(50). திருடியவனும், தொலைத்தவனும் (இரட்டைக்கதை)

ஒரு பொருள் காணாமல்போகிறது. அதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் அடுத்து என்ன ஆகிறார்கள்? அந்த இருவரும் தங்களுக்கு நேர்ந்ததை கதையாக்குகிறார்கள்.

'நான்' தொலைத்தவன்

ஸ்சின் நகர்வுக்கு ஏற்றபடி பின்னோக்கி நகர்ந்த மரங்களையும் கட்டிடங்களையும் பார்த்துக்கொண்டே இருந்த மனமும் பழைய நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தது.

நெரிசலில் நகரக்கூட முடியாமல் ஒரே இடத்திலேயே நின்றேன்.

அங்கிங்கு மக்கள் இடம்பெயரும்போது மட்டும், சிறுசிறு இடைவெளிகளில் மெல்லிய காற்றுக்கு விடுதலை கிடைத்தது. வாழ்க்கை பயணமும் இப்படித்தானே, கவலை நெரிசலில் திக்குமுக்காடியிருக்கும்போது அவ்வப்போது இந்த காற்று போல மகிழ்ச்சியும் வீசுகிறது.

அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தது... தன்னிச்சையாக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுபொழுதுதான் உணர்ந்தேன்...'பகீர்' என்றது. மொபைலைக் காணவில்லை...

'அய்யோ, யார் எடுத்திருப்பார்கள்?இல்லை தவறிக்கீழே விழுந்திருந்திருக்குமோ?' கீழே குனிந்து பார்த்தேன்... பார்வையின் எல்லைவரை இல்லை...

சந்தேகத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தேன்... ஒன்றும் நடவாததுபோல அமைதியாக நின்றிருந்தார்கள் அருகிலிருந்தவர்கள். செல் திருடுப்போன என் அதிர்ச்சிக்கும், இவர்களின் ஒன்றும் அறியாத அமைதிக்கும் போர் ஆரம்பித்திருந்தது.

அருகிலிருந்தவரிடம், "சார் ஒரு உதவி... என் செல் தவறி பஸ்சுகுள்ள விழுந்துடுச்சு... ப்ளீஸ் ஒரு ரிங் தர்றீங்களா? நம்பர் சொல்றேன்"

நம்பர் டயல் செய்து பார்த்தபொழுது, "ரிங் போகுதுங்க. நீங்க சைலண்ட்ல வக்கல இல்ல.பஸ்ல இருந்திருந்தா இந்நேரம் சத்தம் வந்திருக்குமே சார். போனை பிக்பாக்கெட் அடிச்சிருக்காங்க சார். போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுங்க. இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது."

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினேன்.

இழப்பு...ஏமாற்றம்...மனமெல்லாம் ஏமாற்றத்தின் காயம்.வாங்கி இரண்டு மாதங்கள்தான் ஆகிறது...வேலை தேடும் விஷயமாக அத்தனை நம்பர்களும் ஈமெயில்களும் அதில்தான் இருந்தன...அவ்வளவு நம்பர்களையும் பெற்று மீண்டும் தேடுதலை ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் பிடிக்கும்போலிருக்கிறது..

என்ன செய்வது?கவனக்குறைவாக இருந்தததற்கு நல்ல தண்டனைதான். திருடியவனைக் காட்டிலும் திருட வாய்ப்பு தந்தவனே அதிக தண்டனைக்குறியவன்.

சிம் சேவையாளர்க்கு போன்போட்டு சிம்மை 'லாக்' பண்ணசொல்லிவிட்டு, பூத்திலிருந்து வெளியில் வந்ததும் வீட்டுக்கு நொந்தபடி பஸ் ஏறினேன்...

றுநாள்... "சிம்மை லாக் பண்ணிட்டாங்களானு செக் பண்ணிக்கங்க சார். இல்லாட்டி எடுத்தவன் உங்க போனை தவறா பயன்படுத்தறதுக்கு வாய்ப்பிருக்கு!!!" என்றார் நண்பர்...

