மனிதன்பாதி...1-(அறிவியல் தொடர்கதை)

(இது ஒரு சின்ன முயற்சி...முன்னாடியே சொல்லிடுறேன்...இது ஒரு அறிவியல் சஸ்பென்ஸ் புனைக்கதைதான் என்றாலும், க்ளைமாக்ஸ்சில் தான் அறிவியலுக்கான சாயல் தெரியும்...)

கோவிலைவிட்டு வெளியே வந்தார்கள் சக்ரவர்த்தியும் தேவ்வும்...

"சக்ரவர்த்தி நீங்க செருப்ப எடுத்திட்டுருங்க. ஒரு தம்ம போட்டுட்டு வந்திர்றேன்" என்று தேவ் இந்தப்பக்கம் வந்தான்.

தம் பற்றவைக்கும்போது அருகிலிருந்தவர்களின் சம்பாஷணை காதில் விழுந்தது.

"நேத்து என்னண்ணே பாக்கவேமுடியலியே ஒங்கள? சவாரியா?"

"ஆமா...திண்டுக்கலுக்கு ஒரு லோடு அடிக்கப்போய்ட்டேன்..." அடுத்து பேச்சுவராமல் அதிர்ந்துநின்றான். காரணம், தூரத்தில் நின்றுகொண்டிருந்த சக்ரவர்த்தியை பார்த்ததுதான்.

"டேய் இவன்... இவன்...எப்பிடிறா?"

திரும்பிப்பார்த்து இவன் முகமும் வெளிறியது...

"அவன்...சிதம்பரம்தானேண்ணே..."

(நாளை தொடரும்)

கிரிட் கம்ப்யூட்டிங் கருத்தரங்கில்...

எங்கள் கல்லூரியின் கணினித்துறையும், டாடா கன்சல்டன்ஸி செர்வீசஸ்-ம் சேர்ந்து நடத்தும் Grid Computingகின் கருத்தரங்கு, எங்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடந்தது...

பல்வேறு கல்லூரிகளில் இருந்து, மூத்த ஆசிரிய பெருமக்கள் மற்றும் பகிர்ந்திணைப்பு கணினித்துவத்தை ஆராய்ச்சியாக மேற்கொள்வோர் என நிறையபேர் வந்திருந்தார்கள்...

இந்தத்துறையிலேயே தலைசிறந்து விளங்கும் சீடாக் பூனேயின் (PARAM-Padma புகழ்) ஆலோசனையின்பேரில் சீடாக்(பெங்களுரூ)லிருந்தும், ஐ.ஐ.டி, எம்.ஐ.டி, ஐ.எம்ஸி, டி.சி.எஸ்...இங்கெல்லாமிருந்தும் கூட சில நிபுணர்கள் வந்து தங்கள் கண்டறிந்த அல்லது ஆராய்ந்து கொண்டிருக்கிற அரிய கருத்துக்களை பற்றி சொன்னார்கள்...

விமானநிலையத்திலிருந்து அழைத்துவந்தபோது எனது எடக்குமடக்கான ஐயங்களுக்கு பொறுமையாக விளக்கம் தந்தவர் சீடாக் ஆராய்ச்சியாளர் டாக்டர் பிந்துமாதவா.

ஐ.எம்.எஸ்ஸி-லிருந்து வந்திருந்த விஞ்ஞானி, ஆர்வமும் தகுதியும் இருப்பின் தன்னை சந்திக்குமாறு சொல்லிவிட்டுச்சென்றார்.

இளைஞர்களான கோவேந்தன், ரெட்டி ஆகியோரும் ஆர்வமாக விஸ்வா கருவியைப் பற்றி விளக்கினார்கள். உண்மையிலேயே கிரிட்டில் என்ன நடக்கிறது என்பதை புரியவைத்த ஒரு நல்ல செயல்முறைவிளக்கம் இது.

