வேரறுந்த மரங்கள்...(ஒரு சின்ன கதை)
"எத்தனை கன்னு சார் எடுக்கப்போறோம்?"
"அம்பது கன்னு பாலு"
ஒரு மரம் நடும் விழாவிற்காக வேளச்சேரி நர்ஸரியிலிருந்து செடிகள் எடுக்க போய்க்கொண்டிருக்கிறோம்...நான் போயிருந்த பஸ்சின் டிரைவர்தான் பாலு.
பேருந்து பல நிறுத்தங்களை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை, அம்மா சொன்னது மட்டும் அடிக்கடி காதில் ஒலித்துக்கொண்டிருந்தது...
"படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது...உனக்கும் காலாகாலத்துல கல்யாணம் முடிக்கணும். உனக்கு கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அவங்களுக்கு ஒரு கல்யாணங்காட்சி பண்ணனுங்கிறத மறந்திடாத ஆமா. இப்படி 'சேவை சேவை'னு சுத்திக்கிட்டிருந்தா என்னைக்கு வேலைக்குப்போறது...?"
என்ன செய்வது? வாழ்க்கையும் வயதும் ஓடிக்கொண்டிருக்கிறது...
"என்ன யோசனை சார்?" பாலு கேட்டதும் நினைவு வந்தது.
"ஒண்ணுல்ல பாலு. உங்களுக்கு நர்ஸரி இருக்கிற இடம் தெரியுமா?"
"தெரியும் சார். செக்போஸ்ட் முன்னால் இருக்கு சார்.பஸ் உள்ளே போகமுடியாது. வெளியிலிருந்துதான் எடுத்துக்கணும்."
கொஞ்சம் அமைதியானவர்,
"எந்த ஊர் சார் நீங்க?"
"நான் மதுரைப்பக்கம் பாலு...நீங்க..?"
"சிதம்பரம் சார். ரொம்ப நாளுக்கு முன்னாடியே சென்னைக்கு வந்தாச்சு. என் மச்சானும் இங்கதான் டிராவல்ஸ் வச்சிருக்கான்... ரெண்டு கார் இருக்குங்க சார். செம காசு சார்"
"பரவாயில்லையே... என்ன வச்சிருக்கார் குவாலிஸா?"
"இண்டிகா சார்...குவாலிஸுக்கு காசு கிடையாதுன்னான். சிக்கிரமே அதுவும் எடுத்துறுவான்."
சட்டென அமைதி நிலவியது.காரணம் நர்ஸரி வந்திருந்தது.
ஒரு சின்ன வாயிலோடு அது இருந்தது...ஒரு சின்ன கார் போகலாம்போலிருக்கிறது. ஆனால் பஸ் போக வாய்ப்பு இல்லை.
"நீங்க போய் பாத்துட்டிருங்க சார். நான் வண்டிய வாசல்ட்ட நிறுத்திட்டு வர்றேன்"
ஒரு ஒழுங்கோடு வரிசையாக எல்லா கன்றுகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நன்றாக வளர்ந்திருந்த மரங்கள் காற்றில் அசைந்து இருப்பை உணர்த்தின.
கூலியாள் ஓடிவந்தான், "என்னங்க வேணும்?"
"எங்களுக்கு 50 கன்னு மரம் நடுறதுக்காக வேணும்னு கேட்டிருந்தோம். இங்க வந்து எடுத்துக்கச்சொன்னாங்க. உங்க பேர்தான் சகாயம்ங்களா?"
"ஆமா சார். ஆபிஸர்ட்டருந்து ஆர்டர் வாங்கிருக்கீங்களா?" ஆர்டரைக் கொடுத்தவுடன், "வாங்க சார். எடுத்துத்தர்றேன்" என்று முன்னே நடந்தான் சகாயம்.
"நல்லா நிழல் தர்ற செடி தாப்பா"
"தர்றேன் சார். இதை பாருங்க?"
"பாலு இது நல்லா நெழல் தருமா பாருங்க"
"இது சவுக்கு கன்னு, வேணாம் சார் வேஸ்ட்டு. புங்கையோ வேப்பமரமோ இருந்தா பார்க்கலாம் சார். நல்ல நெழலும் தரும்,குளிர்ச்சியாவும் இருக்கும்...ஏங்க புங்கை வச்சிருக்கீங்களா"
"புங்கையெல்லாம் இருக்காதுங்க வேம்பு தர்றேன். நல்லா நெழல் கெடைக்கும்" என்றான் சகாயம்.
ஏதோ சிந்தனையிலிருந்த பாலு, "விலைக்குன்னா எவ்ளோ ஒரு கன்னு?"
