஏமாற்றம்...மனமெல்லாம் ஏமாற்றத்தின் காயம்.வாங்கி இரண்டு மாதங்கள்தான் ஆகிறது...வேலை தேடும் விஷயமாக அத்தனை நம்பர்களும் ஈமெயில்களும் அதில்தான் இருந்தன...அவ்வளவு நம்பர்களையும் பெற்று மீண்டும் தேடுதலை ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் பிடிக்கும்போலிருக்கிறது..

என்ன செய்வது?கவனக்குறைவாக இருந்தததற்கு நல்ல தண்டனைதான். திருடியவனைக் காட்டிலும் திருட வாய்ப்பு தந்தவனே அதிக தண்டனைக்குறியவன்.

சிம் சேவையாளர்க்கு போன்போட்டு சிம்மை 'லாக்' பண்ணசொல்லிவிட்டு, பூத்திலிருந்து வெளியில் வந்ததும் வீட்டுக்கு நொந்தபடி பஸ் ஏறினேன்...

றுநாள்... "சிம்மை லாக் பண்ணிட்டாங்களானு செக் பண்ணிக்கங்க சார். இல்லாட்டி எடுத்தவன் உங்க போனை தவறா பயன்படுத்தறதுக்கு வாய்ப்பிருக்கு!!!" என்றார் நண்பர்...

அதிர்ச்சியுடன் நண்பர் செல்லை வாங்கி, நம்பரை டயல் செய்தவுடன் ரிங் போகத்தான் செய்தது...

"ரிங் போகுதா சார்?"

"போகுது... இன்னும் சிம்மை லாக் பண்ணாமல் வயிற்றில் புளியை..." என் பேச்சு நின்றது...

காரணம்...
மறுமுனையில் ரிங் நின்று யாரோ பேச முயன்றார்கள்.
நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருந்தது

"அலோ..." என்றது மறுமுனை.

'நான்' திருடியவன்

'ஸ்சில் சரியான கூட்டம். நமக்கும் இதுதானே வசதி. அதோ ஓரமாக நிக்கிறானே அந்த டிப்டாப் ஆசாமியிடம் ஏதாவது தேறுகிறதா பார்க்கலாம்.'

கூட்டத்தின் நெரிசலில் ஒரு எத்து எத்தினாலும் அவன் உஷாராகவில்லை. தீவிரமாக ஏதோ சிந்தனையிலிருக்கிறான். இதுதான் சரியான சந்தர்ப்பம்.

மெல்ல அருகில் நெருங்கினேன்...அவன் பாண்ட் பாக்கெட்டில் விரல்விட்டு தேடும்போது கிடைத்தது, ஒரு மொபைல் போன். 'விடு ஜூட்!!!' அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்கினேன்.

"காமிரா செல் வேற. சும்மா அஞ்சாயிரத்தி சொச்சம் தேத்தலாம்.மாமு உனக்கு மச்சம்டா !!!" என்றான் நண்பன்.

திடீரென செல் ரிங் அடித்தது.

"மாமு எடுத்திராத. பிரச்சனையாயிடும். அப்படியே கொஞ்ச நேரம் அடிச்சிட்டிருந்துட்டு கட்டாயிடும்.விட்டுரு" அடித்துமுடித்தவுடன், "எக்குதப்பா வர்ற காலை அட்டெண்ட் பண்ணி சிக்கல்ல மாட்டிகிடாதப்பா. ஜாக்கிரதை" என்றவன், "சரி நாளைக்குதான் இதை விக்க முடியும்.காலைலதான் ராசு வர்றானாம்"

சிந்தனை ஆகாயத்தில் பறந்தது.'இந்த மொபைல் விற்ற காசில் அண்ணன் பெண்ணான சரசுக்கு நிறைய துணிமணி வாங்கிக்கொடுக்கணும். சித்தப்பா சித்தப்பானு உயிர விடுவாளே'

அண்ணன் வீட்டைத்தாண்டிதான் என் வீட்டுக்கு போகவேண்டும். அண்ணன் வீட்டுமுன்னே கூட்டம் கூடியிருந்தார்கள்.

என்னவோ ஏதோவென்று பதறி கூட்டத்தை விலக்கிவிட்டுப்பார்த்தால், ஒரு சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

"அய்யா அய்யா இனிமே பண்ணமாட்டேன்யா வுட்ருங்க திருடறதையே வுட்றேன்யா",பொடியன் கதறினான்.

"ஏய்யா சின்னபயலை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?"

"சும்மா இருப்பா இவனா சின்னப்பையன். நம்ம சரசுவோட பர்சை திருடிருக்காம்பா. இப்ப அவனாவே வந்து மாட்டிக்கிட்டான்யா. விடுவமா இவனை?"

"ஏண்டா உனக்கா கைகால்-லாம் நல்லாத்தானே இருக்கு சொல்லுடா சொல்லு" மேலும் சில அடிகள் விழுந்தன.