எல்லோரும் தரும் ஊக்கத்தை பார்க்கையில்,கிரிட் ஆராய்ச்சிகளுக்கு நிறைய மக்கள் முன்வரவேண்டும் என ரத்தினகம்பளம் போட்டு வரவேற்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது...

எல்லா செஸசனிலும் கலந்துகொண்டு நான் புரிந்துகொண்ட மிகச்சில விஷயங்களை இங்கே தருகிறேன்... (கணினி ஆராய்ச்சியில் நாம் எங்கே போய்க்கொன்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்காக)

பல்வேறு கணினிகளை இணைக்கும்போது நேரடியாக சுலபமாக ஒரு கம்பி மூலம் இணைத்துவிடமுடியாது...

ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் ஏன் ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி தகவுதரங்கள், விதிகள் இருக்கும். அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் பல்வேறு கணினிகள் இணைக்கப்படுகிறது. இது ஆரம்பநிலை.

இணைக்கப்பட்ட கணினிகளுக்கிடையே தகவல்பரிமாற்றம், பணி இடம்மாற்றம் ஆகியவை சில தகவல்பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நிறைவேற்றப்படுகிறது...

சக்திவாய்ந்த கணினிகளின் செயலிழப்புகளின் போது, அதைப்போலவே உள்ள மற்றொரு கணினிக்கு(Mirror) 'தானாகவே' செயல் இடமாற்றம்(Process Migration) முதலான பணிகளுக்கு மாற்றிக்கொள்ளும்போது தற்காலங்களில் பயனாளர்களுக்கு இது தெரியாதவாறு நிகழும்...இது இரண்டாவது நிலை...

ஒரு நெட்வொர்க்கில் உள்ள கணினிகள் தாங்களாகவே மற்ற நெட்வொர்கின் வளங்களை பயன்படுத்துபோது சில மேலாண்மைக்கு கீழ்படியவேண்டும். எது முக்கியத்துவம் வாய்ந்த பணி? மற்றும் எது சீக்கிரம் முடிக்கவேண்டிய பணி? என்பதை முடிவு செய்ய ஒரு மேலாண்மை தேவைப்படுகிறது. அதுதான் கிரிட் என்பது என் புரிதல்.(கிரிட் என்பது பகிர்வு கணினித்துவத்தின் புதிய பெயர்தான்...)

வளங்களை பயன்படுத்துவதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் கிரிட் மேலாண்மை தானாகவே தெரிவிக்கிறது...

கிரிட்டில் உள்ள பணிகளை பிரித்து செயல்படுத்துவதில் மற்றும் தகவலுக்கு பாதுகாப்பளிப்பதில் - இவைகளில்தான் இன்றைய பிரச்சனைகளும் ஆராய்ச்சிகளும். பகிர்விணைப்பு கணினி கருத்துருக்களில் முக்கியமாக இவை கருதப்படுகின்றன.

சேதி-அட்ஹோமில் பாருங்கள். நீங்கள் அங்கே பதிவுசெய்து கொண்டீர்கள் எனில் உங்கள் கணினியின் திறனை உபயோகமானவற்றுக்கு பயன்படுத்துவார்கள்...இந்த கணினியைத்தான் பயன்படுத்துகிறோம் என்று அவர்களுக்கும், இன்னவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கும் தெரியாது. உலகம் முழுவதும் இப்படி இணைக்கப்படும்போது, எண்ணற்ற திறன் கிடைக்கிறது...

சூப்பர் கணினிகள் கூட செய்யமுடியாத பல காரியங்களை இப்படி நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்பதுதான் இதன் சாராம்சம்...

வேரறுந்த மரங்கள்...(ஒரு சின்ன கதை)

"எத்தனை கன்னு சார் எடுக்கப்போறோம்?"

"அம்பது கன்னு பாலு"

ஒரு மரம் நடும் விழாவிற்காக வேளச்சேரி நர்ஸரியிலிருந்து செடிகள் எடுக்க போய்க்கொண்டிருக்கிறோம்...நான் போயிருந்த பஸ்சின் டிரைவர்தான் பாலு.

