கடுக்காய் வைத்தியர்

புகழ்பெற்ற வைத்தியர் ஒருவருக்கு, தன் முட்டாள் மகனின் முன்னேற்றத்தைப்பற்றி பெரிய கவலை...

அதனாலேயே ஒருநாள் உயிர் துறந்துவிட்டார்.

தந்தையின் காலத்திற்குப்பிறகு, 'வைத்தியம் பார்க்கப்படும்' என்று அறிவித்துக்கொண்டான்...

ஒருத்தன் வந்தான்.காணாமல்போன தன் விலையுயர்ந்த நகை திரும்பக்கிடைக்க ஒரு வைத்தியம் சொல்லுமாறு கேட்டான்.

"4 கடுக்காய்கள் சாப்பிடு! நகை கிடைக்கும்" என்றான் தயக்கமில்லாமல்.

4 கடுக்காய்கள் சாப்பிட்டவனுக்கு வயிறு தாங்காமல் பேதியாயிற்று...

அடிக்கடி குளத்தங்கரைக்கு போய் தளர்ந்து அங்கேயே படுத்துவிட்டான்...காற்றில் அசைந்த மரத்தின் உச்சியிலிருந்து, சிறிய துணிமுடிப்பு ஒன்று கீழே விழுந்தது...எடுத்துப்பார்த்தால் தொலைந்த நகை !

கடுக்காய் வைத்தியர் புகழ் பரவிற்று...

அந்நாட்டு மகாராணியார் ஒரு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ("எப்பொழுதும் அந்தப்புரத்திலேயே இருக்கும் மன்னர் திரும்பிவரவேண்டும்")

"6 கடுக்காய் கொடுங்கள்" என்று தனக்குத் தெரிந்த வைத்தியத்தை சொன்னார் வைத்தியர்...

உள்ளே போன கடுக்காய்கள் சும்மா இருக்குமா?
மன்னருக்கு பயங்கர பேதியாகி, அரண்மனையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
'என்ன ஆச்சோ?' என்று பதற்றத்துடன் பணிவிடை செய்த மனைவியின் அன்பைப்புரிந்துகொண்டார்.

தன் திறமையால்(?) அரண்மனை வைத்தியர் ஆகவும் ஆனார்.

சிலநாட்களுக்குப்பிறகு, மன்னர் கவலையுடன் இருப்பதைக்கண்ட மகாராணி, 'என்ன ஆச்சு?' என்று வினவ, "பக்கத்து நாட்டு மன்னன் பெரும்படையுடன் போருக்கு வருகிறான். சிறுசைனியத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என வருந்தினார்.

"இதுக்குப்போயா கவலைப்படுவது? நம் அரண்மனை வைத்தியரிடம் சொன்னால் ஏதாவது செய்வாரில்லையா?"

"நம் படையிலுள்ள அத்தனை பேருக்கும் தலா 10 கடுக்காய்கள் கொடுங்கள்" என்றார் வைத்தியர்...

ஒற்றர் மூலம் இதையறிந்த பக்கத்துநாட்டு மன்னன் தன் சைனியத்திற்கு தலா 20 கடுக்காய்கள் தர உத்திரவிட்டான்.

20 கடுக்காய்கள், 10 கடுக்காய்களை விட அதிகமாக வேலையைக்காட்டியது.

போரில் அண்டைநாட்டு மன்னன் தோற்றோடினான்.

கடுக்காய் வைத்தியருக்கு விலையுயர்ந்த வெகுமதிகள் தரப்பட்டன...

தனக்குத் தெரிந்த எல்லா மருத்துவத்தையும் சொல்லிவிட்டவருக்கு, இப்பொழுதுதான் பயங்கர பயம்.

தன் வீட்டுக்கு தீ வைத்தார். ("மருத்துவக்குறிப்புகள் எல்லாம் சாம்பாலாகிவிட்டன. இனி என்ன செய்யபோகிறேன்?")

மன்னர் அவருக்கு ஆறுதல் சொல்லி, அவர் வாழ்நாளுக்கு தேவையான வெகுமதிகள் கொடுத்து உதவிசெய்தார்.

**************

கதைசொல்லி: ஆகவே மக்களே...இதன் நீதி என்னவென்றால்...

பொதுஜனம்: 'கடுக்காயை மறக்கமுடியாது'. அதானே?

க.சொ: இல்லப்பா. 'வாழ்க்கையில தன்னம்பிக்கை முக்கியம்' அதான் நீதி.

பொ.ஜ: யே என்னப்பா இவன் இப்படி பழம் ஆகிட்டான்?

2 Comments:

Blogger G.Ragavan said...

அதெல்லாம் சரி. இப்ப எதுக்கு நீங்க கடுக்காய் கொடுக்குறீங்க?

5:14 AM  

Blogger Karthikeyan said...

:-0

கடுக்காய் உடம்புக்கு நல்லதுதானுங்களே...

;-)

9:15 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home