"ஏண்டா திருடுன? திருடறது தப்புனு தெரியாது?"('அறிவுரை மத்தவங்களுக்குதானே?')

"தங்கச்சிக்கு ஒடம்புக்கு முடியலண்ணே. அம்மா போட்டிருச்சு. மருந்து வாங்க காசு இல்ல. அதான் பர்சை எடுத்திட்டேன்..."

"செய்யறதையும் செஞ்சிட்டு தங்கச்சிக்கு அம்மை போட்டிருச்சுனு புளுகுறான். இவனை போலீஸ்ல புடிச்சுகுடுங்கையா முதல்ல"

"வேணாம் அவனை விட்டுருங்க" என்றாள் சரசு.

எல்லோரும் கேள்வியோடு அவளைப்பார்த்தார்கள், "அந்தப்பர்சில்தான் என் மேற்படிப்பு விஷயமாக நிறைய குறிப்புகளை வச்சிருந்தேன். அதுவும் தொலைந்திருந்தால் என் மேற்படிப்பு கனவு, கனவாவே இருந்திருக்கும்."

"பணத்தை எடுத்துகிட்டு பர்சை தூக்கிபோடுடாலாம்னு நெனச்சவன், பர்சுல நெறைய பேப்பர் இருந்தத பாத்துட்டு, 'ஏதோ முக்கியமான பேப்பரா இருக்கப்போவுது'னு திரும்பக்கொண்டாந்து கொடுத்திருக்கான். தூக்கிப்போடணும்னு நினைச்சிருந்தான்னா எல்லாமே வீணாப்போயிருக்கும். அதனால இவனை மன்னிச்சு விட்டுடலாம். "

இரவில் தூக்கம் வரவில்லை...
புரண்டு புரண்டு படுத்தேன்.

'ஒரு சிறுவனிடம் இருக்கின்ற நட்பு உணர்வும், பொறுப்பும் எப்படி எனக்கில்லாமல் போனது? இந்த செல்போனில்கூட முக்கியமான தொடர்புக்குறிப்புகள் இருக்ககூடும். இவைகளை சேகரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்!!!'

எனக்கே என்னை நினைத்தால் வெட்கமாக இருந்தது.
காலையில் எழுந்தவுடன் எப்படியாவது அவனைத் தேடிப்பிடித்து திரும்பக்கொடுத்துவிடவேண்டியதுதான்...

றுநாள்...
செல் ரிங் அடித்தது...
போனை காதருகே வைத்தேன் தயக்கமின்றி.
"அலோ..." என்றேன்

பேனாச்சுமை... (ஒரு கதை)

பஸ்சில் சரியான கூட்டம்...
நிற்கக்கூட இடமில்லை...
தப்பித்தவறி ஒரு காலைத்தூக்கிவிட்டால் போச்சு, அந்த இடமும்போய் ஒரு காலிலேயே நிற்கவேண்டிய நிலைமை ஏற்படும் போலிருக்கிறது...
ஏதாவது நிறுத்ததில் நிறைய பேர் இறங்குவார்கள் என்று பார்த்தால், மேலும் மேலும் ஏறத்தான் செய்கிறார்கள்...

நண்பன் ரவி, முன்பக்கம் ஏறியிருந்தான். அவனையும் கூட்டத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை...

"படில நிக்காத உள்ள ஏறிவா...சீட்டு எடுத்துட்டு உள்ள போ...எங்கம்மா போகணும்?" என்று நீலக்கலர் கண்டக்டர் கூவிக்கொண்டிருந்தார்...

அப்போது,"எக்ஸ்யூஸ்மீ...கொஞ்சம் பேனா தரமுடியுமா? ப்ளீஸ்!" பக்கத்திலிருந்த செல்போன்காரன் கேட்டான்...காதில் செல்போன் உயிரோடு.

நான் பேனா தந்ததும்,"ம்...சொல்லுங்க! நம்பர் எட்டு,..." உள்ளங்கையிலேயே எழுதத்தொடங்கினான்...

"பாஸ்...கையில் எழுதாதீங்க...பேனா வீணாயிடும்!"

'சரிசரி' என்பதுபோல் தலையாட்டியபடி, மேலும் எழுதத்தான் செய்தான்.

அங்கிருந்து நண்பன், "டேய் மச்சான்! ட்ரேட் சென்டர் வந்திடுச்சு... அப்பிடியே படிப்பக்கம் நகரு" என்று சைகை செய்தான்...

இராமாபுரத்தை அடுத்து எல்.அன்.டி-யில் இறங்கவேண்டும்...

'பேனா தேவை...ஆனால் தரமாட்டான் போலிருக்கிறதே...!!!' ஐடிபிஎல்-லில் பேருந்து நின்றது...