அதிர்ச்சியுடன் நண்பர் செல்லை வாங்கி, நம்பரை டயல் செய்தவுடன் ரிங் போகத்தான் செய்தது...

"ரிங் போகுதா சார்?"

"போகுது... இன்னும் சிம்மை லாக் பண்ணாமல் வயிற்றில் புளியை..." என் பேச்சு நின்றது...

காரணம்...
மறுமுனையில் ரிங் நின்று யாரோ பேச முயன்றார்கள்.
நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருந்தது

"அலோ..." என்றது மறுமுனை.

'நான்' திருடியவன்

'ஸ்சில் சரியான கூட்டம். நமக்கும் இதுதானே வசதி. அதோ ஓரமாக நிக்கிறானே அந்த டிப்டாப் ஆசாமியிடம் ஏதாவது தேறுகிறதா பார்க்கலாம்.'

கூட்டத்தின் நெரிசலில் ஒரு எத்து எத்தினாலும் அவன் உஷாராகவில்லை. தீவிரமாக ஏதோ சிந்தனையிலிருக்கிறான். இதுதான் சரியான சந்தர்ப்பம்.

மெல்ல அருகில் நெருங்கினேன்...அவன் பாண்ட் பாக்கெட்டில் விரல்விட்டு தேடும்போது கிடைத்தது, ஒரு மொபைல் போன். 'விடு ஜூட்!!!' அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்கினேன்.

"காமிரா செல் வேற. சும்மா அஞ்சாயிரத்தி சொச்சம் தேத்தலாம்.மாமு உனக்கு மச்சம்டா !!!" என்றான் நண்பன்.

திடீரென செல் ரிங் அடித்தது.

"மாமு எடுத்திராத. பிரச்சனையாயிடும். அப்படியே கொஞ்ச நேரம் அடிச்சிட்டிருந்துட்டு கட்டாயிடும்.விட்டுரு" அடித்துமுடித்தவுடன், "எக்குதப்பா வர்ற காலை அட்டெண்ட் பண்ணி சிக்கல்ல மாட்டிகிடாதப்பா. ஜாக்கிரதை" என்றவன், "சரி நாளைக்குதான் இதை விக்க முடியும்.காலைலதான் ராசு வர்றானாம்"

சிந்தனை ஆகாயத்தில் பறந்தது.'இந்த மொபைல் விற்ற காசில் அண்ணன் பெண்ணான சரசுக்கு நிறைய துணிமணி வாங்கிக்கொடுக்கணும். சித்தப்பா சித்தப்பானு உயிர விடுவாளே'

அண்ணன் வீட்டைத்தாண்டிதான் என் வீட்டுக்கு போகவேண்டும். அண்ணன் வீட்டுமுன்னே கூட்டம் கூடியிருந்தார்கள்.

என்னவோ ஏதோவென்று பதறி கூட்டத்தை விலக்கிவிட்டுப்பார்த்தால், ஒரு சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

"அய்யா அய்யா இனிமே பண்ணமாட்டேன்யா வுட்ருங்க திருடறதையே வுட்றேன்யா",பொடியன் கதறினான்.

"ஏய்யா சின்னபயலை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?"

"சும்மா இருப்பா இவனா சின்னப்பையன். நம்ம சரசுவோட பர்சை திருடிருக்காம்பா. இப்ப அவனாவே வந்து மாட்டிக்கிட்டான்யா. விடுவமா இவனை?"

"ஏண்டா உனக்கா கைகால்-லாம் நல்லாத்தானே இருக்கு சொல்லுடா சொல்லு" மேலும் சில அடிகள் விழுந்தன.

"ஏண்டா திருடுன? திருடறது தப்புனு தெரியாது?"('அறிவுரை மத்தவங்களுக்குதானே?')

