Saturday, December 09, 2006

வேடிக்கையான புகைப்படக்காரர்கள் (போட்டோ)

போட்டா புடிக்கும்போது, ஜப்பான் போட்டாக்காரர்கள் 'வடிவேலு'த்தனமாய் சில வேடிக்கை பண்ணுகிறார்கள் ...

நம்மூரிலும் கூடத்தான் இப்படி இருக்கிறார்கள்?

1.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

ஒரு மாறுதலுக்காக இந்த போட்டோ பதிவு....

:)))

Tuesday, December 05, 2006

திரும்பிப்பார்க்கிறேன்...

ஏதோ இப்போதுதான் தொடங்கியதுபோல இருந்தது...
ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்டது...
வலைப்பூ ஆரம்பித்து !

வருடத்தில், கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கையில், ஏகப்பட்ட வலைபதிவாளர்களின் சுவடுகள்...

என் காலடித்தடயத்தை கண்டேபிடிக்கமுடியவில்லை...

ஏதோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, 'இதோ ஒரு சுட்டி,இதோ ஒரு சுட்டி'என அவ்வப்போது 'உள்ளேன் ஐயா' போட்டுக்கொண்டிருக்கிறேன்...

இந்த ஒரு வருடத்தில், பெரிதாக எதையும் செய்துவிடவில்லை...
எல்லையற்ற ஊடகமான இணையத்தில், நல்ல நண்பர்களை சம்பாதித்ததைத் தவிர.

நிறைய எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது...
('அதற்கு நிறைய படிக்கவும் வேணும்' என்று நானே தாமதிக்கிறேன்)

மீண்டும் வருகிறேன்...ஒரு நல்ல நாளில் :))

Saturday, September 23, 2006

இது ஒரு சுட்டிதான்...

இந்த தளத்தில், 'செய்து பாருங்கள்' டைப்பில் சில பிராஜக்ட்கள் கொடுத்திருக்காங்க...
ஒரு லாப்டாப்பை வைத்துக்கொண்டு, நாமாகவே எப்படி ஒரு 'டிஜிட்டல் போட்டோ பிரேம்-ஐ' தயார் செய்வது என சொல்லித்தருகிறார்கள்...

வேலை செய்கிற/செய்யாத ரிமோட் கன்ட்ரோல், ஹார்ட்டிஸ்க், மவுஸ் போன்ற பொருட்களை வைத்து சில விசயங்களை நாமே செய்துகொள்ளலாம்...

ஒரு தடவை போய்ப்பாருங்கள் : http://www.grynx.com/projects/

Friday, August 25, 2006

(58) பிபிசியும், ஆள்மாறிப்போன பேட்டியும்..

நிஜத்தில் நிகழ்கின்ற சில வேடிக்கையான நிகழ்வுகள், திரைப்படங்களில் வருவதைக்காட்டிலும் அதிக சுவாரஸியமானவை.

இங்கே பாருங்கள்....

ஆப்பிள் நிறுவன வல்லுனரை பேட்டி எடுப்பதற்கு பதிலாக, கிட்டத்தட்ட அதே பெயரில் வராண்டாவில் உட்கார்ந்திருந்த ஒரு டாக்ஸி டிரைவரை (தெரியாமல்) கூட்டிவந்து, மைக் பொருத்தி, லைவாக பேட்டியெடுத்து...

உண்மையான வல்லுனர் இதை டிவியில் பார்த்து அதிர்ந்து... பிபிசியின் மீது வழக்கே போட்டுவிட்டார்.

தான் வந்திருப்பது தவறான பேட்டி என்பது கூட தெரியாமல் இந்த ஆசாமி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்வது இருக்கட்டும்... (அவர் அழைக்கப்பட்டிருந்தது ஒரு வழக்கு சம்பந்தமான பேட்டிக்காக... இவர் வந்திருந்தது வேலைக்கான நேர்முகத்தேர்வுக்காக)

பேட்டியின் தொடக்கத்தில், நியூஸ் ரீடரம்மா தன்னை 'வல்லுனர்' என்று சொல்கிறபோது, இவர் முகத்தில் தோன்றுகிற உணர்ச்சிகளை... இந்த நூற்றாண்டில் எந்த சிறந்த நகைச்சுவை படத்திலும் பார்த்திருக்கமுடியாது.


இங்கே அந்த வீடியோ


ஐயாதான் இப்போ திமிங்கிலம் (எல்லா பேட்டியிலும்)

யூ-ட்யூபில் Guy Goma என தேடல் போடுங்கள்

Sunday, August 20, 2006

ஆஞ்சநேயரும் அர்ச்சுனரும்...(தெரிந்த கதை?)

தன் சகோதரர்கள்(கெளரவர்கள்) மேல், கொடிய அஸ்திரங்களைப் பிரயோகிக்க மனமின்றி, பாசுபத அஸ்திரத்தை தேடிக்கொண்டுவர கிளம்பினார் அர்ச்சுனன்.(பாசுபதம் சற்று மயக்கமுறச்செய்யும். அவ்வளவே)

போகிற வழியில் அனுமன் தவம் செய்துகொண்டிருப்பதைக்கண்டார்.

அவரிடம் நக்கலாக,"உங்கள் இராமர் பெரிய வில்லாளி ஆயிற்றே. தான் ஒரே ஆளாக அம்பெய்தே ஒரு பலமான பாலம் கட்டமுடியுமே.. ஏன் குரங்குப்படையை வைத்து கற்களால் கட்டினார்?"

அர்ச்சுனின் கர்வத்தை அடக்கவேண்டும் என்ற கோபம் அனுமனுக்கு உண்டாயிற்று.

"அம்பால் ஆன பலமான பாலத்தை இப்பொழுதே கட்டுக. என் கால்சுண்டுவிரல் பட்டதும் அது சுக்குநூறாகும்"

அர்ச்சுனனும் விடவில்லை. "அப்படிமட்டும் நடந்தால், இங்கேயே வேள்வி ஏற்படுத்தி அதில் என்னை மாய்த்துக்கொள்வேன்" என சூளுரைத்தார்.

"நானும் சொல்கிறேன். அவ்வாறின்றி நான் தோற்றால் உமது போர்க்கொடியில் இருந்துகொண்டு, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு அடிமையாக இருப்பேன் "

உடனே, நாணில் அம்புகள் பூட்டி எய்து, ஒரு பாலம் உருவாக்கினார் அர்ச்சுனன். எத்தனைகோடி பேரையும் தாங்கும் பலமான பாலமாக அது இருந்தது.

இப்பொழுது, அனுமனுடைய முறை.

"ஜெய்ராம்" என்று இராமனைத் தியானித்ததும் அவர் உருவம் வளரத்தொடங்கியது...
பேருருக்கொண்ட அனுமன் பாலத்தின் மீது கால்வைத்தார்.

அந்தோ...எது நடக்கக்கூடதோ, அது நடந்தேவிட்டது. அனுமனின் கால்பட்டதும் பாலம் சுக்குநூறாகிப்போனது...

அனுமன் வெற்றிக்களிப்பில் ஆடினார். ஒடினார். கூக்குரலிட்டார்..

அர்ச்சுனனுக்கு அதிர்ச்சி... தமது வில் திறமை பொய்த்துவிட்டதே என்ற துக்கம் தாங்கமுடியவில்லை. வேறுவழியின்றி வேள்வி வளர்க்கத்தொடங்கினார்.

"வந்த நோக்கத்தை விட்டுவிட்டு, ஓர் அற்பக்குரங்கிடம் பந்தயம்கட்டி உயிரை விடப்போகின்றேனே... என் அண்ணனின் நிலையையும், என் கடமையையும் மறந்து, கர்வத்தால் மதிமயங்கிப்போனேனே. கண்ணா, என் இறைவா என்ன செய்யப்போகிறேன்" என்று கலங்கினார்.

தீக்குள் அர்ச்சுனன் குதிக்கமுற்பட்டபோது,"என்ன பிரச்சினை இங்கே?" என்றொரு குரல் கேட்டது.

பார்த்தால் ஒரு அந்தணன் நின்றுகொண்டிருந்தான்(அது கண்ணன் தான் என்பதை சொல்ல தேவையில்லை)

பந்தயத்தைப்பற்றி சொன்னார் அர்ச்சுனன்.

"பந்தயம் என்றாலே நடுவர் ஒருவர் வேண்டும். நடுவர் இன்றி நீ எப்படி தோற்றதாக கருதப்படும்?இப்பொழுது நான் நடுவராக இருக்கிறேன். உங்கள் போட்டியை மீண்டும் தொடங்குங்கள்"

போட்டி மீண்டும் தொடங்கியது.

தனக்கு கிடைத்த மறுவாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார் அர்ச்சுனன். கண்ணனை தியானித்துக்கொண்டே மீண்டும் அம்பெய்து ஒரு பலமான பாலம் கட்டினார்.

அனுமன் கவலையே படவில்லை.
தன் பலம்பற்றி தனக்கே தெரியாத சாபம் பெற்றிருந்த அனுமனுக்கு தன் வல்லமை புரிந்தவுடன் கர்வம் வந்திருந்தது...

"இதோ பார்...உன் பாலம் எப்படி நொறுங்கப்போகிறது பார்" என்றபடி பாலத்தின்மீது ஏறி நின்றார்...ஆடினார்...ஓடினார்...குதித்தார்...பாலம் மட்டும் அப்படியே இருந்தது...ஒன்றும் ஆகவில்லை.

"பார்த்தாயா என் மாமனின்(கண்ணன்) சக்தியை? உங்கள் இராமரால்கூட உம்மை காப்பாற்றமுடியவில்லையே" என்று கேலிசெய்தார் அர்ச்சுனன்.

"நிறுத்துக உமது கொக்கரித்தலை. எங்கள் இராமரைவிட உன் கண்ணன் அவ்வளவு பெருமைக்குரியவன் இல்லை"

"யார் பெரியவர் என்று நான் சொல்கிறேன்", திரும்பினால், விஷ்ணு நின்றார்...

"கர்வம் தோன்றும்போது நம் கடமையும் பொறுப்புகளும் மறந்துவிடுகின்றன...ஒரே பரம்பொருளின் இரு அவதாரங்கள்தான் இராமனும்,கண்ணனும்...அப்படியிருக்க இதில் யார் பெரியவன் என்பது அர்த்தமற்ற விவாதம். இருவருடைய பக்தியும் அளவுகடந்தது, சந்தேகமேயில்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணரமறந்துவிட்டீர்கள்"

இருவரும் நெகிழ்ந்து போய் நின்றார்கள்...

அனுமன் தான் சொன்னபடி அர்ச்சுனன் போர்க்கொடியில் இருந்துகொண்டு தன் வாழ்நாள்மட்டும் சேவை செய்தார்.

(ஆஞ்சநேயர் புராணத்திலிருந்து)

Sunday, July 16, 2006

இது பதிவல்ல... ஒரு சுட்டி.அவ்ளோதான்.

மோட்டர் ஜாம்பவனான Hondaவின் இந்த விளம்பரத்தை பாருங்க...
(முழு விளம்பரமும் பதிவிறக்கிவரும்வரை பொறுமையாகயிருக்கவும்)

ஸ்பீக்கர்லாம் ஆன்ல இருக்கா...
ஒகே ரெடி...ஸ்டார்ட் ஆக்ஷன்

http://www.ebaumsworld.com/flash/honda-ad.html

இயற்பியல் விதிகளில் சிறிதுகூட பிசகின்றி பண்ணியிருக்கிறார்கள்...

அன்புடன்
கார்த்திகேயன்

Friday, July 14, 2006

(55).கிளிசரின் தொடர்களும், குளுகோஸ் விளம்பரங்களும் !

நான் ஒரு 'விளம்பர'ப்பிரியன்...

அட, இருங்கப்பா...
முழுசா கேளுங்க.

இன்றைய காலக்கட்டத்தில் சீரியல் பாக்காதேனு சொன்னா, யாரு கேட்கிறா?

கொடூரம், கொடுமை, கெட்டது ஆகியவற்றை சிறு சிறு உருவகங்களில் புரியவைத்த காலம்போய்விட்டது. "நிஜத்தில் நடப்பதைத்தான் காட்டுகிறோம்" என்ற பசுத்தோலோடு வீட்டுக்கே வருகிறது வன்முறை.

கொடூரம் மிகைபடுத்தி மிகக்கொடூரமாக காட்டப்படுகிறது. எங்கோ நடக்கிற ஒன்றிரண்டு தவறுகள், சக்தி வாய்ந்த ஊடகங்கள்மூலம் பரப்பப்படுகின்றன.

(சமீபத்தில் நடந்த சில குற்றங்களுக்கு, டிவி தொடர்கள்தான் காரணம் என்று கூண்டில் ஏற்றுகிறார்கள் மனநோய் நிபுணர்கள்)

ஒருவகையில், தொடர்களால் ஏற்படுகிற மனயிறுக்கத்திற்கு, விளம்பரப்படங்கள் ஒரு மாற்றாக இருக்கின்றன.

சரி விஷயத்திற்கு வருவோம்...
எத்தனைபேர் சேனல் மாற்றாமல் விளம்பரம் பார்ப்பீங்க?

ஒரு விளம்பரத்தில், அமிதாப்ஜி பம்முபம்முவென்று பம்முகிறார்.
ஏன்...?
போகிற வழியெல்லாம் 'மாறுவேட' வாண்டுகளின் அன்புத்தொல்லை...
(அந்த குட்டி சர்தார்ஜி ஆடுவது நல்லாயில்லை?)