"நுப்பது சார்.இப்போ இருக்குற ஆபிசரு கண்டிப்பானவரு சார். அதான் இல்லாட்டி நானே போட்டுக்கொடுத்துடுவேன். விலைக்கு எடுக்குறதாருந்தா சொல்லுங்க பண்ணிக்கொடுத்துர்றேன்"
"எனக்கு வேணும்பா. வேப்பங்கன்னு ஒண்ணு குடுத்துரு.முப்பது ரூபா தர்றேன்" பாலுவை ஆச்சரியமாக பார்த்தேன்.
"அது எங்கம்மாவுக்கு சார்...செடி வளக்குறதுனா அவ்ளோ உயிர் அவங்களுக்கு"
"அப்பிடியா. பரவாயில்லையே...ஆனா வேம்புதான் ரொம்ப சுலபமா கெடைக்குமே ஏன் காசு கொடுத்துவாங்கணும்?"
"ஒரு சின்ன சந்தோஷம்தான் சார்... வர்ற வருமானம் நமக்கே சரியா இருக்கு... வீட்டுக்கு எதுவும் அனுப்பமுடியல. அப்பப்போ இதமாதிரி ஏதாவது செஞ்சாதான் ஆறுதலா இருக்கு"
"இவ்ளோ தெளிவா சிந்திக்கிறீங்க...ஏன் சொந்தமா டிராவல்ஸ் வச்சுக்கக்கூடாது?"
"பண்ணணும் சார். ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு இருக்கேன். மொதல்ல நிறைய்ய கத்துக்கணும். பொறுப்பு எடுத்துக்கும்போது என்னன்ன சிக்கல் வரும்னு தெரியவேண்டாமா?"
ஒரு பெருமூச்சுடன் மேலும்,
"படிச்சிருந்தா உங்கள மாதிரி ஆபிசரா ஆகியிருந்திருக்கலாம். படிப்பு ஏறல. பாதிலயே கார் ஓட்ட வந்துட்டேன். படிப்பு ஒரு நிழல் மாதிரி சார். எப்பவும் கூடவே இருக்கும். என்னை நினைச்சுக்கிட்டா நிழல் இல்லாத மரம்தான் ஞாபகம் வருது. .."
சகாயம் ஓடி வந்தான்...
"சார் எல்லா செடியும் ஏத்தியாச்சு. இதுல ஒரு கையெழுத்து போட்டிருங்க"
"பாலு வண்டிய திருப்பிட்டு வாங்க"
தனது இருக்கையில் அமர்ந்த பாலு திரும்பிப்பார்த்தார்.
பஸ்சுக்குள் ஒரே செடி மயம். மண்வாசனை வேறு. புதிதாக பிறந்ததுபோன்ற ஒரு உணர்வு தோன்றியிருக்கவேண்டும்...
டிரைவர் பாலு, கிடைத்த ஒன்றிரண்டு இலை இடைவெளிகளில் முகம் காண்பித்து என்னை நோக்கி குழந்தைமாதிரி சிரித்தார்...
படிப்பு, நிழல் போல என்பது உண்மைதான். ஆனால் நம்பிக்கை மரத்திற்கு வேர் போன்று முக்கியமானது...
என்றாவது வெற்றியடைவேன் என்று சொல்லாமல் சொல்லிய அவர் சிரிப்பிலிருந்து, எனக்குள்ளும் ஒரு புதிய மனிதன் பிறந்திருந்தான்...
3 Comments:
அன்பின் கார்த்தி..,
கதை நல்லா வந்திருக்கு.. இது கதை மட்டும் தானா? அல்லது நடந்த கதையா? நடந்த சம்பவெமென்றால் இன்னும் சந்தோஷம்.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
நன்றி சீமாச்சு... வாழ்க்கையில் பலயிடங்களில் கண்டுகேட்டுஅறிந்த விஷயங்கள்தான் படைப்புகளாகின்றன. இதுவும் அது போலத்தான். நாம் பார்க்கிற பெரும்பான்மையான மனிதர்களின் சாயல் இந்த மூவரில் உண்டு...(மரம்நடுவிழாவிற்காக வேளச்சேரியில் கன்றுகள் எடுக்கப்போனது உண்மைதாங்க)
//படிப்பு ஒரு நிழல் மாதிரி சார். எப்பவும் கூடவே இருக்கும். என்னை நினைச்சுக்கிட்டா நிழல் இல்லாத மரம்தான் ஞாபகம் வருது. .."
படிப்பு, நிழல் போல என்பது உண்மைதான். ஆனால் நம்பிக்கை மரத்திற்கு வேர் போன்று முக்கியமானது...//
நல்லதொரு படைப்பு, வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home