மகாகவி பாரதியும் Virtual Realityயும் (எங்கோ படித்தது)

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்வது போல மகாகவி பாரதி ஒரு வார்த்தை விஞ்ஞானி...

'பாரதி' திரைப்படத்தில் வரும் இந்தப்பாடலில் அது தெளிவாகிறது...

"நிற்பதுமே நடப்பதுமே பறப்பதுமே
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ வெறும் தோற்றமயக்கங்களோ..." (பல்லவி)

"வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீர்தானோ வெறும் காட்சிப்பிழைதானோ..." (சரணம் 1)


- பாடலில் தோன்றுகின்ற 'காட்சிப்பிழை','தோற்றமயக்கங்கள்' ஆகிய வார்த்தைகள் நவீன உலகின் Virtual Realityயைக்குறிப்பதாக உள்ளன.

டாவின்சி வரப்போகிற விஞ்ஞானத்தை ஓவியத்தில் வரைந்தார்... மகாகவி தன் கவிதைகள் மூலம் வார்த்தைகள் தந்தார்...

(தமிழ் இதழ்களின் முதல் கார்ட்டூனிஸ்ட் மகாகவி பாரதிதான் என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்)

ஆஸ்பத்திரியில் சிவனும் பார்வதியும்...

ரொம்பச் சிறிய வயதில் எங்கள் பாட்டியிடம் கதை கேட்டுக்கொண்டே தூங்குவது வழக்கம். பெரும்பாலும் பாட்டி சொல்வது ஆன்மீக கதைகள், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி(பலமுறை ரிப்பீட்டு),விக்கிரமாதித்தன்...

தமாசு என்னவெனில், கதை சொல்லும்போதே பாட்டி தூங்கிவிடுவார்கள்...நான் மேலும் சொல்லச்சொல்லி நச்சரிப்பேன்...தூக்க கலக்கத்தில் ஆன்மீக கதைகள் எல்லாம் 'கூத்துக்காரனிடம் சிக்கிய கிருஷ்ணர் கதை'போலாகிவிடும்.

இராமர் கதையை ஒரு தடவை இப்படி முடித்தார்கள்.
"....அப்புறம் ஸ்ரீராமரை எல்லோரும் சேர்ந்து பஸ் ஏற்றி விட்டார்கள். வ்ளோதான் போ"

இன்னொரு தரம் சிவன் பார்வதி கதையில், "....சிவனைக் காணாமல் பார்வதி ஆஸ்பத்திரி முழுவதும் தேடினார்" என்று முடித்தார்.

(அதென்ன 'கூத்துக்காரனிடம் சிக்கிய கிருஷ்ணர் கதை'? என்று கேட்பவர்களுக்கு காஞ்சிபுரம் செய்யானூரில் நடந்த மகாபாரத கூத்தைப்பற்றி பிரிதொருமுறை சொல்கிறேன்)

மீண்டும்...(விடாது கருப்பு)

அடப்பாவமே...

சண்முகாவில் படித்தபோது, என் அறைக்கு அருகே தங்கியிருந்த பையன் கையில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்தது...

'எப்படி?' என்று கேட்டால், அவன் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது.

"கம்யூட்டருக்கு ஆயில் ஊற்றவேன்டும்" என்று பணம் வாங்கிக்கொள்வானாம். இது எப்படி இருக்கு?

பெற்றோர்களே கவனிக்கிறீங்களா...?

'C'ன்ன விஷயமுங்கோ

சமீபத்தில், அருகில் இருந்த கல்லூரிக்கு External lab examiner-ஆக போக நேரிட்டது.

அது C Programming Lab...
ஒரு மாணவியிடம் Viva கேட்டுக்கொண்டிருந்தேன்.

"What is a String?" என்ற கேள்விக்கு, அதிரடியாக பதில் வந்தது இப்படி... "a wire made up of metal"

(ஒருவேளை என் அறிவை சோதிப்பதற்காக தரப்பட்ட பதிலோ?)

"Take it !!!"

திருச்சி அங்காளம்மனில் நாங்கள் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து, பல்கலைக்கழகத் தேர்வுகள் நடந்து கொண்டிருந்த சமயம்...

அன்று Carpentary மற்றும் Fitting Workshop தேர்வு...

எங்கள் நண்பன் ஒருவன் (ரொம்ம்ம்ப அப்பாவி. முதல் வருடம் எங்களுடன் சேர்ந்தபோது, பாவம்போல இருப்பான். இப்போ பயங்கர ரவுசு பார்ட்டி) லேப் எக்ஸாமுக்கு லேட்டாக வந்தான்.

நேரே examiner இருந்த இடத்திற்கு போனான்... அவருக்கு சாப்பிடுவதற்கு biscuitகள் வைக்கப்பட்டிருந்தது...

இவனுக்கு கேள்வித்தாள்கள் எடுத்துக்கொள்வதற்காக பரப்பிவைக்கப்பட்டிருந்தன...

External Examiner 'கேள்வித்தாள் எடுத்துக்கொள்' என்ற பொருளில் "Take it !!!" என்று சொல்லிவிட்டு Internal-உடன் பேசிக்கொண்டிருந்தார்.