இன்னொரு அருமையான விளம்பரம்(பழசு)...
ஒரு அம்மா ஒரு பக்கம் தண்ணிய எடுத்து மேல கொட்டுவாங்க.
நம்ம மேலதான் கொட்டுறாங்களோனு இவர் கீழ சாய்வார்.
பாத்தா அந்தம்மா நடுவில இருக்கிற கண்ணாடிய துடைச்சிட்டிருப்பாங்க.

இன்னொரு விளம்பரம்.
இதுவும் பழசுதான்.
கல்யாணமாகி மகள் புக்ககம் போகிறாள்...
கவலையுடன் இருக்கிற பெற்றவர்களுக்கு, மாப்பிள்ளை சைகை காட்டுகிறார். 'நான் இருக்கிறேன். பாத்துக்கிறேன்...'
இதேபோல, புதிதாக பள்ளியில் சேரும் மகனை பற்றி தாய்க்கு டீச்சர் சொல்லுவது.... 'நான் இருக்கிறேன். பாத்துக்கிறேன்....'

இதேபோல் பெவிகால் டின்னில், குறுணை சாப்பிட்ட கோழி உடைக்கமுடியாத முட்டையிடுவது, ஒரு இடத்தில் உட்காராத அந்த ராஜஸ்தானிய குழந்தை பெவிகால் டின்னில் மட்டும் அமைதியாக உட்கார்ந்திருப்பது...
இவையெல்லாம் ஒரு புன்னகையையாவது வரவழைக்காமல் இருக்கிறதா?

ஜவுளி விளம்பரங்களை பாருங்கள்...
இரண்டொரு நிமடங்களில், குட்டித்திருவிழாவையே கொண்டுவந்துவிடுகிறார்கள்...

வாசகங்களும் ரசனையானவை...(உ.தா. 'தங்கம் வாங்க...தங்கமயிலுக்கு வாங்க...','எல்லா கலர் பட்டும், ஆரெம்கேவில மட்டும்')

அமைதியை, தொலைத்த இடத்தில்தானே தேடவேண்டும்... :)

அதனால, இனிமே என்ன பண்ணலாங்கிறீங்க?

அதான்...அதான்...ஆ...தே...தான்.

Thursday, June 29, 2006

(54) திருட்டிலிருந்து செல்போனை காப்பாற்றுவது எப்படி?

பஸ்சில் செல்போனைத் தொலைப்பவர்கள் மற்றும் திருட்டுக்கொடுப்பவர்களுக்கு சில உருப்படியான(மற்றும் உருப்படாத) யோசனைகள் இதோ:

  • செல்போனை வைப்ரேஷனில் இல்லாமல், ரிங்டோனை வைத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை தொலைந்தால், வேறொரு செல்போன் மூலமாக கால் பண்ணி, 'போன் பக்கத்தில்தான் இருக்கிறதா' என தெரிந்துகொள்ளலாம்.


  • காலை அவசரத்தில், குளிக்க மறந்துட்டீங்களா கவலையே படாதீங்க... எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், பஸ்சில் ஒரு பயல் கிட்டே வரமாட்டான்.
    அதோடு, ஏதாவது அழைப்பு வந்தால், பிளக்க பேசுங்கள். மிச்சமீதி இருக்கிறவர்களும் ஓடிவிடுவார்கள். அப்புறம் என்ன கவலை?


  • சட்டை/பேண்ட் பாக்கெட்டில் செல்போனை வைக்கும் பழக்கமுள்ளவர்கள், பாக்கெட்டில் போனை செங்குத்தாக வைக்காமல், படுக்கை வசமாக வைத்துக்கொண்டால், அவ்வளவு சுலபமாக 'சுட்டுவிட' முடியாது.


  • ஒரு கார்கோவை மாட்டிகொண்டு, அதன் ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு பொம்மை செல்போனை வைத்துக்கொள்ளவும். உண்மையான செல்லை எளிமையாகவும், போலி போனை பந்தாவாகவும் வைத்துக்கொண்டால், திருடன் எதைத் திருடுவது என்று குழம்பிப்போகக்கூடும்.


  • ரங்கநாதன் தெருவில், முப்பது ரூபாய்க்கு கிடைக்கும் 'சிலிக்கோன்' உறையை வாங்கி மாட்டிகொண்டால், இரட்டை பிரயோஜனம் உண்டு. அந்த இரண்டாவது உபயோகம், எளிதாக செல்போனை பாக்கெட்டிலிருந்து உருவமுடியாது.


  • ஒரு ரோப் அல்லது கிளிப்ட் டேக்(ஒரு முனையில், சட்டையோடு பொருத்திக்கொள்ள கிளிப் இருக்கும்) வாங்கிப்பயன்படுத்துவது சாலச்சிறந்தது.


  • நம்மைத்தவிர வேறுயார் தொட்டலும், அலாரம் அடிக்கிற இன்டெலிஜண்ட் போன் வைத்துக்கொண்டால்,திருடன் போனை தொட்டவுடனே பிடித்துவிடலாம்.(அப்புறமென்ன, 'தொட்டால் பெல் அலறும்...' என்று தலைவரின் 'படகோட்டி' பாட்டை பாடிக்கொண்டே ரெண்டு போடுபோடவேண்டியதுதான்)


  • அடிக்கடி 'உள்ளே வெளியே' செய்யாதீர்கள். தொடர்ந்து போன் வரும் என்பதாகத்தெரிந்தால், போனை பாக்கெட்டில் வைக்காமல், கையிலேயே வைத்துக்கொண்டு, போனில் ஏதோ பார்த்துக்கொண்டிருப்பதுபோல வைத்துக்கொண்டிருங்கள்(கேம் விளையாடலாம், எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருக்கலாம்). உங்கள் கவனம் முழுவதும் செல்போனில் இருப்பதால், யாராவது தொடுவார்கள்?


  • நாமே திருடன் போல (மதன் கார்ட்டூனில் வருவது போல) கெட்டப்பில் இருந்தால், அருகில் யாரும் வரமாட்டார்கள்.


  • இவ்வளவையும்மீறி செல்போன் தொலைந்துவிட்டால், அதற்காக வருந்திக்கொண்டிருக்காமல், செய்யவேண்டிய சில விஷயங்கள்...சிம்கார்டை வேறுயாரும் சமூகவிரோதமாக பயன்படுத்துவதற்குமுன் தடைசெய்யவேண்டியது... முன்னேற்பாடாக, அனைத்து போன் நம்பர்களையும் குறித்துவைத்திருந்த சிறுகுறிப்பேடுகளை பயன்படுத்துவது...


  • ஆமா, எதற்காக செல்போன்? அது இல்லாமல் வாழவே முடியாதா? அதனால...நான் சொல்லவர்றது என்னான்னா...இருக்கிற இந்த 'நிம்மதியின்மையை' விற்றுவிட்டு, வாழ்க்கையில் நிம்மதியாக இருங்கள்.(பல டெலிமார்க்கெட்டிங் கால்களிலிருந்தும், forwarded எஸ்.எம்.எஸ்-களிலிருந்தும் எஸ்கேப்)


  • (ஒரு முக்கியமான விஷயம், தடியெழுத்தில்(bold) இல்லாத குறிப்புகள் பின்பற்றுவதற்கானது அல்ல)

    Sunday, June 25, 2006

    6 மனமே 6...

    ஆறு விளையாட்டுக்கு செல்வன் சார் அழைத்திருந்ததன் பேரில், இந்தப்பதிவு...

    இந்த ஆறு விருப்புகள் எல்லாம் தற்சமயம் ஞாபகத்திற்கு வந்தவை மட்டுமே...
    இன்னும் பிடித்தவைகள் இருக்கலாம்...

    ஆறு புத்தகங்கள்

    கல்கியின் நாவல்கள்,
    சிபிஐயின் முன்னாள் அதிகாரி நரசிம்மன் அவர்களின் வாழ்க்கை சம்பவங்கள் அடங்கிய ஒரு புத்தகம்(மீண்டும் படிக்க ஆசை...எங்கு கிடைக்கும் என்று யாராவது சொல்லுங்களேன்), சுஜாதா அவர்களின் கேள்வி-பதில் நூல்கள்,
    மதனின் 'வந்தார்கள் வென்றார்கள்', பிற சரித்திர நாவல்கள்,
    சில சுயமுன்னேற்ற நூல்கள்...

    முணுமுணுக்கும் ஆறு பாடல்கள்

    குழலூதும் கண்ணனுக்கு...
    ஒரு கிளி உருகுது...
    ஆவாரம்பூவு...(அச்சமில்லை2)
    கீரவாணி...
    சுவாரஸ்யமானது காதல்...(கோடம்பாக்கம்)
    tanha dil...(ஷான்)

    (இந்த லிஸ்ட் பெரியது...இளையராஜாவின் மோகன், ராமராஜன் பாடல்களை ஒன்று விடாமல் சேர்த்துகொள்ளவும் :) )

    ஆறு காமெடியன்கள்

    சார்லி சாப்ளின், கலைவாணர், நாகேஷ், வடிவேலு, விவேக்,ரோவன்('மிஸ்டர் பீன்' போகோ உபயம்)...

    ஆறில் பூ (மிதந்து) வரும், (தமிழ்ப் வலைப்)பூவில் ஆறு வருகிறதே !!! ஹி..ஹி...

    அன்புடன்,
    கார்த்திகேயன்

    Saturday, June 24, 2006

    (52) நீங்கள் எப்படிப்பட்ட ப்ளாக்கர்?

    இணையத்தில் இந்த தளத்தில், நீங்கள் எப்படிப்பட்ட ப்ளாக்கர் என்பதை சொல்வதற்கு காத்திருக்கிறார்கள்... ஒரு சில கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் நீங்களும் தெரிந்துகொள்ளலாம்...

    நான் கொடுத்த பதில்களின் அடிப்படையில் எனக்கு வந்தது இதுதான்...

    Your Blogging Type is Confident and Insightful

    You've got a ton of brain power, and you leverage it into brilliant blog.
    Both creative and logical, you come up with amazing ideas and insights.
    A total perfectionist, you find yourself revising and rewriting posts a lot of the time.
    You blog for yourself - and you don't care how popular (or unpopular) your blog is!


    மேலே அங்கங்கே, Brain powerனும், Brilliantனும் சொல்லியிருப்பாங்க...

    அதையெல்லாம் கண்டுக்காதீங்க...ஹி..ஹி...

    Saturday, June 10, 2006

    (51) பதிவுகள் படிக்கப்படவேண்டும்.

    வியாழன் காலை சன் செய்திகளில், தமிழ் ப்ளாக்குகளை பற்றி ஒரு செய்தித்தொகுப்பு வந்தது. இதுபோன்ற promotions நல்லதுக்குத்தான். இன்னும் சில ஆயிரம் புதியவர்கள், தமிழ் பதிவுகளை படிக்கத்தொடங்கியிருப்பார்கள்...

    வெளிநாடுகளில், 'ப்ளாக்கர்' என்றால் புரட்சியாளன், 'ப்ளாக்' என்றால் ஆயுதம். ஆனால் இங்கே அப்படியில்லை. காரணம், இணையத்திற்கு போய் படிக்கிறவர்கள் எண்ணிக்கை குறைவு.

    பதிவர்களுக்கு, பொதுவான உள்விருப்பம் ஒன்று உண்டென்றால் அது தமது பதிவுகளை நிறையபேர் படிக்கவேண்டும் என்பதுதான்.

    ஒரு பதிவோ படைப்போ இணையத்தோடு இருந்துவிட்டால், அதைப்படிக்கப்போவது வெகுசிலரே. அதனால், உலகெங்கிலும் உள்ள (இணையப்பக்கமே போகாத) தமிழர்களையும் படிக்கச்செய்வதற்கு ஒரே வழி - 'பதிவுகளை அச்சுவடிவில் கொண்டுவருவதுதான்'.

    ஏராளமான சிற்றிலக்கிய நண்பர்கள் அச்சிலிருந்து இணையத்திற்கு மாறிவந்தவர்கள் என்பதால், அவர்களும், என் போன்ற புதியவர்களும் இந்த விஷயத்தில் ஆர்வமாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

    அதற்கு முதலில் என்ன செய்யவேண்டும்? தமிழ்மணம் இணையத்தில் செய்கிற சேவையை, அச்சில் புத்தகமாகவோ, இதழாகவோ தொடங்கலாம்.இதை விற்பனைக்கும் அனுப்பலாம்.(பின்னே காசு போடுறாங்கல்ல).

    எந்த பதிவுகளை அச்சில் கொண்டுவருவது?
    அதிக பின்னூட்டப்பெற்ற பதிவுகள் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட பதிவுகள்.
    (ஆசிரியர்கள்,மற்றவர்களின் படைப்புகளை சுருக்கக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனை)

    சரி, இதனால் பதிவாளர்களுக்கு என்ன லாபம்?
    ஏற்கனவே Royalty மற்றும் copyright ஆகியவைகளை எதிர்பார்க்காமல் பதிவுகளில் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு, இங்கேயும் விட்டுத்தர வேண்டுகோள் விடுக்கலாம்.
    'நிறைய தமிழர்கள் படித்தார்கள்' என்ற விருப்பம் ஈடேறுகிறதே?

    வாசகர் கடிதத்தின் மூலம் இன்னும் மெருகேற்றலும் செய்யலாம்.

    எதிர்ப்பார்க்கக்கூடிய ஒரே ஒரு பிரச்சனை - "உள்ளடக்கத்தகவல் உரிமை".டான் ப்ரெளவுனுக்கும் இந்தப்பிரச்சனை வந்தது. 'தான் கண்டறிந்த உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான் 'டாவின்சி கோட்'.அதற்கு நஷ்ட ஈடு தரவேண்டும்' என ஒருத்தர் இவர்மீது வழக்கு தொடர்ந்தார்.(ஆனால் தீர்ப்பு - "இது plagiarism அல்ல. நஷ்ட ஈடு எதிர்பார்ப்பது முறையாகாது")

    நமது பதிவாளர்கள் பெரும்பாலும் மேற்கோள் காட்டுவது, பிரபல பத்திரிக்கைகளின் படங்களையும் கருத்துக்களையும் வைத்துதான் என்பதால், அம்மாதிரி பதிவுகளுக்கு சிக்கல்கள் உண்டு.