பேருந்து பல நிறுத்தங்களை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை, அம்மா சொன்னது மட்டும் அடிக்கடி காதில் ஒலித்துக்கொண்டிருந்தது...

"படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது...உனக்கும் காலாகாலத்துல கல்யாணம் முடிக்கணும். உனக்கு கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அவங்களுக்கு ஒரு கல்யாணங்காட்சி பண்ணனுங்கிறத மறந்திடாத ஆமா. இப்படி 'சேவை சேவை'னு சுத்திக்கிட்டிருந்தா என்னைக்கு வேலைக்குப்போறது...?"

என்ன செய்வது? வாழ்க்கையும் வயதும் ஓடிக்கொண்டிருக்கிறது...

"என்ன யோசனை சார்?" பாலு கேட்டதும் நினைவு வந்தது.

"ஒண்ணுல்ல பாலு. உங்களுக்கு நர்ஸரி இருக்கிற இடம் தெரியுமா?"

"தெரியும் சார். செக்போஸ்ட் முன்னால் இருக்கு சார்.பஸ் உள்ளே போகமுடியாது. வெளியிலிருந்துதான் எடுத்துக்கணும்."

கொஞ்சம் அமைதியானவர்,

"எந்த ஊர் சார் நீங்க?"

"நான் மதுரைப்பக்கம் பாலு...நீங்க..?"

"சிதம்பரம் சார். ரொம்ப நாளுக்கு முன்னாடியே சென்னைக்கு வந்தாச்சு. என் மச்சானும் இங்கதான் டிராவல்ஸ் வச்சிருக்கான்... ரெண்டு கார் இருக்குங்க சார். செம காசு சார்"

"பரவாயில்லையே... என்ன வச்சிருக்கார் குவாலிஸா?"

"இண்டிகா சார்...குவாலிஸுக்கு காசு கிடையாதுன்னான். சிக்கிரமே அதுவும் எடுத்துறுவான்."

சட்டென அமைதி நிலவியது.காரணம் நர்ஸரி வந்திருந்தது.

ஒரு சின்ன வாயிலோடு அது இருந்தது...ஒரு சின்ன கார் போகலாம்போலிருக்கிறது. ஆனால் பஸ் போக வாய்ப்பு இல்லை.

"நீங்க போய் பாத்துட்டிருங்க சார். நான் வண்டிய வாசல்ட்ட நிறுத்திட்டு வர்றேன்"

ஒரு ஒழுங்கோடு வரிசையாக எல்லா கன்றுகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நன்றாக வளர்ந்திருந்த மரங்கள் காற்றில் அசைந்து இருப்பை உணர்த்தின.

கூலியாள் ஓடிவந்தான், "என்னங்க வேணும்?"

"எங்களுக்கு 50 கன்னு மரம் நடுறதுக்காக வேணும்னு கேட்டிருந்தோம். இங்க வந்து எடுத்துக்கச்சொன்னாங்க. உங்க பேர்தான் சகாயம்ங்களா?"

"ஆமா சார். ஆபிஸர்ட்டருந்து ஆர்டர் வாங்கிருக்கீங்களா?" ஆர்டரைக் கொடுத்தவுடன், "வாங்க சார். எடுத்துத்தர்றேன்" என்று முன்னே நடந்தான் சகாயம்.

"நல்லா நிழல் தர்ற செடி தாப்பா"

"தர்றேன் சார். இதை பாருங்க?"

"பாலு இது நல்லா நெழல் தருமா பாருங்க"

"இது சவுக்கு கன்னு, வேணாம் சார் வேஸ்ட்டு. புங்கையோ வேப்பமரமோ இருந்தா பார்க்கலாம் சார். நல்ல நெழலும் தரும்,குளிர்ச்சியாவும் இருக்கும்...ஏங்க புங்கை வச்சிருக்கீங்களா"

"புங்கையெல்லாம் இருக்காதுங்க வேம்பு தர்றேன். நல்லா நெழல் கெடைக்கும்" என்றான் சகாயம்.