"ஐயோ என்ன பண்ணிட்டிருக்க? போ படிக்கிட்ட!" இந்த நண்பன் வேறு விவரம் புரியாமல்...

இவன் எழுதிவிட்டு பேனாவைத் தந்தால், நகரலாம் என்றிருந்தால், தருகிற வழியைக்காணோம்... இன்னும் பேசிக்கொண்டிருந்தான்...

எரிச்சலாய் வந்தது...
ஒரு பேனா எடுத்துவரமாட்டார்கள் இவர்கள்...
சட்டைப்பையில் கனம் தாங்காது...
அக்கம்பக்கத்தில், என்னைமாதிரி எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால், வாங்கி சமாளித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இவர்களுக்கெல்லாம்...

'சரி படிக்குப்போய்விடுவோம். அதற்கப்புறம் வாங்கமுடியுமா பார்க்கலாம்...' என யோசித்தபடியே கிடைத்த இடைவெளியில் காலை எடுத்து வைத்ததும், பக்கத்து பெருசு, "யோவ், செருப்புதான் போட்டிருக்கியா இல்ல லாடம்கீடம் கட்டிருக்கியா, எருமமாடாட்டம் இந்தமிதி மிதிக்கிற?"

வந்த கோபத்திற்கு, அந்தாளை ஒரு வழி பண்ணியிருக்கவேண்டும்...
நண்பன் அவசரப்படுத்திக்கொண்டிருந்தான்....

வேறு வழியில்லை நேரடியாக கேட்டுவிடவேண்டியதுதான்...
ஆனால் அவனோ கூட்டத்தில் நகர்ந்து நகர்ந்து முன்னால் போய்விட்டிருந்தான்...

அப்பொழுதுதான் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்தது... இராமபுரம் நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி சுதாரிப்பதற்குள் போயேவிட்டான்...

'போச்சு போயே போச்சு... இனிமேல் பேனாவே எடுத்துவரக்கூடாது...அப்படியே எடுத்துவந்தாலும் எந்தப்பயலுக்கும் குடுக்கக்கூடாது...'

பேருந்து மெல்ல நகர்ந்து, எல்.அன்.டி-யில் நின்றது...தன்னை நொந்துகொண்டு இறங்கப்போனபோது,"எக்ஸ்யூஸ்மீ! இந்த பேனா ஒங்களுதா? ஒங்ககிட்ட குடுக்கச்சொல்லி என் ஃபிரெண்ட் தந்தான்",
பேனாவை வாங்கியபின்,
"என்னாச்சு ஒங்க பிரெண்டுக்கு, அவசர அவசரமா எறங்கிப்போனாரே?"

"அவனுக்கு ஒண்ணும் இல்ல...ஆனா..."

"ஆனா...என்ன?"

"அவங்க பேரண்ட்ஸ், மெரினாவுக்கு காலைல வாக்கிங் போயிருந்தாங்களாம்... திடீர்னு ஒரு பெரிய அலை வந்து..." அதற்குமேல் சொல்லமுடியாமல், துக்கத்தால் ஸ்தம்பித்து நின்றான்...

சட்டைப்பையில் பேனா கனத்தது...

(இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்தது...)

மாயமில்லே...மந்திரமில்லே...

மின்குழு அஞ்சலில் வந்திருந்த இந்த தொடுப்பு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

அது ஒரு மாயக்கணக்கு...
ஒரு பக்கம் மாயக்கண்ணாடி உருண்டை...(அதில்தான் நாம் நினைத்திருந்த எண்ணின் குறியீடு தெரியப்போகிறது)
மறுபக்கம் நாம் நினைத்துக்கொள்வதற்கான எண்களும், அதன் குறியீடுகளும்...

ஏதாவது ஒரு இரட்டை எண்ணை நினைத்துக்கொள்ளவேண்டும். அதில் உள்ள இரண்டு எண்களையும் தனித்தனியாக பிரித்து, கூட்டிக்கொள்ளவேண்டும்... கூட்டி வந்த விடையை உண்மையான எண்ணோடு கழிக்கவேண்டும். விடையாக வந்த எண்ணின் அருகில் என்ன குறியீடு என்பதை பார்த்துக்கொண்டு... கண்ணாடி உருண்டையில் கிளிக் செய்ய.....அட !

(உ.ம்) நினைத்த எண்: 45. (4+5=9) இந்த 9-ஐ, 45-லிருந்து கழித்தால், 36 வருகிறது. 36க்கு அருகில் என்ன குறியீடு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு, கண்ணாடி உருண்டையை கிளிக் செய்யவும்...(மாந்தரீக சவுண்ட் எஃபக்ட் வேறு)

இங்க இதப்பார்த்துட்டு எப்படி வேலை செய்யுதுனு யாராவது விளக்கினா தேவலை... (எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா. ரூம்போட்டு உக்காந்து யோசிப்பானுங்களோ?)