    'எல்லாம் சரி...இவ்வாறு அச்சாக வெளிவந்தால், இணையத்தில் நமது பதிவுக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமே...'

    அதற்கும் வழியுண்டு...'குங்குமம்' ஸ்டைலில், "இந்த வாரம் தமிழ்ப்பூவில்..." என்று ஆங்காங்கே கட்டம்கட்டி சொல்லி, முகவரியையும் கொடுத்துவிட்டால், அவர்களாக வந்து ஆன்லைனில் படித்துக்கொள்ளப்போகிறார்கள்... :-)

    இந்த யோசனையால், இணையத்தில் படிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர குறையவாய்ப்பில்லை.

    என்ன சொல்றீங்க?

    Sunday, May 28, 2006

    (50). திருடியவனும், தொலைத்தவனும் (இரட்டைக்கதை)

    ஒரு பொருள் காணாமல்போகிறது. அதோடு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் அடுத்து என்ன ஆகிறார்கள்? அந்த இருவரும் தங்களுக்கு நேர்ந்ததை கதையாக்குகிறார்கள்.

    'நான்' தொலைத்தவன்

    பஸ்சின் நகர்வுக்கு ஏற்றபடி பின்னோக்கி நகர்ந்த மரங்களையும் கட்டிடங்களையும் பார்த்துக்கொண்டே இருந்த மனமும் பழைய நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தது.

    நெரிசலில் நகரக்கூட முடியாமல் ஒரே இடத்திலேயே நின்றேன்.

    அங்கிங்கு மக்கள் இடம்பெயரும்போது மட்டும், சிறுசிறு இடைவெளிகளில் மெல்லிய காற்றுக்கு விடுதலை கிடைத்தது. வாழ்க்கை பயணமும் இப்படித்தானே, கவலை நெரிசலில் திக்குமுக்காடியிருக்கும்போது அவ்வப்போது இந்த காற்று போல மகிழ்ச்சியும் வீசுகிறது.

    அடுத்த நிறுத்தத்தில் உட்கார இடம் கிடைத்தது... தன்னிச்சையாக பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டுபொழுதுதான் உணர்ந்தேன்...'பகீர்' என்றது. மொபைலைக் காணவில்லை...

    'அய்யோ, யார் எடுத்திருப்பார்கள்?இல்லை தவறிக்கீழே விழுந்திருந்திருக்குமோ?' கீழே குனிந்து பார்த்தேன்... பார்வையின் எல்லைவரை இல்லை...

    சந்தேகத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தேன்... ஒன்றும் நடவாததுபோல அமைதியாக நின்றிருந்தார்கள் அருகிலிருந்தவர்கள். செல் திருடுப்போன என் அதிர்ச்சிக்கும், இவர்களின் ஒன்றும் அறியாத அமைதிக்கும் போர் ஆரம்பித்திருந்தது.

    அருகிலிருந்தவரிடம், "சார் ஒரு உதவி... என் செல் தவறி பஸ்சுகுள்ள விழுந்துடுச்சு... ப்ளீஸ் ஒரு ரிங் தர்றீங்களா? நம்பர் சொல்றேன்"

    நம்பர் டயல் செய்து பார்த்தபொழுது, "ரிங் போகுதுங்க. நீங்க சைலண்ட்ல வக்கல இல்ல.பஸ்ல இருந்திருந்தா இந்நேரம் சத்தம் வந்திருக்குமே சார். போனை பிக்பாக்கெட் அடிச்சிருக்காங்க சார். போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுங்க. இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது."

    அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்கினேன்.

    இழப்பு...ஏமாற்றம்...மனமெல்லாம் ஏமாற்றத்தின் காயம்.வாங்கி இரண்டு மாதங்கள்தான் ஆகிறது...வேலை தேடும் விஷயமாக அத்தனை நம்பர்களும் ஈமெயில்களும் அதில்தான் இருந்தன...அவ்வளவு நம்பர்களையும் பெற்று மீண்டும் தேடுதலை ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் பிடிக்கும்போலிருக்கிறது..

    என்ன செய்வது?கவனக்குறைவாக இருந்தததற்கு நல்ல தண்டனைதான். திருடியவனைக் காட்டிலும் திருட வாய்ப்பு தந்தவனே அதிக தண்டனைக்குறியவன்.

    சிம் சேவையாளர்க்கு போன்போட்டு சிம்மை 'லாக்' பண்ணசொல்லிவிட்டு, பூத்திலிருந்து வெளியில் வந்ததும் வீட்டுக்கு நொந்தபடி பஸ் ஏறினேன்...

    மறுநாள்... "சிம்மை லாக் பண்ணிட்டாங்களானு செக் பண்ணிக்கங்க சார். இல்லாட்டி எடுத்தவன் உங்க போனை தவறா பயன்படுத்தறதுக்கு வாய்ப்பிருக்கு!!!" என்றார் நண்பர்...

    அதிர்ச்சியுடன் நண்பர் செல்லை வாங்கி, நம்பரை டயல் செய்தவுடன் ரிங் போகத்தான் செய்தது...

    "ரிங் போகுதா சார்?"

    "போகுது... இன்னும் சிம்மை லாக் பண்ணாமல் வயிற்றில் புளியை..." என் பேச்சு நின்றது...

    காரணம்...
    மறுமுனையில் ரிங் நின்று யாரோ பேச முயன்றார்கள்.
    நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருந்தது

    "அலோ..." என்றது மறுமுனை.

    'நான்' திருடியவன்

    'பஸ்சில் சரியான கூட்டம். நமக்கும் இதுதானே வசதி. அதோ ஓரமாக நிக்கிறானே அந்த டிப்டாப் ஆசாமியிடம் ஏதாவது தேறுகிறதா பார்க்கலாம்.'

    கூட்டத்தின் நெரிசலில் ஒரு எத்து எத்தினாலும் அவன் உஷாராகவில்லை. தீவிரமாக ஏதோ சிந்தனையிலிருக்கிறான். இதுதான் சரியான சந்தர்ப்பம்.

    மெல்ல அருகில் நெருங்கினேன்...அவன் பாண்ட் பாக்கெட்டில் விரல்விட்டு தேடும்போது கிடைத்தது, ஒரு மொபைல் போன். 'விடு ஜூட்!!!' அடுத்த ஸ்டாப்பிலேயே இறங்கினேன்.

    "காமிரா செல் வேற. சும்மா அஞ்சாயிரத்தி சொச்சம் தேத்தலாம்.மாமு உனக்கு மச்சம்டா !!!" என்றான் நண்பன்.

    திடீரென செல் ரிங் அடித்தது.

    "மாமு எடுத்திராத. பிரச்சனையாயிடும். அப்படியே கொஞ்ச நேரம் அடிச்சிட்டிருந்துட்டு கட்டாயிடும்.விட்டுரு" அடித்துமுடித்தவுடன், "எக்குதப்பா வர்ற காலை அட்டெண்ட் பண்ணி சிக்கல்ல மாட்டிகிடாதப்பா. ஜாக்கிரதை" என்றவன், "சரி நாளைக்குதான் இதை விக்க முடியும்.காலைலதான் ராசு வர்றானாம்"

    சிந்தனை ஆகாயத்தில் பறந்தது.'இந்த மொபைல் விற்ற காசில் அண்ணன் பெண்ணான சரசுக்கு நிறைய துணிமணி வாங்கிக்கொடுக்கணும். சித்தப்பா சித்தப்பானு உயிர விடுவாளே'

    அண்ணன் வீட்டைத்தாண்டிதான் என் வீட்டுக்கு போகவேண்டும். அண்ணன் வீட்டுமுன்னே கூட்டம் கூடியிருந்தார்கள்.

    என்னவோ ஏதோவென்று பதறி கூட்டத்தை விலக்கிவிட்டுப்பார்த்தால், ஒரு சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

    "அய்யா அய்யா இனிமே பண்ணமாட்டேன்யா வுட்ருங்க திருடறதையே வுட்றேன்யா",பொடியன் கதறினான்.

    "ஏய்யா சின்னபயலை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?"

    "சும்மா இருப்பா இவனா சின்னப்பையன். நம்ம சரசுவோட பர்சை திருடிருக்காம்பா. இப்ப அவனாவே வந்து மாட்டிக்கிட்டான்யா. விடுவமா இவனை?"

    "ஏண்டா உனக்கா கைகால்-லாம் நல்லாத்தானே இருக்கு சொல்லுடா சொல்லு" மேலும் சில அடிகள் விழுந்தன.

    "ஏண்டா திருடுன? திருடறது தப்புனு தெரியாது?"('அறிவுரை மத்தவங்களுக்குதானே?')

    "தங்கச்சிக்கு ஒடம்புக்கு முடியலண்ணே. அம்மா போட்டிருச்சு. மருந்து வாங்க காசு இல்ல. அதான் பர்சை எடுத்திட்டேன்..."

    "செய்யறதையும் செஞ்சிட்டு தங்கச்சிக்கு அம்மை போட்டிருச்சுனு புளுகுறான். இவனை போலீஸ்ல புடிச்சுகுடுங்கையா முதல்ல"

    "வேணாம் அவனை விட்டுருங்க" என்றாள் சரசு.

    எல்லோரும் கேள்வியோடு அவளைப்பார்த்தார்கள், "அந்தப்பர்சில்தான் என் மேற்படிப்பு விஷயமாக நிறைய குறிப்புகளை வச்சிருந்தேன். அதுவும் தொலைந்திருந்தால் என் மேற்படிப்பு கனவு, கனவாவே இருந்திருக்கும்."

    "பணத்தை எடுத்துகிட்டு பர்சை தூக்கிபோடுடாலாம்னு நெனச்சவன், பர்சுல நெறைய பேப்பர் இருந்தத பாத்துட்டு, 'ஏதோ முக்கியமான பேப்பரா இருக்கப்போவுது'னு திரும்பக்கொண்டாந்து கொடுத்திருக்கான். தூக்கிப்போடணும்னு நினைச்சிருந்தான்னா எல்லாமே வீணாப்போயிருக்கும். அதனால இவனை மன்னிச்சு விட்டுடலாம். "

    இரவில் தூக்கம் வரவில்லை...
    புரண்டு புரண்டு படுத்தேன்.

    'ஒரு சிறுவனிடம் இருக்கின்ற நட்பு உணர்வும், பொறுப்பும் எப்படி எனக்கில்லாமல் போனது? இந்த செல்போனில்கூட முக்கியமான தொடர்புக்குறிப்புகள் இருக்ககூடும். இவைகளை சேகரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்!!!'

    எனக்கே என்னை நினைத்தால் வெட்கமாக இருந்தது.
    காலையில் எழுந்தவுடன் எப்படியாவது அவனைத் தேடிப்பிடித்து திரும்பக்கொடுத்துவிடவேண்டியதுதான்...

    மறுநாள்...
    செல் ரிங் அடித்தது...
    போனை காதருகே வைத்தேன் தயக்கமின்றி.
    "அலோ..." என்றேன்

    Thursday, May 18, 2006

    பேனாச்சுமை... (ஒரு கதை)

    பஸ்சில் சரியான கூட்டம்...
    நிற்கக்கூட இடமில்லை...
    தப்பித்தவறி ஒரு காலைத்தூக்கிவிட்டால் போச்சு, அந்த இடமும்போய் ஒரு காலிலேயே நிற்கவேண்டிய நிலைமை ஏற்படும் போலிருக்கிறது...
    ஏதாவது நிறுத்ததில் நிறைய பேர் இறங்குவார்கள் என்று பார்த்தால், மேலும் மேலும் ஏறத்தான் செய்கிறார்கள்...

    நண்பன் ரவி, முன்பக்கம் ஏறியிருந்தான். அவனையும் கூட்டத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை...

    "படில நிக்காத உள்ள ஏறிவா...சீட்டு எடுத்துட்டு உள்ள போ...எங்கம்மா போகணும்?" என்று நீலக்கலர் கண்டக்டர் கூவிக்கொண்டிருந்தார்...

    அப்போது,"எக்ஸ்யூஸ்மீ...கொஞ்சம் பேனா தரமுடியுமா? ப்ளீஸ்!" பக்கத்திலிருந்த செல்போன்காரன் கேட்டான்...காதில் செல்போன் உயிரோடு.

    நான் பேனா தந்ததும்,"ம்...சொல்லுங்க! நம்பர் எட்டு,..." உள்ளங்கையிலேயே எழுதத்தொடங்கினான்...

    "பாஸ்...கையில் எழுதாதீங்க...பேனா வீணாயிடும்!"

    'சரிசரி' என்பதுபோல் தலையாட்டியபடி, மேலும் எழுதத்தான் செய்தான்.

    அங்கிருந்து நண்பன், "டேய் மச்சான்! ட்ரேட் சென்டர் வந்திடுச்சு... அப்பிடியே படிப்பக்கம் நகரு" என்று சைகை செய்தான்...

    இராமாபுரத்தை அடுத்து எல்.அன்.டி-யில் இறங்கவேண்டும்...

    'பேனா தேவை...ஆனால் தரமாட்டான் போலிருக்கிறதே...!!!' ஐடிபிஎல்-லில் பேருந்து நின்றது...

    "ஐயோ என்ன பண்ணிட்டிருக்க? போ படிக்கிட்ட!" இந்த நண்பன் வேறு விவரம் புரியாமல்...