ஏதோ சிந்தனையிலிருந்த பாலு, "விலைக்குன்னா எவ்ளோ ஒரு கன்னு?"

"நுப்பது சார்.இப்போ இருக்குற ஆபிசரு கண்டிப்பானவரு சார். அதான் இல்லாட்டி நானே போட்டுக்கொடுத்துடுவேன். விலைக்கு எடுக்குறதாருந்தா சொல்லுங்க பண்ணிக்கொடுத்துர்றேன்"

"எனக்கு வேணும்பா. வேப்பங்கன்னு ஒண்ணு குடுத்துரு.முப்பது ரூபா தர்றேன்" பாலுவை ஆச்சரியமாக பார்த்தேன்.

"அது எங்கம்மாவுக்கு சார்...செடி வளக்குறதுனா அவ்ளோ உயிர் அவங்களுக்கு"

"அப்பிடியா. பரவாயில்லையே...ஆனா வேம்புதான் ரொம்ப சுலபமா கெடைக்குமே ஏன் காசு கொடுத்துவாங்கணும்?"

"ஒரு சின்ன சந்தோஷம்தான் சார்... வர்ற வருமானம் நமக்கே சரியா இருக்கு... வீட்டுக்கு எதுவும் அனுப்பமுடியல. அப்பப்போ இதமாதிரி ஏதாவது செஞ்சாதான் ஆறுதலா இருக்கு"

"இவ்ளோ தெளிவா சிந்திக்கிறீங்க...ஏன் சொந்தமா டிராவல்ஸ் வச்சுக்கக்கூடாது?"

"பண்ணணும் சார். ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு இருக்கேன். மொதல்ல நிறைய்ய கத்துக்கணும். பொறுப்பு எடுத்துக்கும்போது என்னன்ன சிக்கல் வரும்னு தெரியவேண்டாமா?"

ஒரு பெருமூச்சுடன் மேலும்,

"படிச்சிருந்தா உங்கள மாதிரி ஆபிசரா ஆகியிருந்திருக்கலாம். படிப்பு ஏறல. பாதிலயே கார் ஓட்ட வந்துட்டேன். படிப்பு ஒரு நிழல் மாதிரி சார். எப்பவும் கூடவே இருக்கும். என்னை நினைச்சுக்கிட்டா நிழல் இல்லாத மரம்தான் ஞாபகம் வருது. .."

சகாயம் ஓடி வந்தான்...

"சார் எல்லா செடியும் ஏத்தியாச்சு. இதுல ஒரு கையெழுத்து போட்டிருங்க"

"பாலு வண்டிய திருப்பிட்டு வாங்க"

தனது இருக்கையில் அமர்ந்த பாலு திரும்பிப்பார்த்தார்.

பஸ்சுக்குள் ஒரே செடி மயம். மண்வாசனை வேறு. புதிதாக பிறந்ததுபோன்ற ஒரு உணர்வு தோன்றியிருக்கவேண்டும்...

டிரைவர் பாலு, கிடைத்த ஒன்றிரண்டு இலை இடைவெளிகளில் முகம் காண்பித்து என்னை நோக்கி குழந்தைமாதிரி சிரித்தார்...

படிப்பு, நிழல் போல என்பது உண்மைதான். ஆனால் நம்பிக்கை மரத்திற்கு வேர் போன்று முக்கியமானது...

என்றாவது வெற்றியடைவேன் என்று சொல்லாமல் சொல்லிய அவர் சிரிப்பிலிருந்து, எனக்குள்ளும் ஒரு புதிய மனிதன் பிறந்திருந்தான்...

தனி ஊடகங்களுக்கு தணிக்கை தேவையா?