"தங்கச்சிக்கு ஒடம்புக்கு முடியலண்ணே. அம்மா போட்டிருச்சு. மருந்து வாங்க காசு இல்ல. அதான் பர்சை எடுத்திட்டேன்..."

"செய்யறதையும் செஞ்சிட்டு தங்கச்சிக்கு அம்மை போட்டிருச்சுனு புளுகுறான். இவனை போலீஸ்ல புடிச்சுகுடுங்கையா முதல்ல"

"வேணாம் அவனை விட்டுருங்க" என்றாள் சரசு.

எல்லோரும் கேள்வியோடு அவளைப்பார்த்தார்கள், "அந்தப்பர்சில்தான் என் மேற்படிப்பு விஷயமாக நிறைய குறிப்புகளை வச்சிருந்தேன். அதுவும் தொலைந்திருந்தால் என் மேற்படிப்பு கனவு, கனவாவே இருந்திருக்கும்."

"பணத்தை எடுத்துகிட்டு பர்சை தூக்கிபோடுடாலாம்னு நெனச்சவன், பர்சுல நெறைய பேப்பர் இருந்தத பாத்துட்டு, 'ஏதோ முக்கியமான பேப்பரா இருக்கப்போவுது'னு திரும்பக்கொண்டாந்து கொடுத்திருக்கான். தூக்கிப்போடணும்னு நினைச்சிருந்தான்னா எல்லாமே வீணாப்போயிருக்கும். அதனால இவனை மன்னிச்சு விட்டுடலாம். "

இரவில் தூக்கம் வரவில்லை...
புரண்டு புரண்டு படுத்தேன்.

'ஒரு சிறுவனிடம் இருக்கின்ற நட்பு உணர்வும், பொறுப்பும் எப்படி எனக்கில்லாமல் போனது? இந்த செல்போனில்கூட முக்கியமான தொடர்புக்குறிப்புகள் இருக்ககூடும். இவைகளை சேகரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்!!!'

எனக்கே என்னை நினைத்தால் வெட்கமாக இருந்தது.
காலையில் எழுந்தவுடன் எப்படியாவது அவனைத் தேடிப்பிடித்து திரும்பக்கொடுத்துவிடவேண்டியதுதான்...

றுநாள்...
செல் ரிங் அடித்தது...
போனை காதருகே வைத்தேன் தயக்கமின்றி.
"அலோ..." என்றேன்

4 Comments:

Blogger மகேஸ் said...

கார்த்தி, நல்ல கதை. இரண்டு பக்கங்களில் இருந்தும் இரு கோணங்களில் பார்த்து எழுதியிருக்கிறீர்கள். அருமையான கதை.

7:37 AM  

Blogger கார்த்திக் பிரபு said...

கதை நல்லா இருக்கு...ஆனால் நான் எதிர்பார்த்த மூடிவு வேறு..போனை திருடியவன் அந்த சிறுவன் அடிவாங்கும் சம்பவத்தை பார்த்து கொண்டிருக்கும் போதே செல்லை இழந்தவர் போன் பண்ணுவது போலவும் ..நம்ம திருடன் அட்டண்ட் செய்து ஹலோ சொல்வதை போல் இருக்குமென நினைதேன்..இதுவும் நல்லா தான் இருக்கு .நன்றி...அப்படியே என் வலைபதிவுக்கு வந்து பாருங்க..படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

5:15 AM  

Blogger Karthikeyan said...

மிக்க நன்றி மகேஷ்.

அதெல்லாம் தானா வருது :))

12:02 AM  

Blogger Karthikeyan said...

அட இதுகூட நல்லாயிருக்கே கார்த்திக்...
மிக்க நன்றி உங்க பதிவுகளை பார்த்தேன்...

உங்கள் 'பின்னூட்ட ஈர்ப்பு தீர்மானம்' வெற்றி பெற என் வாழ்த்துக்கள்...

அன்புடன்
கார்த்திகேயன்

12:05 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home