    இவன் எழுதிவிட்டு பேனாவைத் தந்தால், நகரலாம் என்றிருந்தால், தருகிற வழியைக்காணோம்... இன்னும் பேசிக்கொண்டிருந்தான்...

    எரிச்சலாய் வந்தது...
    ஒரு பேனா எடுத்துவரமாட்டார்கள் இவர்கள்...
    சட்டைப்பையில் கனம் தாங்காது...
    அக்கம்பக்கத்தில், என்னைமாதிரி எவனாவது இளிச்சவாயன் கிடைத்தால், வாங்கி சமாளித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இவர்களுக்கெல்லாம்...

    'சரி படிக்குப்போய்விடுவோம். அதற்கப்புறம் வாங்கமுடியுமா பார்க்கலாம்...' என யோசித்தபடியே கிடைத்த இடைவெளியில் காலை எடுத்து வைத்ததும், பக்கத்து பெருசு, "யோவ், செருப்புதான் போட்டிருக்கியா இல்ல லாடம்கீடம் கட்டிருக்கியா, எருமமாடாட்டம் இந்தமிதி மிதிக்கிற?"

    வந்த கோபத்திற்கு, அந்தாளை ஒரு வழி பண்ணியிருக்கவேண்டும்...
    நண்பன் அவசரப்படுத்திக்கொண்டிருந்தான்....

    வேறு வழியில்லை நேரடியாக கேட்டுவிடவேண்டியதுதான்...
    ஆனால் அவனோ கூட்டத்தில் நகர்ந்து நகர்ந்து முன்னால் போய்விட்டிருந்தான்...

    அப்பொழுதுதான் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்தது... இராமபுரம் நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி சுதாரிப்பதற்குள் போயேவிட்டான்...

    'போச்சு போயே போச்சு... இனிமேல் பேனாவே எடுத்துவரக்கூடாது...அப்படியே எடுத்துவந்தாலும் எந்தப்பயலுக்கும் குடுக்கக்கூடாது...'

    பேருந்து மெல்ல நகர்ந்து, எல்.அன்.டி-யில் நின்றது...தன்னை நொந்துகொண்டு இறங்கப்போனபோது,"எக்ஸ்யூஸ்மீ! இந்த பேனா ஒங்களுதா? ஒங்ககிட்ட குடுக்கச்சொல்லி என் ஃபிரெண்ட் தந்தான்",
    பேனாவை வாங்கியபின்,
    "என்னாச்சு ஒங்க பிரெண்டுக்கு, அவசர அவசரமா எறங்கிப்போனாரே?"

    "அவனுக்கு ஒண்ணும் இல்ல...ஆனா..."

    "ஆனா...என்ன?"

    "அவங்க பேரண்ட்ஸ், மெரினாவுக்கு காலைல வாக்கிங் போயிருந்தாங்களாம்... திடீர்னு ஒரு பெரிய அலை வந்து..." அதற்குமேல் சொல்லமுடியாமல், துக்கத்தால் ஸ்தம்பித்து நின்றான்...

    சட்டைப்பையில் பேனா கனத்தது...

    (இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி வைத்திருந்தது...)

    Wednesday, May 03, 2006

    மாயமில்லே...மந்திரமில்லே...

    மின்குழு அஞ்சலில் வந்திருந்த இந்த தொடுப்பு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

    அது ஒரு மாயக்கணக்கு...
    ஒரு பக்கம் மாயக்கண்ணாடி உருண்டை...(அதில்தான் நாம் நினைத்திருந்த எண்ணின் குறியீடு தெரியப்போகிறது)
    மறுபக்கம் நாம் நினைத்துக்கொள்வதற்கான எண்களும், அதன் குறியீடுகளும்...

    ஏதாவது ஒரு இரட்டை எண்ணை நினைத்துக்கொள்ளவேண்டும். அதில் உள்ள இரண்டு எண்களையும் தனித்தனியாக பிரித்து, கூட்டிக்கொள்ளவேண்டும்... கூட்டி வந்த விடையை உண்மையான எண்ணோடு கழிக்கவேண்டும். விடையாக வந்த எண்ணின் அருகில் என்ன குறியீடு என்பதை பார்த்துக்கொண்டு... கண்ணாடி உருண்டையில் கிளிக் செய்ய.....அட !

    (உ.ம்) நினைத்த எண்: 45. (4+5=9) இந்த 9-ஐ, 45-லிருந்து கழித்தால், 36 வருகிறது. 36க்கு அருகில் என்ன குறியீடு இருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு, கண்ணாடி உருண்டையை கிளிக் செய்யவும்...(மாந்தரீக சவுண்ட் எஃபக்ட் வேறு)

    இங்க இதப்பார்த்துட்டு எப்படி வேலை செய்யுதுனு யாராவது விளக்கினா தேவலை... (எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா. ரூம்போட்டு உக்காந்து யோசிப்பானுங்களோ?)

    Wednesday, April 19, 2006

    கலைஞரும் சிலேடையும்...

    பல சர்ச்சைக்குறிய சிலேடைகளுக்கிடையே தமிழ்வருடப்பிறப்பன்று சன் டீவி கவியரங்கத்தில் கலைஞர் சொன்ன அரசியல் சாயம் இல்லாத ஒரு சின்ன சிலேடை, சுவாரஸியமானது...

    மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகனிடம் பார்வையாளர் ஒருவர் கேட்கிறார்...

    "இன்னும் ஒரு 'பத்துப்பாட்டு' பாடுக"

    "பத்துப்பாட்டு பாட 'எட்டுத்தொகை' அதிகம் தருவீரோ?"

    "எட்டுத்தொகை என்ன...'ஐங்குறுநூறு'-ஏ தருகிறேன்"

    "இல்லையப்பா எனக்கு...'அகத்தில் நானூறும், புறத்தில் நானூறும்' வேண்டும்..."

    அதாவது அவன் கேட்டது, கணக்கில் நானூறு, கருப்பில் நானூறு...

    Monday, April 10, 2006

    நேனோ ஞாபகங்கள்...

    (குமாரின் நேனோ பதிவை படித்தபின் எழுதிய சில துளிகள்)

    அப்பொழுது, எங்கள் தஞ்சாவூர் சண்முகாவில், முதன்முதலாக 'டுபாக்கூர்' ஆய்வுமையம் தொடங்கியிருந்த சமயம்...(மனிஷ விகார் TIFAC-COREக்கு மெஸ்காரர்கள் இட்ட செல்லப்பெயர்)

    நேனோ தொழில்நுட்பத்தின் ஒரு வார கருத்தரங்குக்கு, உலக ஆராய்ச்சியாளர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள்...(ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருத்தருக்கு நம்மூர் தோசை மிகவும் பிடித்துவிட்டதாம்.அப்படி என்னயா இருக்கு நம்மூரு தோசையில).

    சீனியர் ஆராய்ச்சியாளர்கள்,புதிதாக ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. முதுகலை மாணவர்களான எங்களுக்கு கூட அனுமதியில்லை...(பேராசிரியர்களே இரண்டு பேர்தான் கலந்துகொண்டார்கள்) 'ப்ளாக்கில் கூட டிக்கெட் கிடைக்காத' பரிதாபத்தோடு சுற்றிக்கொண்டிருந்தோம்...

    'நேனோ-னா என்ன?' என்ற ஆர்வத்தில் அப்படியிப்படி போராடி ஒரு சாவேனர்-ஐ 'சுட்டு' அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் தெரிந்துகொண்டேன்...

    மைக்ரோ என்ற அளவை ஆயிரமாக உடைத்தால், அந்த 'ஆயிரத்தில் ஒருவன்' தான் நேனோ. இப்போ இருக்கிற கணினி(மைக்ரோகம்ப்யூட்டர்), நுண்ணியசெயலாக்கி(மைக்ரோபிராஸஸர்) ஆகியவை நேனோவாக மாற்றப்பட்டால், மீநுண்ணியசெயலாக்கிகள்(Nanoprocessors), மீச்சிறியகணினிகள் கிடைக்கும்.

    கேன்சர் செல்களை அழிக்கும் நேனோ ரோபோக்களை "doctor in the cell" என்ற செல்லப்பெயரால் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்... வெளியிலிருந்து இயக்கப்பட்டாலும், கேன்சரை அழிக்கிறேன் பேர்வழி என நமது வீரர்களை(மனித செல்கள்) தாக்கிவிட்டால் என்ன செய்வது என்பதையும் யாராவது சொல்லுங்களேன்.

    எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நேனோவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடப்பது பற்றி ஒருமுறை குறிப்பிட்டதாக நினைவிருக்கிறது (கற்றதும்...பெற்றதும்)

    'கைட்ரஜன் இயற்கையில இருக்கு, ஆக்ஸிஜனும் இருக்கு. ரெண்டும் சேர்ந்த மூலக்கூறு தண்ணியும் இயற்கையிலேயே இருக்கு...

    அதேபோல காகித உற்பத்திக்கான மூலப்பொருள் இயற்கையிலேயிருந்துதான் கிடைக்கிறது...தண்ணீர் மாதிரி காகிதத்தையும் இயற்கையிலேயே கிடைக்கச்செய்யலாமா?' என்றுகூட ஆராய்வதாக சொல்லியிருந்தார் அவர்.

    கருத்து சொல்ல வாங்க...

    Saturday, March 04, 2006

    கண்ணுக்குத் தெரியாத பகைவன்

    என்.எஸ்.எஸ் முகாமின்போது, ஒரு பேராசிரிய நண்பர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது விடை கிடைத்திருக்கிறது...

    "ஒரு மொபைல் போன் வைத்திருந்தாலே அந்த கதிர்வீச்சு, பாதிப்பேற்படுத்தும்னு சொல்றாங்க. செல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிவிட்ட இந்தக்காலத்தில், நிறைய கதிர்வீச்சுக்கள் மனிதனை பாதிக்காதா?" இதுதான் அவருடைய சந்தேகம்...

    "உடல் உபாதைகள் ஏதும் தோன்ற வாய்ப்பில்லை... மனநிலையில் சிறுசிறு மாற்றம் நிகழ வாய்ப்புண்டு", என்று அப்போதைக்கு சொல்லிவைத்தேன்...

    இன்று(5/3/06), தி கிண்டுவில் ஆனந்த் பார்த்தசாரதி ஒரு தகவல் எழுதியிருந்தார்... ஈ.எம்.ஐ.ஸி(Society of ElectroMagnetic Interference and Compatibility) என்ற வல்லுனர்களின் கருத்தரங்கில், 'ரேடியோ கதிர்வீச்சினால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?' என்று விவாதித்திருக்கிறார்கள்.

    நீர், காற்று, ஒலி மாசுபடுவதுபோல இதுவும் ஒரு மாசுசீர்கேடுதான்(Radiation Pollution) என்று ஒரு கருத்தையும் சொல்கிறார்கள்.

    Cogent என்ற தில்லி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, "இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அதிர்வெண் அளவு - ஒரு சதுர மீட்டருக்கு 10 மைக்ரோவாட்ஸ் ஆகும். ஆனால், இந்த அளவே சிறுசிறு பாதிப்பை ஏற்படுத்துகிறது..."

    உதாரணத்திற்கு, தூக்கத்திலிருந்து திடீர் என எழுந்துவிடுதல் பத்து பேர்களில் ஒருவருக்கு ஏற்படுகிற பொதுவான பாதிப்பு.

    மேலும், கதிர்கசிவினால் ஏற்படும் பாதிப்புகள்-பசியின்மை, தூக்கமிடர்பாடு, மிகுந்த எரிச்சல்...

    இது பெரும்பாலும் மனநிலையோடு தொடர்புடையதாக இருக்கிறது... ஏனெனில், இந்த செயற்கை அலைகள், மனிதனின் (இயற்கையான)எண்ண அலைகளோடு ஒத்துவமையாக இயங்குவதுதான் காரணம் (closer to natural resonance)...

    மொபைல் கதிர்வீச்சாவது பரவாயில்லை... எப்.எம் அலைகளால் ஏற்படும் கதிர்வீச்சில் சீர்கேடு இன்னும் அதிகம். மொபைல் கதிர்வீச்சை விட 4 அல்லது 5 மடங்கு பாதிப்பு, எப்.எம் ரேடியோவின் கதிர்வீச்சினால் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது...

    காரணம்...எப்.எம் ரேடியோக்கள் இயக்கப்படுவது, 30 மெகாகெர்ட்ஸிருந்து 300 மெகாகெர்ட்ஸ் வரையுள்ள அதிர்வெண் பட்டையில். (மனித எண்ண அலைகளின் அதிர்வெண்ணுக்கு ஒத்தது)

    ஆனால், மொபைல் போனில் இரண்டே அதிர்வெண்களில்தான் இயக்கப்படுகிறது.(இந்தியாவில் 900 மெகாகெர்ட்ஸ் மற்றும் 1800 மெகாகெர்ட்ஸ்). அதனால், எப்.எம் ரேடியோ கதிர்வீச்சின் பாதிப்புதான் அதிகம்...

    'செம HOT மச்சி' என்று விஷயம் இல்லாமலா சொல்லுவார்கள்...

    'இங்கே இதைப்பற்றி இன்னும் படிங்க படிங்க படிச்சிகிட்டேயிருங்க'

    மனிதன்பாதி...(கிளைமாக்ஸ்)-(அறிவியல் தொடர்கதை)

    7

    கோர்ட்...

    குற்றவாளிக்கூண்டில் சக்ரவர்த்தி...

