மனிதன்பாதி...(கிளைமாக்ஸ்)-(அறிவியல் தொடர்கதை)

7

கோர்ட்...

குற்றவாளிக்கூண்டில் சக்ரவர்த்தி...

நீதிபதி, "எல்லா வாதங்களையும் சாட்சியங்களையும் வைத்துப்பார்க்கும்போது, குற்றவாளியாக இங்கு நிற்கும் சக்ரவர்த்தி என்ற சிதம்பரம்தான் கொலையைச் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

ஆனால், குற்றவாளி இதை சுயநினைவுடன் செய்யவில்லை என்றும் தெரியவந்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்" .

"நான் ஒரு கருத்தைச் சொல்லவிரும்புகிறேன் நீதிபதி அவர்களே" அரசுத்தரப்பு வக்கீல் எழுந்தார்.

"கடும் விசாரணைக்குப்பிறகும் இந்த சக்ரவர்த்தியிடமிருந்து உண்மை வெளிவரவில்லை என்பதால்தான் சந்தேகப்பட்டு மருத்துவசோதனை செய்ய கோர்ட் உத்திரவிட்டது. அதில் இவர் உயிரற்றவர் எனவும், எதையும் தன்னிலையிலிருந்து செய்யவில்லை எனவும் தெரியவந்திருக்கும்போது, இதற்குமேல் இவரிடம் விசாரணை செய்து பயனேயில்லை...

இவரை ஏவிவிட்டது யார் என்பதை வேறுவகையில்தான் அறியவேண்டும் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்"

"அப்படியென்றால் உண்மையான குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது?"

"அதை நான் சொல்கிறேன்" என்று ஒரு புதிய குரல் கேட்டு எல்லோரும் திரும்பினார்கள்...

8
ஒரு அறுபது எழுபது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் கோர்ட் வாசலில் நின்றுகொண்டிருந்தார்...

நீதிபதி வியந்தவாறே, "எதுவாயினும் சாட்சிகூண்டுக்கு வந்து சொல்லவும்"

சாட்சிக்கூண்டுக்கு வந்தவர், உறுதிமொழி கொடுத்துவிட்டு, "என் பெயர் இராமநாதன். பயோ-டெக்னாலஜியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பவன்.
கணினியின் அறிவை மனிதன் அளவுக்கு மாற்றிக்கொண்டிருக்கிற காலத்தில், ஒரு சக்தி வாய்ந்த கணினியை மனிதனுக்குள் புகுத்தி அவன் வாழ்நாளையும் செயல்திறனையும் அதிகரிக்க வைக்கமுடியுமா என்பதை திவீரமாக ஆராய்ந்துகொண்டிருப்பவன்.

முழுவதும் வெற்றியடைந்த நிலையில் நான் சில சிக்கல்களை சந்திக்கநேர்ந்தது...

நிறைய சமூகவிரோத சக்திகள் என்னை மிரட்டி என் ஆராய்ச்சி முடிவுகளை கைப்பற்றி ஆதாயம் அடைய பார்த்தார்கள்... அதில் ஒருவர்தான் கொலைசெய்யப்பட்ட வேலுச்சாமி.

எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்...

ஆராய்ச்சி முடிவுகளை சொல்லவேயில்லை என்ற கோபத்தில், என் மகள் நந்தினியையும் அவளுடைய கணவனான இந்த சிதம்பரத்தையும் ஒரு லாரி விபத்து போல ஏற்பாடு செய்து கொலை செய்துவிட்டார்கள்...

என்மேல் உள்ள கோபத்தில் இரு அப்பாவிகளை கொன்றதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை... இந்த அப்பாவிகளின் கொலைக்கு வஞ்சம் தீர்க்கத்தயாரானேன்...

ஆமாம்...

கொலையுண்டதற்கு பின், சுத்தமாக செயலற்று இருந்த என் மருமகன் சிதம்பரத்தின் மூளை ந்யூரான்களில் கட்டளைகளுக்கு ஏற்ப சின்னச்சின்ன மின்னதிர்வுகளை உள்ளீடாகச் செலுத்தினேன்... மிகுந்த பிரயாசைக்குப்பிறகு, மூளை செயல்படத்தொடங்கியது... மூளையிலிருந்து தொடங்கும் நரம்புமண்டலம் முழுவதையும் செயற்கை இழைகளால், பிண்ணிபிணைத்தால் ஒரு மனிதனுக்கு உயிர்கொடுக்கமுடியுமோ என்று தோன்றியது...அதில் செய்துபார்த்ததில் கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது...
என் வாழ்நாள் லட்சியமான Bio-machines என்ற 'மனிதன்பாதி-கணினிபாதி' தொழில்நுட்பத்தில் நான் வெற்றி கண்டேன்...

இப்படி படிப்படியாக மாற்றி சிதம்பரம் எடுத்த அவதாரம்தான் - சக்ரவர்த்தி.
வேலுச்சாமியைக் கொல்ல சக்ரவர்த்திக்கு கட்டளை எழுதியவன் நான்தான். அதுமட்டுமல்ல, அதற்கு உடந்தையாக இருந்த ஒரு லாரி டிரைவரையும் கொன்றதும் நான்தான்"

சற்றுநேரத்திற்கு, அமைதியானார்... கண்களில் கண்ணீர்...

"ஒரு விஞ்ஞானி துறவி போன்றவன்...அவனுடைய அறிவால் சமூகத்திற்கு நன்மை கிடைக்கவேண்டும்... ஆனால், நான் என் நிலையை மறந்து, எப்பேற்பட்ட ஒரு இழிவான செயலைச் செய்திருக்கிறேன் என்பது என் கோபம் போனபின் தான் புரிகிறது...

அதனால்தான்...என் முடிவை நானே தேடிக்கொள்கிறேன்"

என்று சடாரென கூண்டுக்குள் சரிந்து விழுந்தார் நிரந்தரமாக...

(முடிந்தது)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home