அருகில் இன்னும் நிழலாடுவதை கண்டு திரும்பிப்பார்த்தவர், அதிர்ச்சியடைந்தார்.

Take it என்று சொன்னதற்கு, உரிமையுடன் ஒரு கையில் biscuit எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான் இவன்.

(இங்கு எழுதினது மட்டும் தெரிந்தால், தொலைந்தது.நேரே வந்து வைதுவிடுவான் வைது. யாராவது காப்பாத்துங்கப்பா)

ஐயோ பேயீ...பாகம் II

திருச்சி அங்காளம்மன் பொறியியல் கல்லூரியில் படித்தபோது நடந்த நிறைய விஷயங்களை என்னால் மறக்கமுடியாது...

(திருச்சி-சென்னை) தேசிய நெடுஞ்சாலையில், கல்லூரி உள்ளடங்கி அமைந்துள்ளது. காலேஜைத் தாண்டி இன்னும் கொஞ்சம் உள்ளே போனால் எங்கள் மாணவர் விடுதி வரும்...அங்கே இன்னும் எங்கள் சந்தோசக்குரல்கள் கேட்பதாக 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே'...

ஒரு தடவை என் சீனியர் மக்கள் இரண்டு பேர் Second Show போய்விட்டு நள்ளிரவு 12.00 வாக்கில், விடுதிக்கு நடந்துவந்துகொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தாலும் இருமை...

திடீரென...
ஒரு குரல் கேட்டது...
நெடுஞ்சாலையிலிருந்து வந்த ஒரு குழந்தையின் அழுகுரல்...

ஆள் நடமாட்டத்திற்கு கொஞ்சம் கூட வாய்ப்பில்லாத அந்த நேரத்தில், 'ஊம் ஊம்' என்று அழுவதுபோல இருந்த அந்த குரலை கேட்டதும், 'பகீர்' என்றது...எடுத்தார்கள் ஒரு ஓட்டம் காஸ்டலுக்கு...

விடுதிக்கு வந்து நண்பர்களை எழுப்பி விவரம் சொல்லவும், எல்லோரும் கிளம்பினோம் ஒரு ஆர்வத்தில்.

சுமார் 15-20 பேர். தைரியமாக நெடுஞ்சாலையை நோக்கி நடந்தோம்... நெருங்க நெருங்க அந்த "ஊம் ஊம்" சத்தம் கேட்க ஆரம்பித்தது...எங்கிருந்தோ பயம் வந்து ஒட்டிக்கொண்டது... ("டேய் மச்சான் இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல. Up and Down போட்டு அப்படியே காஸ்டலுக்கு ஓடிடலாம்")

ஆனால், தைரிய சிகாமணிகள் மேலும் முன்னேறினார்கள்... நெருங்கி அருகே போய் பார்த்தால்....

நெடுஞ்சாலையில், லாரி போன்ற வாகனங்கள் போகும்போது தார்ச்சாலையிலிருந்து "விர்விர்"ரென்று கிளம்பிய ஒலி, தூரத்திலிருந்து 'குழந்தையின் குரலாக' கேட்டிருக்கிறது.

என் நன்றி...

தமிழ்ப்பூவிற்கு தமிழ்தோற்றம் வந்தது, நண்பர் ரஜினிராம்கியால்.
ஈ-கலப்பை மற்றும் சுரதாவின் பயன்பாடுகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவர்தான். மனமார்ந்த நன்றி அவருக்கு...

அதேபோல், தமிழ்ப்பூவின் மணம் பரவசெய்த தமிழ்மணத்திற்கு என் மனமார்ந்த நன்றி...

தினமடல் மற்றும் கடலமிட்டாய் ("மிட்டாய் வாங்கலையோ மிட்டாய் மிட்டாய்") தொகுப்புகளுக்கும் என் நன்றி...

"ஐயோ பேயீ..."

எங்கள் சண்முகா கல்லூரியில், பாலிடெக்னிக் மாணவர்கள் ரொம்ப சந்தோசமானவர்கள்...அவர்களது வெகுளித்தனத்திற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்...

அது தேர்வு நேரம்...

மறுநாள் பரீட்சை...அதிகாலையில் சீக்கிரம் எழ வேண்டும்.

ஒருவன் காலை 4.30க்கு அலாரம் வைத்து அறையின் மதிலில் எங்கோ வைத்துவிட்டான்...("பக்கத்தில் இருந்தால் (அலாரத்தின்) தலையிலடித்து விட்டு மீண்டும் தூங்கிவிடுவேன்")

இது தெரியாத அவன் அறை நண்பன் வேறொரு அலாரத்தில் காலை 5.00க்கு வைத்துவிட்டு படுத்துவிட்டான்...

காலை 4.30 மணிக்கு (ஒழித்து வைத்திருந்த) அலாரம் அடிக்க, இவன் 5.00 மணி அலாரத்தை அழுத்தினான். சத்தம் நிற்கவில்லை.