    நீதிபதி, "எல்லா வாதங்களையும் சாட்சியங்களையும் வைத்துப்பார்க்கும்போது, குற்றவாளியாக இங்கு நிற்கும் சக்ரவர்த்தி என்ற சிதம்பரம்தான் கொலையைச் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

    ஆனால், குற்றவாளி இதை சுயநினைவுடன் செய்யவில்லை என்றும் தெரியவந்திருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை இன்னும் தீவிரப்படுத்துமாறு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்" .

    "நான் ஒரு கருத்தைச் சொல்லவிரும்புகிறேன் நீதிபதி அவர்களே" அரசுத்தரப்பு வக்கீல் எழுந்தார்.

    "கடும் விசாரணைக்குப்பிறகும் இந்த சக்ரவர்த்தியிடமிருந்து உண்மை வெளிவரவில்லை என்பதால்தான் சந்தேகப்பட்டு மருத்துவசோதனை செய்ய கோர்ட் உத்திரவிட்டது. அதில் இவர் உயிரற்றவர் எனவும், எதையும் தன்னிலையிலிருந்து செய்யவில்லை எனவும் தெரியவந்திருக்கும்போது, இதற்குமேல் இவரிடம் விசாரணை செய்து பயனேயில்லை...

    இவரை ஏவிவிட்டது யார் என்பதை வேறுவகையில்தான் அறியவேண்டும் என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்"

    "அப்படியென்றால் உண்மையான குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது?"

    "அதை நான் சொல்கிறேன்" என்று ஒரு புதிய குரல் கேட்டு எல்லோரும் திரும்பினார்கள்...

    8
    ஒரு அறுபது எழுபது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் கோர்ட் வாசலில் நின்றுகொண்டிருந்தார்...

    நீதிபதி வியந்தவாறே, "எதுவாயினும் சாட்சிகூண்டுக்கு வந்து சொல்லவும்"

    சாட்சிக்கூண்டுக்கு வந்தவர், உறுதிமொழி கொடுத்துவிட்டு, "என் பெயர் இராமநாதன். பயோ-டெக்னாலஜியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பவன்.
    கணினியின் அறிவை மனிதன் அளவுக்கு மாற்றிக்கொண்டிருக்கிற காலத்தில், ஒரு சக்தி வாய்ந்த கணினியை மனிதனுக்குள் புகுத்தி அவன் வாழ்நாளையும் செயல்திறனையும் அதிகரிக்க வைக்கமுடியுமா என்பதை திவீரமாக ஆராய்ந்துகொண்டிருப்பவன்.

    முழுவதும் வெற்றியடைந்த நிலையில் நான் சில சிக்கல்களை சந்திக்கநேர்ந்தது...

    நிறைய சமூகவிரோத சக்திகள் என்னை மிரட்டி என் ஆராய்ச்சி முடிவுகளை கைப்பற்றி ஆதாயம் அடைய பார்த்தார்கள்... அதில் ஒருவர்தான் கொலைசெய்யப்பட்ட வேலுச்சாமி.

    எனக்கு கொலைமிரட்டல் விடுத்தார்...

    ஆராய்ச்சி முடிவுகளை சொல்லவேயில்லை என்ற கோபத்தில், என் மகள் நந்தினியையும் அவளுடைய கணவனான இந்த சிதம்பரத்தையும் ஒரு லாரி விபத்து போல ஏற்பாடு செய்து கொலை செய்துவிட்டார்கள்...

    என்மேல் உள்ள கோபத்தில் இரு அப்பாவிகளை கொன்றதை என்னால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை... இந்த அப்பாவிகளின் கொலைக்கு வஞ்சம் தீர்க்கத்தயாரானேன்...

    ஆமாம்...

    கொலையுண்டதற்கு பின், சுத்தமாக செயலற்று இருந்த என் மருமகன் சிதம்பரத்தின் மூளை ந்யூரான்களில் கட்டளைகளுக்கு ஏற்ப சின்னச்சின்ன மின்னதிர்வுகளை உள்ளீடாகச் செலுத்தினேன்... மிகுந்த பிரயாசைக்குப்பிறகு, மூளை செயல்படத்தொடங்கியது... மூளையிலிருந்து தொடங்கும் நரம்புமண்டலம் முழுவதையும் செயற்கை இழைகளால், பிண்ணிபிணைத்தால் ஒரு மனிதனுக்கு உயிர்கொடுக்கமுடியுமோ என்று தோன்றியது...அதில் செய்துபார்த்ததில் கொஞ்சம் வெற்றியும் கிடைத்தது...
    என் வாழ்நாள் லட்சியமான Bio-machines என்ற 'மனிதன்பாதி-கணினிபாதி' தொழில்நுட்பத்தில் நான் வெற்றி கண்டேன்...

    இப்படி படிப்படியாக மாற்றி சிதம்பரம் எடுத்த அவதாரம்தான் - சக்ரவர்த்தி.
    வேலுச்சாமியைக் கொல்ல சக்ரவர்த்திக்கு கட்டளை எழுதியவன் நான்தான். அதுமட்டுமல்ல, அதற்கு உடந்தையாக இருந்த ஒரு லாரி டிரைவரையும் கொன்றதும் நான்தான்"

    சற்றுநேரத்திற்கு, அமைதியானார்... கண்களில் கண்ணீர்...

    "ஒரு விஞ்ஞானி துறவி போன்றவன்...அவனுடைய அறிவால் சமூகத்திற்கு நன்மை கிடைக்கவேண்டும்... ஆனால், நான் என் நிலையை மறந்து, எப்பேற்பட்ட ஒரு இழிவான செயலைச் செய்திருக்கிறேன் என்பது என் கோபம் போனபின் தான் புரிகிறது...

    அதனால்தான்...என் முடிவை நானே தேடிக்கொள்கிறேன்"

    என்று சடாரென கூண்டுக்குள் சரிந்து விழுந்தார் நிரந்தரமாக...

    (முடிந்தது)

    Friday, March 03, 2006

    மனிதன்பாதி...6-(அறிவியல் தொடர்கதை)

    ஆஸ்பத்திரியின் கிளிசரின் வாசனை...

    "நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு. நாங்க அடிச்ச அடிக்கு இவன் ஜாதகத்தையே சொல்லிருக்கணும்...ஒரு சத்தம் இல்ல...ரத்தம் இல்ல... விசித்திரமான ஆளா இருக்கான்"

    டாக்டர் சக்ரவர்த்தியை சோதித்தார்...முகம் மாறியது...
    "கொஞ்சம் வெளில இருக்கீங்களா இன்ஸ்பெக்டர்"

    வெளியில் வந்தார்...

    சுமார் ஒரு மணிநேரம் கழித்து...

    அவசரமாக நர்ஸ் ஓடிவந்தாள்.

    முகத்தில் பதட்டம்...

    "சார்...உங்கள டாக்டர் உடனே கூப்பிட்டார்."

    உள்ளே அவருக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

    டாக்டர் முகம் இறுக்கமாகிருந்தது...

    "இன்ஸ்பெக்டர்...நான் இப்போ சொல்லப்போற விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியா கூட இருக்கலாம்...

    இவர்... ரொம்ப நாளா உயிரே இல்லாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கார்ங்கிறது உங்களுக்கு தெரியுமா...?"

    (நாளைக்கு கிளைமாக்ஸ்)

    மனிதன்பாதி...5-(அறிவியல் தொடர்கதை)

    போலீஸ் ஸ்டேசனில்...

    கமிஷனரை சுற்றி மற்ற போலீஸ்காரர்கள் கவலையுடன் நின்றுகொண்டிருந்தார்கள்...

    "நல்லா விசாரிச்சீங்களா இன்ஸ்பெக்டர்?"

    "விசாரிச்சுட்டேன் சார். வாயே திறக்கமாட்டேங்கிறான்"

    "ஏதும் தீவிரவாதியா இருப்பானோ?"

    "இல்லீங்க சார்.அழுத்தக்காரனா தான் இருக்கான். ஆனால், தீவிரவாதி மாதிரி தெரியல..."

    "நாமளா முடிவு செய்யமுடியாது இன்ஸ்பெக்டர். இன்னும் முயற்சி பண்ணிப்பாருங்க.எதுவும் சொல்லலைனா ரெட்ரூம் ட்ரீட்மெண்ட் தான் பண்ணணும். கோர்ட்டிலிருந்தும் அனுமதி கிடைச்சாச்சு. என்ன சொல்றீங்க?" என எழுந்தார் கமிஷனர்.

    "யெஸ் சார்" விறைப்பாக ஒரு சல்யூட் போட்டார் இன்ஸ்பெக்டர்.

    ஆனால், சக்ரவர்த்தி அசரவில்லை... அடித்துஅடித்து காவல் அதிகாரிகளின் கைதான் வலித்தது...

    இன்ஸ்பெக்டர் யோசித்தார்..."இவ்ளோ அடி அடிச்சிருக்கோம்...ஒரு கதறல்...ஒரு இரத்தம்...ம்கூம்"

    திடீரென அவருக்கு ஒன்று தோன்றியது, "ஒருவேளை அப்படி இருக்குமோ?"

    போனில் சிற்சில எண்களைத் தட்ட கமிஷனர் தொடர்பில் வந்தார்...

    சற்றுநேரத்திற்கெல்லாம் அவர் சக்ரவர்த்தியை அழைத்துப்போனது...

    மருத்துவமனைக்கு...

    (அடுத்த பதிவில் தொடர்கிறது)

    Wednesday, March 01, 2006

    மனிதன்பாதி...4-(அறிவியல் தொடர்கதை)

    அதிகாலை நேரம்...

    தேவ் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்...

    'காலைக்காபியுடன் பேப்பர் படிப்பது எவ்வளவு சுகம்?'

    தொழிலதிபர் வேலுச்சாமி கொலையுண்டதுபற்றி தலைப்புசெய்தி வெளியாகியிருந்தது...
    முதல்பக்கம் தாண்டி அடுத்தபக்கம் ஒரு செய்தி கவனத்தை கவர்ந்தது. அது ஒரு லாரி ட்ரைவரின் மர்மக்கொலை பற்றியது...

    கூர்ந்து கவனித்தால்...
    தேவ்விற்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது...
    அன்று கோவிலில் பார்த்த அதே ஆள்...கொடூரமுறையில் கொலையாகி...

    திடீரென வாசலில் அழுத்தமான வாகன ப்ரேக் சத்தம்...தொடர்ந்து பூட்ஸ்களின் சத்தம்...

    நொடியில் ரூமிற்குள் சிற்சில காக்கிச்சட்டைக்காரர்கள் தோன்றினார்கள்...

    "சார் இங்கே சக்ரவர்த்தி யாருங்க?" என்றார் இன்ஸ்பெக்டர்.

    "எ...என் ப்ரெண்ட் தான். என்ன விஷயம் சார்?"

    "கொஞ்சம் கூப்பிடுறீங்களா?"

    அழைத்ததும் சக்ரவர்த்தி வந்தார்.
    "யோவ், இவர்தானா பாத்துச்சொல்லு"

    அருகில் வந்திருந்த ஆள் "ஆமா சார், இவர்தான் பிறந்தநாள் கிப்ட்டுனு சொல்லி, ஒரு கிப்ட் பாக்ஸை எங்கிட்ட குடுத்து வேலுச்சாமி ஐயாகிட்ட கொடுக்கச்சொன்னார்"

    "மிஸ்டர் சக்ரவர்த்தி...இவர் அந்த ஓட்டலில் பணிபுரிகிற ஆள். நீங்கள் செஞ்ச கொலையை கண்ணால் கண்ட முக்கியமான சாட்சி. என்ன போலாமா?" இன்ஸ்பெக்டர் கண்டிப்பான குரலில் கேட்டார்.

    மறுவார்த்தை சொல்லாமல் சக்ரவர்த்தி அமைதியாக பின் தொடர்ந்தார்.

    (தொடரும் - கிளைமாக்ஸை யூகிக்கமுடிந்தால் உடனே சொல்லுங்களேன்)

    மனிதன்பாதி...3-(அறிவியல் தொடர்கதை)

    அன்று அந்த நட்சத்திர ஓட்டலில் திருவிழா களைகட்டியிருந்தது.
    காரணம்...தொழிலதிபர் வேலுச்சாமியின் பிறந்தநாள்.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் காரில் ஏறியமர்ந்தார் வேலுச்சாமி. கேட்-ஐ திறக்க ஆளின்றி டிரைவரே இறங்கிப்போனார்...

    "ஐயா...இத உங்ககிட்ட கொடுக்கச்சொன்னாங்க..." என்று ஒருவன் கிப்ட்டை நீட்டினான்.

    'யார் அனுப்பிருப்பாங்க?' கிப்ட்டின் முகப்பு லேபிளில் பார்த்தால் 'சிதம்பரம்' என்றிருந்தது...

    'எந்த சிதம்பரம்?' என்று திரும்பியவருக்கு அதிர்ச்சி...அங்கே நின்றது சக்ரவர்த்தி...

    "ஆ...நீயா?"

    அடுத்து சுதாரிப்பதற்குள் கிப்ட்டுக்குள் இருந்த வஸ்து உயிர் பெற்றது...நிமிடநேரத்தில் காரின் உலோகப்பாகங்களுடன் வேலுச்சாமியும் சிதறினார்.

    அமைதியாக திரும்பிப்போனார் சக்ரவர்த்தி.

    (நாளை தொடரும்)

    மனிதன்பாதி...2-(அறிவியல் தொடர்கதை)

    ஸ்பென்ஸருக்கு சக்கரவர்த்தியும் தேவ்வும் போயிருந்தார்கள்...