தகவல் ஊடகங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில், மக்கள் எதிர்காலத்தில் நாளிதழ்களையும் வார இதழ்களையும் படிப்பதை விட்டுவிட்டு இன்டர்நெட் மற்றும் ப்ளாக்குகளை படிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றார்கள்.(தி ஹிண்டு)

ஏற்கனவே இப்படி பலபேர் இடம்பெயர்ந்து விட்டார்கள் என்பதுடன், சொந்தமாக ப்ளாக்கும் நடத்துகிறார்கள் என்பதுதான் சற்றே வித்தியாசமான விஷயம்.

ஒரு பத்திரிக்கையின் அல்லது ஒரு எழுத்தாளனின் வாசகன், இன்னொரு பத்திரிக்கை நடத்தமுடியுமா? தனக்கு தோன்றுகிற எந்த கருத்தானாலும் மாவூடகங்களில்/நாளிகைகளில் வெளிப்படுத்த முடியுமா? ஒரு கருத்துக்கு மறுகருத்து சொல்லமுடியுமா? எல்லாவற்றுக்கும் பதில் - ப்ளாக்.

இதழ்களில், வேறொரு கருத்துக்கு மீத்தொடுக்க முடியாது... சில எல்லைக்குட்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எதையும் படிக்கமுடியாது... (கமெர்ஷியலுக்காக சில விஷயங்களை பண்ண வேண்டியிருக்கிறது)

மேலும் அந்த கருத்தரங்கில், 'ப்ளாக் என்பதுதான் எதிர்காலத்தில் நிலைபெறப்போகிற சக்திவாய்ந்த ஊடகம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலபேர் தருகிற தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இதற்கு என்ன செய்வது?' என கையை பிசைந்தார்கள்.

உண்மையான தகவல்களை மட்டுமே பதிவுசெய்வதற்கும் அல்லது எதிர்விளைவை ஏற்படுத்துகிற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு தணிக்கை ஏற்படுத்துவது என்பது கடினமான விஷயம்...கண்காணிப்பது அதைவிட கஷ்டம்.

சுமார் ஆயிரம் தமிழ் பதிவகங்கள் இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு நூறு இடுகைகள் தரப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். எத்தனைபேரை தேடித்தேடி சரிசெய்துகொண்டிருப்பீர்கள்? எல்லாவற்றையும் வாசிப்பவர்களுக்கு எது உண்மை என புரிய வைப்பது இன்னும் சிரமம்.

(அப்படிப்பட்ட தணிக்கைகள், வெகுஜன ஊடகங்களான தனியார் தொலைக்காட்சிகளுக்கும், பேரிதழ்களுக்கும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அங்கே தரப்படுகிற எல்லா தகவல்களையும் எதன்பேரில் நாம் நம்புகிறோம் சொல்லுங்கள்)

தி ஹிண்டு, நம்பகமான விஷயங்களைத்தான் தருவார்கள் என்பது எப்படி எல்லோருக்கும் தெரிந்தது? அதே போலத்தான் இதையும் அவர்கள் தானாக தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும்.

நம்பகமான/எதிர்விளைவை ஏற்படுத்தாத விஷயங்களைத் தருவது ஒவ்வொரு ப்ளாக்கரின் கடமைதான் எனினும் தனிக்கூடாரம் போட்டு மற்றவர்கள் எழுதுவதை கட்டுப்படுத்தமுடியாதே?

முன்னெல்லாம் இதுதான் தகவல் என சொல்வதற்கே தகவல் இருக்காது...அப்படியே இருந்தாலும், ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்கு வழியின்றி இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு வார்த்தையை கொண்டே பலவற்றை பெற வழியிருக்கிறது.

இதனால், இணைய வாசகனுக்கு ஒரு புதிய பொறுப்பும் தரப்படுகிறது...

ப்ளாக்குகள் மூலம் தகவல்கள் தெரிந்துகொண்டவுடன், உண்மையை தானாக ஆராய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அது.