ஒன்றும் புரியவில்லை... அலாரத்தின் பாட்டரியை தனியாக எடுத்து பார்த்தான்...அலாரத்தை தனித்தனியாக கழட்டியும் பார்த்தான்...அலாரம் நின்றபாடில்லை...(அதுதான் மேலே இருக்கிறதே)

என்னவெல்லாமோ செய்தும் அலாரம் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது...

இவன் மனதுக்குள் ஒரு திகில்..."ஐயோ பேயீ..." என்று ஒரே அலறல்...அந்த பேயலறலில்தான், மற்றவன் (அந்த அலாரம் வைத்தவன்) விழித்தான்.

டபாய்க்கிற? கீசுடுவேன்...

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் எங்கள் கல்லூரிக்கு தமிழ் மன்றம் தொடங்கிவைக்க வந்திருந்தார்.

பேச்சின் நடுவே..."சென்னைத்தமிழில் 'டபாய்க்கிற' என்பது ஒரு அற்புதமான தமிழ் வார்த்தைதான்" என்று சொல்லவும் கூட்டத்தில் ஒரே சலசலப்பு.

பிறகு அவரே சொல்கிறார்..."'ஏண்டா அப்பா ஏய்க்கிற?' என்பது மாறி 'டபாய்க்கிற' என்றாகிவிட்டது".

இதேபோல இன்னும் நிறைய வார்த்தைகள் 'மயுவி ' (அதாமே, மருவி) விட்டிருக்கிறது. இப்படி மற்றொரு உதாரணம், 'மெய்யாலுமே'.

மீண்டும்...

தேமா - புளிமா

எங்கள் கல்லூரி வளாகத்தில் மென்பொருள் நிறுவனங்களுக்கான ஒரு technical interview panelலில் நடந்த வேடிக்கையான விஷயம்...

ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டுகொண்டிருந்தார் interviewer(Development பிரிவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர்,ரொம்ப ஜாலியான பேர்வழி.ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் 'வாடி, போடி' என்று அழைப்பது இவரிடம் உள்ள வேடிக்கை.)...தொடர்ந்து அவர் ஆங்கிலத்திலேயே பேசியதனால், தாங்கமுடியாமல்,"சார் நான் தமிழ் மீடியம்...English புரியவில்லை..." என்று கேட்டேவிட்டான்.

"அப்படியா...அப்போ சொல்லு...'தேமா'னா என்ன? "

இந்த திடீர் கேள்வியை பையன் எதிர்பார்க்கவில்லை...

அடுத்த கேள்வியையும் கேட்டுவிட்டார்..."'புளிமா'னா என்ன சொல்லு பார்ப்போம்..?"

பையன் சட்டென "'புளிச்சமா' தெரியும். அதென்ன 'புளிமா'?" என்றான் அப்பாவியாக.

அவன் சாதாரண'மாணவன்' அல்ல என்று யோசித்தவர், "HRக்கு போங்கடி, அங்க குடுப்பாங்க உங்களுக்கு புளிச்சமா..." என்றபடி அனுப்பிவைத்தார்.

பையன் அதிலும் தேர்வு பெற்று இப்பொழுது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கிறான் என்பது வேறு சங்கதி.

சிஸ்கோ பயிற்சியில்...

கடந்த இரண்டு வாரங்களுக்கு, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சிஸ்கோ பயிற்சிக்கு போயிருந்தோம்...

உபயோகமான பயிற்சிதான் ஆனாலும்...
பொள்ளாச்சியின் குளுமையையும் அழகையும் உணர நேரமின்றி 15 நாள்கள் கடுமையான உழைப்பு. ( காலை 8.30 யிலிருந்து இரவு 11.30 வரை) எந்நேரமும் Computer Networks பற்றிதான் பேச்சு...

அவ்வப்போது கிடைக்கும் இடைவேளைகளில் நண்பர்களின் நகைச்சுவைதான் ஒரே ஆறுதல்...

(நண்பன் பார்த்தசாரதி, ஆட்டோக்காரரிடம் "ஆட்டோவுக்கு IP address" கேட்டதுதான், பெரிய நகைச்சுவை)

அனுபவங்கள் தொடரும்...

அன்றும் இன்றும்

நீண்ட நாட்களுக்கு முன் பதிய நினைத்திருந்த விஷயம், இப்பொழுதுதான் சமயம் வாய்த்திருக்கிறது. "அன்றும் இன்றும்" நிகழ்ச்சியால் மனமுருகி பதித்தது.

திருவாசகத்திற்கும் உருகாத மனது, இசைஞானியின் இசைக்கு உருகிவிடும் என்பது நவீன உண்மை. "ஜனனி ஜனனி" என்ற ஆரம்பப்பாடலே, உயிரில் கலந்தது. ரசிகர்களில் சிலரும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அடுத்தடுத்து, எஸ்பிபி, ஹரிஹரன், சித்ரா என இன்னும் உயிரோட்டம் கூடியது...

டைரக்டர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். "இசைஞானியின் இசை ஒரு இன்ப சுனாமி" என்று சொன்னது ஒரு நெருடல். (சுனாமி ஒரு கோர விபத்து)

மீண்டும்...