    "மிஸ்டர் சிதம்பரம் மிஸ்டர் சிதம்பரம்...கொஞ்சம் நில்லுங்க"

    பின்னாலிலிருந்து ஒரு பெண்குரல் கேட்டதும் திரும்பினால், "என்ன சார், பார்த்தும் பாக்காதமாதிரி போறீங்க...என்னைய ஞாபகமிருக்கா?" என்று சக்கரவர்த்தியை நோக்கி வந்துகொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.

    "நான் நந்தினியோட ஃப்ரெண்ட் கலா சார். மேரேஜுக்கு கூட வந்திருந்தேனே...."

    கலா பேசப்பேச குழப்பமானார் சக்கரவர்த்தி...தேவ்வுக்கும் ஒன்றும் விளங்கவில்லை...
    அன்றிரவு தேவ்வுக்கு சுத்தமாக தூக்கம் இல்லை...

    'சக்கரவர்த்திக்கு மறுபெயர் சிதம்பரமா? அல்லது சிதம்பரம் என்று இவரைப்போலவே ஒருத்தன் இருக்கிறானா?'
    'இவருக்கும் கோவிலில் பார்த்த அந்த லாரிக்காரனுக்கும் என்ன சம்பந்தம்? ஸ்பென்ஸரில் வந்த கலா யார்?'

    அவருடைய கேள்விகள் பல பதிலின்றி இருளில் மறைந்தன...

    (அடுத்த பதிவில் தொடர்ச்சி)

    Monday, February 27, 2006

    மனிதன்பாதி...1-(அறிவியல் தொடர்கதை)

    (இது ஒரு சின்ன முயற்சி...முன்னாடியே சொல்லிடுறேன்...இது ஒரு அறிவியல் சஸ்பென்ஸ் புனைக்கதைதான் என்றாலும், க்ளைமாக்ஸ்சில் தான் அறிவியலுக்கான சாயல் தெரியும்...)

    கோவிலைவிட்டு வெளியே வந்தார்கள் சக்ரவர்த்தியும் தேவ்வும்...

    "சக்ரவர்த்தி நீங்க செருப்ப எடுத்திட்டுருங்க. ஒரு தம்ம போட்டுட்டு வந்திர்றேன்" என்று தேவ் இந்தப்பக்கம் வந்தான்.

    தம் பற்றவைக்கும்போது அருகிலிருந்தவர்களின் சம்பாஷணை காதில் விழுந்தது.

    "நேத்து என்னண்ணே பாக்கவேமுடியலியே ஒங்கள? சவாரியா?"

    "ஆமா...திண்டுக்கலுக்கு ஒரு லோடு அடிக்கப்போய்ட்டேன்..." அடுத்து பேச்சுவராமல் அதிர்ந்துநின்றான். காரணம், தூரத்தில் நின்றுகொண்டிருந்த சக்ரவர்த்தியை பார்த்ததுதான்.

    "டேய் இவன்... இவன்...எப்பிடிறா?"

    திரும்பிப்பார்த்து இவன் முகமும் வெளிறியது...

    "அவன்...சிதம்பரம்தானேண்ணே..."

    (நாளை தொடரும்)

    Monday, February 20, 2006

    கிரிட் கம்ப்யூட்டிங் கருத்தரங்கில்...

    எங்கள் கல்லூரியின் கணினித்துறையும், டாடா கன்சல்டன்ஸி செர்வீசஸ்-ம் சேர்ந்து நடத்தும் Grid Computingகின் கருத்தரங்கு, எங்கள் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் நடந்தது...

    பல்வேறு கல்லூரிகளில் இருந்து, மூத்த ஆசிரிய பெருமக்கள் மற்றும் பகிர்ந்திணைப்பு கணினித்துவத்தை ஆராய்ச்சியாக மேற்கொள்வோர் என நிறையபேர் வந்திருந்தார்கள்...

    இந்தத்துறையிலேயே தலைசிறந்து விளங்கும் சீடாக் பூனேயின் (PARAM-Padma புகழ்) ஆலோசனையின்பேரில் சீடாக்(பெங்களுரூ)லிருந்தும், ஐ.ஐ.டி, எம்.ஐ.டி, ஐ.எம்ஸி, டி.சி.எஸ்...இங்கெல்லாமிருந்தும் கூட சில நிபுணர்கள் வந்து தங்கள் கண்டறிந்த அல்லது ஆராய்ந்து கொண்டிருக்கிற அரிய கருத்துக்களை பற்றி சொன்னார்கள்...

    விமானநிலையத்திலிருந்து அழைத்துவந்தபோது எனது எடக்குமடக்கான ஐயங்களுக்கு பொறுமையாக விளக்கம் தந்தவர் சீடாக் ஆராய்ச்சியாளர் டாக்டர் பிந்துமாதவா.

    ஐ.எம்.எஸ்ஸி-லிருந்து வந்திருந்த விஞ்ஞானி, ஆர்வமும் தகுதியும் இருப்பின் தன்னை சந்திக்குமாறு சொல்லிவிட்டுச்சென்றார்.

    இளைஞர்களான கோவேந்தன், ரெட்டி ஆகியோரும் ஆர்வமாக விஸ்வா கருவியைப் பற்றி விளக்கினார்கள். உண்மையிலேயே கிரிட்டில் என்ன நடக்கிறது என்பதை புரியவைத்த ஒரு நல்ல செயல்முறைவிளக்கம் இது.

    எல்லோரும் தரும் ஊக்கத்தை பார்க்கையில்,கிரிட் ஆராய்ச்சிகளுக்கு நிறைய மக்கள் முன்வரவேண்டும் என ரத்தினகம்பளம் போட்டு வரவேற்கிறார்களோ என்றுதான் தோன்றுகிறது...

    எல்லா செஸசனிலும் கலந்துகொண்டு நான் புரிந்துகொண்ட மிகச்சில விஷயங்களை இங்கே தருகிறேன்... (கணினி ஆராய்ச்சியில் நாம் எங்கே போய்க்கொன்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொள்வதற்காக)

    பல்வேறு கணினிகளை இணைக்கும்போது நேரடியாக சுலபமாக ஒரு கம்பி மூலம் இணைத்துவிடமுடியாது...

    ஒவ்வொரு நெட்வொர்க்குக்கும் ஏன் ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி தகவுதரங்கள், விதிகள் இருக்கும். அதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் பல்வேறு கணினிகள் இணைக்கப்படுகிறது. இது ஆரம்பநிலை.

    இணைக்கப்பட்ட கணினிகளுக்கிடையே தகவல்பரிமாற்றம், பணி இடம்மாற்றம் ஆகியவை சில தகவல்பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி நிறைவேற்றப்படுகிறது...

    சக்திவாய்ந்த கணினிகளின் செயலிழப்புகளின் போது, அதைப்போலவே உள்ள மற்றொரு கணினிக்கு(Mirror) 'தானாகவே' செயல் இடமாற்றம்(Process Migration) முதலான பணிகளுக்கு மாற்றிக்கொள்ளும்போது தற்காலங்களில் பயனாளர்களுக்கு இது தெரியாதவாறு நிகழும்...இது இரண்டாவது நிலை...

    ஒரு நெட்வொர்க்கில் உள்ள கணினிகள் தாங்களாகவே மற்ற நெட்வொர்கின் வளங்களை பயன்படுத்துபோது சில மேலாண்மைக்கு கீழ்படியவேண்டும். எது முக்கியத்துவம் வாய்ந்த பணி? மற்றும் எது சீக்கிரம் முடிக்கவேண்டிய பணி? என்பதை முடிவு செய்ய ஒரு மேலாண்மை தேவைப்படுகிறது. அதுதான் கிரிட் என்பது என் புரிதல்.(கிரிட் என்பது பகிர்வு கணினித்துவத்தின் புதிய பெயர்தான்...)

    வளங்களை பயன்படுத்துவதற்கு எவ்வளவு கட்டணம் என்பதையும் கிரிட் மேலாண்மை தானாகவே தெரிவிக்கிறது...

    கிரிட்டில் உள்ள பணிகளை பிரித்து செயல்படுத்துவதில் மற்றும் தகவலுக்கு பாதுகாப்பளிப்பதில் - இவைகளில்தான் இன்றைய பிரச்சனைகளும் ஆராய்ச்சிகளும். பகிர்விணைப்பு கணினி கருத்துருக்களில் முக்கியமாக இவை கருதப்படுகின்றன.

    சேதி-அட்ஹோமில் பாருங்கள். நீங்கள் அங்கே பதிவுசெய்து கொண்டீர்கள் எனில் உங்கள் கணினியின் திறனை உபயோகமானவற்றுக்கு பயன்படுத்துவார்கள்...இந்த கணினியைத்தான் பயன்படுத்துகிறோம் என்று அவர்களுக்கும், இன்னவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று நமக்கும் தெரியாது. உலகம் முழுவதும் இப்படி இணைக்கப்படும்போது, எண்ணற்ற திறன் கிடைக்கிறது...

    சூப்பர் கணினிகள் கூட செய்யமுடியாத பல காரியங்களை இப்படி நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்பதுதான் இதன் சாராம்சம்...

    Saturday, February 18, 2006

    வேரறுந்த மரங்கள்...(ஒரு சின்ன கதை)

    "எத்தனை கன்னு சார் எடுக்கப்போறோம்?"

    "அம்பது கன்னு பாலு"

    ஒரு மரம் நடும் விழாவிற்காக வேளச்சேரி நர்ஸரியிலிருந்து செடிகள் எடுக்க போய்க்கொண்டிருக்கிறோம்...நான் போயிருந்த பஸ்சின் டிரைவர்தான் பாலு.

    பேருந்து பல நிறுத்தங்களை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, இன்று காலை, அம்மா சொன்னது மட்டும் அடிக்கடி காதில் ஒலித்துக்கொண்டிருந்தது...

    "படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது...உனக்கும் காலாகாலத்துல கல்யாணம் முடிக்கணும். உனக்கு கீழ ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க அவங்களுக்கு ஒரு கல்யாணங்காட்சி பண்ணனுங்கிறத மறந்திடாத ஆமா. இப்படி 'சேவை சேவை'னு சுத்திக்கிட்டிருந்தா என்னைக்கு வேலைக்குப்போறது...?"

    என்ன செய்வது? வாழ்க்கையும் வயதும் ஓடிக்கொண்டிருக்கிறது...

    "என்ன யோசனை சார்?" பாலு கேட்டதும் நினைவு வந்தது.

    "ஒண்ணுல்ல பாலு. உங்களுக்கு நர்ஸரி இருக்கிற இடம் தெரியுமா?"

    "தெரியும் சார். செக்போஸ்ட் முன்னால் இருக்கு சார்.பஸ் உள்ளே போகமுடியாது. வெளியிலிருந்துதான் எடுத்துக்கணும்."

    கொஞ்சம் அமைதியானவர்,

    "எந்த ஊர் சார் நீங்க?"

    "நான் மதுரைப்பக்கம் பாலு...நீங்க..?"

    "சிதம்பரம் சார். ரொம்ப நாளுக்கு முன்னாடியே சென்னைக்கு வந்தாச்சு. என் மச்சானும் இங்கதான் டிராவல்ஸ் வச்சிருக்கான்... ரெண்டு கார் இருக்குங்க சார். செம காசு சார்"

    "பரவாயில்லையே... என்ன வச்சிருக்கார் குவாலிஸா?"

    "இண்டிகா சார்...குவாலிஸுக்கு காசு கிடையாதுன்னான். சிக்கிரமே அதுவும் எடுத்துறுவான்."

    சட்டென அமைதி நிலவியது.காரணம் நர்ஸரி வந்திருந்தது.

    ஒரு சின்ன வாயிலோடு அது இருந்தது...ஒரு சின்ன கார் போகலாம்போலிருக்கிறது. ஆனால் பஸ் போக வாய்ப்பு இல்லை.

    "நீங்க போய் பாத்துட்டிருங்க சார். நான் வண்டிய வாசல்ட்ட நிறுத்திட்டு வர்றேன்"

    ஒரு ஒழுங்கோடு வரிசையாக எல்லா கன்றுகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நன்றாக வளர்ந்திருந்த மரங்கள் காற்றில் அசைந்து இருப்பை உணர்த்தின.

    கூலியாள் ஓடிவந்தான், "என்னங்க வேணும்?"

    "எங்களுக்கு 50 கன்னு மரம் நடுறதுக்காக வேணும்னு கேட்டிருந்தோம். இங்க வந்து எடுத்துக்கச்சொன்னாங்க. உங்க பேர்தான் சகாயம்ங்களா?"

    "ஆமா சார். ஆபிஸர்ட்டருந்து ஆர்டர் வாங்கிருக்கீங்களா?" ஆர்டரைக் கொடுத்தவுடன், "வாங்க சார். எடுத்துத்தர்றேன்" என்று முன்னே நடந்தான் சகாயம்.

    "நல்லா நிழல் தர்ற செடி தாப்பா"

    "தர்றேன் சார். இதை பாருங்க?"

    "பாலு இது நல்லா நெழல் தருமா பாருங்க"

    "இது சவுக்கு கன்னு, வேணாம் சார் வேஸ்ட்டு. புங்கையோ வேப்பமரமோ இருந்தா பார்க்கலாம் சார். நல்ல நெழலும் தரும்,குளிர்ச்சியாவும் இருக்கும்...ஏங்க புங்கை வச்சிருக்கீங்களா"

    "புங்கையெல்லாம் இருக்காதுங்க வேம்பு தர்றேன். நல்லா நெழல் கெடைக்கும்" என்றான் சகாயம்.

    ஏதோ சிந்தனையிலிருந்த பாலு, "விலைக்குன்னா எவ்ளோ ஒரு கன்னு?"

    "நுப்பது சார்.இப்போ இருக்குற ஆபிசரு கண்டிப்பானவரு சார். அதான் இல்லாட்டி நானே போட்டுக்கொடுத்துடுவேன். விலைக்கு எடுக்குறதாருந்தா சொல்லுங்க பண்ணிக்கொடுத்துர்றேன்"

    "எனக்கு வேணும்பா. வேப்பங்கன்னு ஒண்ணு குடுத்துரு.முப்பது ரூபா தர்றேன்" பாலுவை ஆச்சரியமாக பார்த்தேன்.

    "அது எங்கம்மாவுக்கு சார்...செடி வளக்குறதுனா அவ்ளோ உயிர் அவங்களுக்கு"

    "அப்பிடியா. பரவாயில்லையே...ஆனா வேம்புதான் ரொம்ப சுலபமா கெடைக்குமே ஏன் காசு கொடுத்துவாங்கணும்?"

    "ஒரு சின்ன சந்தோஷம்தான் சார்... வர்ற வருமானம் நமக்கே சரியா இருக்கு... வீட்டுக்கு எதுவும் அனுப்பமுடியல. அப்பப்போ இதமாதிரி ஏதாவது செஞ்சாதான் ஆறுதலா இருக்கு"

    "இவ்ளோ தெளிவா சிந்திக்கிறீங்க...ஏன் சொந்தமா டிராவல்ஸ் வச்சுக்கக்கூடாது?"

    "பண்ணணும் சார். ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு இருக்கேன். மொதல்ல நிறைய்ய கத்துக்கணும். பொறுப்பு எடுத்துக்கும்போது என்னன்ன சிக்கல் வரும்னு தெரியவேண்டாமா?"

    ஒரு பெருமூச்சுடன் மேலும்,

    "படிச்சிருந்தா உங்கள மாதிரி ஆபிசரா ஆகியிருந்திருக்கலாம். படிப்பு ஏறல. பாதிலயே கார் ஓட்ட வந்துட்டேன். படிப்பு ஒரு நிழல் மாதிரி சார். எப்பவும் கூடவே இருக்கும். என்னை நினைச்சுக்கிட்டா நிழல் இல்லாத மரம்தான் ஞாபகம் வருது. .."

    சகாயம் ஓடி வந்தான்...

    "சார் எல்லா செடியும் ஏத்தியாச்சு. இதுல ஒரு கையெழுத்து போட்டிருங்க"

    "பாலு வண்டிய திருப்பிட்டு வாங்க"

    தனது இருக்கையில் அமர்ந்த பாலு திரும்பிப்பார்த்தார்.

    பஸ்சுக்குள் ஒரே செடி மயம். மண்வாசனை வேறு. புதிதாக பிறந்ததுபோன்ற ஒரு உணர்வு தோன்றியிருக்கவேண்டும்...

    டிரைவர் பாலு, கிடைத்த ஒன்றிரண்டு இலை இடைவெளிகளில் முகம் காண்பித்து என்னை நோக்கி குழந்தைமாதிரி சிரித்தார்...

    படிப்பு, நிழல் போல என்பது உண்மைதான். ஆனால் நம்பிக்கை மரத்திற்கு வேர் போன்று முக்கியமானது...

    என்றாவது வெற்றியடைவேன் என்று சொல்லாமல் சொல்லிய அவர் சிரிப்பிலிருந்து, எனக்குள்ளும் ஒரு புதிய மனிதன் பிறந்திருந்தான்...

    Monday, February 06, 2006

    தனி ஊடகங்களுக்கு தணிக்கை தேவையா?

    தகவல் ஊடகங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்றில், மக்கள் எதிர்காலத்தில் நாளிதழ்களையும் வார இதழ்களையும் படிப்பதை விட்டுவிட்டு இன்டர்நெட் மற்றும் ப்ளாக்குகளை படிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்றார்கள்.(தி ஹிண்டு)

    ஏற்கனவே இப்படி பலபேர் இடம்பெயர்ந்து விட்டார்கள் என்பதுடன், சொந்தமாக ப்ளாக்கும் நடத்துகிறார்கள் என்பதுதான் சற்றே வித்தியாசமான விஷயம்.

    ஒரு பத்திரிக்கையின் அல்லது ஒரு எழுத்தாளனின் வாசகன், இன்னொரு பத்திரிக்கை நடத்தமுடியுமா? தனக்கு தோன்றுகிற எந்த கருத்தானாலும் மாவூடகங்களில்/நாளிகைகளில் வெளிப்படுத்த முடியுமா? ஒரு கருத்துக்கு மறுகருத்து சொல்லமுடியுமா? எல்லாவற்றுக்கும் பதில் - ப்ளாக்.

    இதழ்களில், வேறொரு கருத்துக்கு மீத்தொடுக்க முடியாது... சில எல்லைக்குட்பட்ட விஷயங்களைத் தவிர வேறு எதையும் படிக்கமுடியாது... (கமெர்ஷியலுக்காக சில விஷயங்களை பண்ண வேண்டியிருக்கிறது)

    மேலும் அந்த கருத்தரங்கில், 'ப்ளாக் என்பதுதான் எதிர்காலத்தில் நிலைபெறப்போகிற சக்திவாய்ந்த ஊடகம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பலபேர் தருகிற தகவல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இதற்கு என்ன செய்வது?' என கையை பிசைந்தார்கள்.

    உண்மையான தகவல்களை மட்டுமே பதிவுசெய்வதற்கும் அல்லது எதிர்விளைவை ஏற்படுத்துகிற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கும் ஒரு தணிக்கை ஏற்படுத்துவது என்பது கடினமான விஷயம்...கண்காணிப்பது அதைவிட கஷ்டம்.

    சுமார் ஆயிரம் தமிழ் பதிவகங்கள் இருக்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு நூறு இடுகைகள் தரப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். எத்தனைபேரை தேடித்தேடி சரிசெய்துகொண்டிருப்பீர்கள்? எல்லாவற்றையும் வாசிப்பவர்களுக்கு எது உண்மை என புரிய வைப்பது இன்னும் சிரமம்.

    (அப்படிப்பட்ட தணிக்கைகள், வெகுஜன ஊடகங்களான தனியார் தொலைக்காட்சிகளுக்கும், பேரிதழ்களுக்கும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அங்கே தரப்படுகிற எல்லா தகவல்களையும் எதன்பேரில் நாம் நம்புகிறோம் சொல்லுங்கள்)

    தி ஹிண்டு, நம்பகமான விஷயங்களைத்தான் தருவார்கள் என்பது எப்படி எல்லோருக்கும் தெரிந்தது? அதே போலத்தான் இதையும் அவர்கள் தானாக தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும்.

    நம்பகமான/எதிர்விளைவை ஏற்படுத்தாத விஷயங்களைத் தருவது ஒவ்வொரு ப்ளாக்கரின் கடமைதான் எனினும் தனிக்கூடாரம் போட்டு மற்றவர்கள் எழுதுவதை கட்டுப்படுத்தமுடியாதே?

    முன்னெல்லாம் இதுதான் தகவல் என சொல்வதற்கே தகவல் இருக்காது...அப்படியே இருந்தாலும், ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்கு வழியின்றி இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு வார்த்தையை கொண்டே பலவற்றை பெற வழியிருக்கிறது.

    இதனால், இணைய வாசகனுக்கு ஒரு புதிய பொறுப்பும் தரப்படுகிறது...

    ப்ளாக்குகள் மூலம் தகவல்கள் தெரிந்துகொண்டவுடன், உண்மையை தானாக ஆராய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அது.

    Friday, January 27, 2006

    கடன் மட்டும் கொடுக்காதீங்க...

    வைகைப்புயல் வடிவேலு, ஒருத்தனுக்கு கடன் கொடுத்திருந்தார். ரொம்பநாள் கண்ணிலேயே படாதவன் ஒருநாள் போகிற வழியில் இவரிடம் வகையாக சிக்கிக்கொண்டான்.

    "ஏண்டா கடன் வாங்கிறதுக்கு மட்டும் வந்திர்றீங்க... வாங்கினதுக்கப்புறம் தலைமறைவாகிடுறீங்களே எப்புடிடா வெண்ரூ?"

    மாட்டிக்கொண்டவனுக்கோ அவசரம்.("வீட்டில் அக்காவுக்கு பயங்கரத்தலைவலி. தலைவலி பாம் வாங்கிட்டு, போறதுக்குள்ள, இவன் வேற...")

    அந்தப்பக்கம் ஒருத்தன் வந்தான். "என்னண்ணே, உன்ன பாம் வாங்கியார சொன்னிச்சில்ல அக்கா. இங்க மசமசன்னு நிக்கிற...சீக்கிரம் போண்ணே"

    'பாம்' என்றதுமே அதிர்ச்சி வடிவேலுவிற்கு. ('என்னது பாமா? ஐயையோ இப்ப என்ன செய்வேன்?')

    இவனுக்கு போன் வருகிறது,"என்னக்கா?...'பாம்'ஆ? ரெண்டு வாங்கிட்டேன். கவலையேப்படாத...இனிமே எந்த தொந்திரவும் இருக்காது..."

    வடிவேலு அழ ஆரம்பிக்கிறார்.
    "டேய் டேய், ஒண்ணும் செஞ்சிடாதடா...சும்மா ஒரு வெளையாட்டுக்குதான்டா கேட்டேன்.கொடுத்த காசை நீயே வேணாலும் வச்சுக்க. தீபாவளிக்கே பட்டாசு சத்தத்தை டேப்ல ரெக்கார்ட் பண்ணி போட்டுத்தான் கொண்டாடுவேன். உண்மையான பாம்'னா ரொம்ப பயம்டா."

    "அடயேண்ணே நீ பயப்புட்ற. நா சொல்றது இந்த தலைவலி பாம். வேணுமா?"

    "அடச்சே...அதானே பார்த்தேன். நம்மகிட்ட வாலாட்ட எந்த கொம்பனுக்கு தைரியம் இருக்கு? நாங்கள்லாம் யாரு? புகுந்து வெட்டிடமாட்டோம்..."

    (தனக்குள், "நம்ம வீக்னஸ் எப்பிடியெல்லாம் வெளிப்படுது பாரு சே")

    Thursday, January 26, 2006

    குடியரசு தினவிழாக்கொண்டாட்டம்

    இன்று காலை, எங்கள் கல்லூரியின் குடியரசு தினவிழா கொண்டாடத்தில், சின்ன நாடகம் ஒன்று மனதைக்கவர்ந்தது.

    பெரிய விஷயமொன்றுமில்லை. ..அடிக்கடி கேட்கிற கதைதான்...

    வெட்டியாக பொழுதைக்கழிக்கும் மூன்று பேர் இருக்கிறார்கள். வருவோர்போவோரிடம் ஏமாற்றிக்காசு வாங்குவதுதான் அவர்கள் வேலை.

    ஒவ்வொரு மதத்தினர்களாக அந்தப்பக்கமாக வருகிறார்கள். அவர்களுக்குமுன் அந்த மதத்தினை போற்றுவதுபோல நடிக்கிறார்கள்...அவர்களிடம் ஏமாற்றி தட்சணை மற்றும் காசுகள் வாங்கிகொள்கிறார்கள். அவர்கள் போனபின் அந்தக்காசைவைத்து சூதாடுகிறார்கள்.

    உண்மை அந்த மதத்தினர்களுக்கு தெரியவரும்போது, அவர்கள் இவர்களை தங்கள் மதத்திற்கு வந்துவிடுமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.

    பெரிய இழுபறியாகிறாது...
    மோதல் ஏற்படுகிறது...
    ஒரு பெரியவர் தலையீட்டால், எல்லாம் சுபமாகி எல்லோரும் நண்பர்களாகி அமைதியாகின்றனர்.

    "மதங்கள் மாறினாலும்
    இறைமை ஒன்றே !!!
    மனங்கள் மாறினாலும்
    மனிதம் ஒன்றே !!!"

    "மதங்களில்
    நமது அடையாளங்களை
    தொலைத்துவிடாமல்,
    'நாம், இந்தியர்கள்' என்பதை மட்டும்
    ஞாபகத்தில் கொள்வோம்"

    "மனிதம் வளர்த்து
    இந்தியம் காப்போம்."

    என்பதுதான் சொல்லாமல் சொல்லப்படுகிறது.

    Monday, January 23, 2006

    கல்கியின் பொன்னியின் செல்வன்...

    கல்கியின் பொன்னியின் செல்வன்(the son of Kauveri) நாவலைப்பற்றி மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதில் ரொம்ப சந்தோஷம் உண்டு.

    பொ.செ ரேடியோ நாடகக்குழுவினருக்கு விருதுகள் தரப்பட்டது என்ற செய்தியை The Hinduவில் பார்த்ததும் ஒரு கேள்வி என் மனதுக்குள்..."ஏன் பொ.செ.னை (சினிமா)படமாக எடுக்கமுடியவில்லை?"

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடங்கி பத்மC கமல் வரை முயற்சி பண்ணிப்பார்த்துவிட்டார்கள்...

    "நான்கு தலைமுறை வாசகர்களைக்கொண்டது பொ.செ., ஒவ்வொரு வாசகனும் கதாப்பாத்திரங்களை ஒவ்வொரு விதமாக கற்பனை பண்ணிவைத்திருப்பார்கள். அவர்களை திருப்தி செய்வது கடினம்..." என்பது திரு.கமல் அவர்களின் வருத்தம்.

    இந்தக்காரணத்தால், ஒரு விறுவிறுப்பான, சஸ்பென்ஸ் நிறைந்த மகாக்காவியத்தின் visual treat-டை எதிர்பார்த்த நல்ல ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

    கொஞ்ச நாட்களுக்குமுன், தமிழ் டிவிக்காக இரு வெவ்வேறு தயாரிப்பாளர்களால் தனித்தனியே தொடங்கப்பட்டு பிறகு பிரச்சனை ஏற்பட்டு அதுவும் நிறுத்தப்பட்டது...ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்.

    பலகாலம் பலபேரால் படிக்கப்பட்டு, அத்தனை கதாப்பாத்திரங்களும் போர்க்காட்சிகளும் ஆழமாகப்பதிந்த இராமாயணமும், மகாபாரதமும்தான் இந்தி டிவியில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு சக்கைபோடு போட்டது... ('சக்திமான்' பார்த்தால் 'பீஷ்மர்' ஞாபகந்தாங்க வருது)

    சரித்திரக்கதைக்கு திரைவடிவம் கொடுப்பதில் ஒரு சிக்கல் உண்டு...அரண்மனை செட் போட்டு கஷ்டப்பட்டு எடுத்துக்கொண்டிருப்பார்கள், தூரத்தில் டொயாட்டோ கார் போய்கொண்டிருக்கும்...நவீன காலத்தின் அடையாளங்களை என்ன வேஷம் போட்டும் மறைக்கமுடியாது.

    தற்பொழுது நம்மளால் முடிந்தது, ஒன்றே ஒன்றுதான்... எந்தெந்த கதாப்பாத்திரத்திற்கு யார்யார் பொருத்தமாகயிருப்பார்கள் என்று பேசிக்கொண்டிருக்கலாம்...

    கவுரவமிக்க இராஜராஜச்சோழனுக்கு கமல்,சரிதானே?.
    துறுதுறு வந்தியத்தேவனுக்கு, சூர்யா. கம்பீரமான பெரியபழுவேட்டரையருக்கு (காலஞ்சென்ற) ஆர்.எஸ்.மனோகர். கண்டிப்பான சின்னபழுவேட்டரையருக்கு ராஜ்கிரண். நந்தினிக்கு ஐஸ்(வில்லி)..என்ன நான் சொல்றது?

    ஆழ்வார்க்கடியானுக்கு வடிவேலு அவர்களைப்போடலாம் என்றால், அவருடைய 'எக்குத்தப்பாக ஏதாவது பேசி எல்லோரிடமும் உதை வாங்கும்' இமேஜ் இடிக்கிறது...
    புலிகேசி-23 காமெடியான அரசர்.அதற்கு அவர்தான் பொருத்தமானவர்.
    (ஆழ்வார்க்கடியான் சிக்கலில் மாட்டிக்கொள்பவர் இல்லை...அதிலிருந்து சாதுர்யமாக தப்பிப்பவர்)

    ஆமா...ரொம்பநாளா ஒரு சந்தேகம்...
    ஆதித்தகரிகாலன் இறந்தது எப்படி?

    Saturday, January 21, 2006

    சென்னை புத்தகக்காட்சியில்...

    (பத்ரி அவர்களின் 'விகடன்,குமுதம்,பிறர்' படித்தபின் பதித்தது)

    கிழக்குப்பதிப்பகத்தில் மற்றும் மிகச்சில ஸ்டால்களில் மட்டும்தான் புத்தகங்கள் இருத்திவைக்க நடுவில், மர அலமாரி போல இருந்தது...

    ஆனால், பெரும்பாலான ஸ்டால்களில், இப்படியில்லாமல் 'புத்தகக்கோட்டை' கட்டிவைத்திருந்தார்கள். இரசிக்கும்படியாக இருந்தாலும், மூச்சுத்திணற வைக்கும் 'மாநகரப்பேருந்து கூட்டம்போல்' இருந்த நெரிசலில் தடுக்கி, 'கோட்டை' கலைந்து விழுந்து அந்த இடமே பேஜாராகியது...

    ஒருவேளை, இதனால்தான் என்னவோ விகடனில் அப்படி புத்தகங்களை கொட்டிவைத்திருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    மேலும், எப்பேற்பட்ட கூட்டநெருக்கடியாக இருந்தாலும் கிடைக்கிற சந்துபொந்தில் நின்றுகொண்டு, 'படித்துப்பார்த்துதான்' வாங்குவேன் என்று அடம்பிடிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு, பாலிதீன் பாக்கெட்டில் 'பத்திரப்படுத்தப்பட்ட' நூல்களை வாங்க முடியவில்லை...('கதாவிலாசம்' மற்றும் வேறு சில ஸ்டால்களில் கவிதை தொகுப்புகள்)

    அடுத்தது...
    சாதாரணமாக எல்லா ஸ்டால்களிலும் விற்பனைப்பிரதிநிதிகள் இருந்தார்கள். விகடனில் (உள்ளே) இல்லை. தேவையில்லை என்பதுதான் என் எண்ணம். ஏனென்றால், எல்லா தலைப்புகளும் நன்கு பரிட்சயமானவை. அதோடு, அந்த மகாகூட்டத்தின் நடுவில் கடைக்காரர்கள் வந்துநின்று பேசிக்கொண்டிருப்பதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால், அவர்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக பில் போட்டிருந்திருக்கலாம். 'என் நம்பர் எப்போ வருமோ' என்று எக்ஸாம் ரிசல்ட் போல காக்க வேண்டியிருந்தது.

    குமுதத்தின் எண்ணமே வேறு...அங்கு போய் "பாஸிட்டிவ் பாயிண்ட் இருக்கா?" என்று கேட்டால், "ப்ரிண்டிங்கில் இருக்கு. மூணு நாள்ல வரும்" என்றார்கள் இறுக்கமாக. கேள்விப்படாத தலைப்புகளை வைத்துக்கொண்டிருந்தார்கள். பிரபலமாகாதவைகள் காட்சியில் இருந்தால் பிரபலமாகிவிடும் என்ற வியாபார கணக்கு, தப்பாகிவிட்டது. Hope they would recognize their negative point...

    "எப்படியெல்லாம் இருந்த குமுதம்..." என்ற வாசகர்களின் பெருமூச்சுதான் கடைமுழுவதும். ("குமுதக்குதிரை ரேஸுக்கு எப்போ வரப்போகுது")

    மற்ற நண்பர்கள் சொன்னதுபோல, சில்லறையின்றி சில இடங்களில் வாங்கமுடியவில்லை...இந்த சில்லறை(யில்லா?) பிரச்சனைக்குத்தீர்வு, கடனட்டைதான்...

    என்னைப்போன்ற கடனட்டையில்லாத வாசகர்களுக்கும் உதவுகிற வகையில் நூல்களின் விலையை(தள்ளுபடிக்கப்புறம்) roundoff செய்துதந்தால் நன்றாகயிருக்கும்... :-)

    ஆங்...அப்புறம்...இவ்ளோ பெரிய (மைதானம் கொண்ட) 'காயிதே'யை விட்டுவிட்டு, வேறு எங்கு நடத்தமுடியும் என்று நினைக்கிறீர்கள்...?

    கடனும், கட்டைவண்டியும்...

    பயங்கர சலம்பல் பேர்வழியான எங்கள் நண்பனின், 'ஊருக்கு வழியனுப்பும்' ஸ்டைலே தனி.

    ஒரு தரம், வேறொரு நண்பனின் send off-க்கு எழும்பூர் போயிருந்தோம். பஸ்ஸில் ஏறியமர்ந்தவனிடம் சத்தமாக இப்படி சொன்னான்..."டேய் மச்சான்...ஊரில் நம்ம ராமசாமி பயபுள்ளட்ட 1-ணே கால் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன்.வட்டியோட சேர்த்து 2 ரூபாய் கேப்பான்...ஏமாந்திடாத...அப்புறம் குப்பன் கிட்ட சொல்லிருக்கேன். அவன் உன்னை கட்டைவண்டியில் வந்து 'பிக்கப்' பண்ணிப்பான்...",

    எல்லோரும் பார்த்தார்கள். கூனிக்குறுகிப்போய் பஸ்ஸுக்குள் மறைந்துகொண்டான் ஊருக்குப்போகிறவன்.

    வெகுசீக்கிரத்திலேயே பதிலடி கிடைத்தது.

    நண்பர்கள் கும்பலாக திருச்சிக்கு கிளம்பினோம்...send off கொடுக்க இவனும் வந்திருந்தான்.

    ரயிலில் ஏறியதும், எங்களுடன் கிளம்பிய நண்பன் ஒருவன் இவனைப்பார்த்து சத்தமாக இப்படி சொன்னான்...

    "டேய் மச்சான்...போலீஸ் நடமாட்டம் அதிகமாயிடுச்சு. நம்மளது, பகல்ல செய்யிற பிஸினஸ் இல்ல...மாட்டிக்காத...ஜாக்கிரதையா இருந்துக்கோ..."

    இவன் ஓடி ஒளிய, இடம் தேடினான்...

    விக்ரோம்...வாங்குறோம்...

    என் பொறியியல் காலத்தில், விக்ரம் என்ற வகுப்புத்தோழனை இப்படித்தான் கூப்பிடுவார்கள்... (வகுப்பிலிருந்தாலும்)

    "விக்ரோம்... விக்ரோம்..."('விக்ரம்' படத்தில் வருமே ஒரு பாடல்)

    இன்னொரு பக்கமிருந்து இப்படி பதில்பாட்டு வரும், "வாங்குறோம்...வாங்குறோம்..."

    Monday, January 16, 2006

    ஆசிரியன் என்பவன்...

    ஒரு ஆசிரியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு என் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சில விஷயங்கள் அடிக்கடி சொல்வார்...

    "a Teacher must know...
    Something about Everything and
    Everything about Something..."
    (இதில் நான் எந்த வகை?)

    மேலும்... "a teacher must encourage but not discourage...

    Encourage-னா 'ஊக்கு' விக்கிறது, Discourage-னா 'பின்'வாங்குறது..."

    குடுகுடு...தர்ர்ர்ர்றேன்

    ஒரு தவளை, இன்னொரு தவளைக்கு கடன் கொடுத்திருந்தது....


    கொடுத்த கடனை திரும்பக்கேட்டது இப்படி...

    "குடுகுடுகுடு குடுகுடு குடுகுடுகுடு..."


    கடன் வாங்கியிருந்த மற்றொரு தவளை சொன்னது, "தர்ர்ர்ர்றேன்...தர்ர்ர்ர்ர்ர்ர்றேன்..."

    - அடிக்கடி மிமிக்ரி பண்ணிக்காட்டும், எங்கள் நண்பரின் வித்தை இது...

    டெஸ்டும், மாட்சும் !!!

    அடுத்தநாள் மிக முக்கியமான பரீட்சை...

    இன்று மாலையிலிருந்து டிவியில், இந்தியா-தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்டில் இந்தியா ஜெயித்து, 'மேன் ஆப் த மேட்ச்' கொடுக்கிறவரை பார்த்தாச்சு...

    இரவு 11 மணி. எப்படி படிப்பது அடுத்த நாள் பரீட்சைக்கு?

    "ஏண்டா கவலப்பட்ற? இருக்கவே இருக்கு பிட்டு. டேய் மச்சான் அந்த 'மர ஸ்கேலை' எடுத்தா?" .
    மர ஸ்கேலில் எல்லா பதில்களும் இடம்பெயர்ந்தன...

    "மச்சான் நீதான் முன்னால இருக்க. நீயே இதை வச்சுக்க. பரீட்சை ஆரம்பம் ஆனதும் அப்படியே எல்லோரும் எழுதவேண்டியதுதான். என்ன சரியா?"

    ஆனால், விதி அவர்களுடைய விஷயத்தில், 'பிட்ச் போட்டு' விளையாடியது.

    முன்னால் இருக்கிறவனோடு அந்த காலின் நம்பர் முடிந்து, மீதி இருக்கிறவர்களையெல்லாம் அடுத்த அறையில் போட்டுவிட்டார்கள்...

    இவர்களுக்கெல்லாம் ஒரே குமைச்சல்...("சே எல்லா பிட்டும் அவன்ட்ட மாட்டிக்கிச்சே?")

    எல்லாம் முடிந்து வெளியே வந்ததும், அவனைப்பார்த்து, (வயிற்றெறிச்சலுடன்) "டேய் ஒரு கலக்குகலக்கிருப்பியே?"

    "எங்க....?அதான் எல்லாத்தையும் ரூம்லயே மறந்து வச்சிட்டுவந்திட்டனே !!!" என்றான் நொந்துபோய்.

    Thursday, January 12, 2006

    "ஏன் லேட்டு?"

    மூன்றாம் வருட பொறியியல் படிப்பின்போது,
    ஒரு நாள் வகுப்பிற்கு ரொம்ப லேட்டாக வந்து சேர்ந்தான் என் நண்பன்
    (படு வெகுளியான இவனை யாராவது கோபமாக திட்டினால் சிரித்துவிடுவான். இவன் மற்றவர்களிடம் கோபப்பட்டு பார்த்ததில்லை).

    அப்பொழுது, கணிதப்பேராசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.
    தாமதமாக வந்தவனைக் கண்டதும் பயங்கரக்கோபம்...
    "ஏன் லேட்டு?" என்றார் கோபத்துடன்.

    "அதுவா சார், நான் ஸ்டாப்பிங்க்கு வந்துட்டேன் சார்.
    பஸ்ல ஒரே கூட்டம். தொங்கிகிட்டு வந்தாங்க்ய.
    ஃப்ரீயா வந்த பஸ்ல பொறுமையா வந்தேன். அதான் லேட்டாயிடுச்சு" என்றான் அப்பாவியாக.

    ஆசிரியருக்கு கோபம் தலைக்கேறியது.
    "அப்படீன்னா இங்க இருக்கவனெல்லாம் இங்கேயே குடிசை போட்டு தங்கி, காலைல எந்திரிச்சு வர்றானுங்களோ?"

    இப்படி அவர் கேட்டதற்கு...

    அவன் சிரித்தேவிட்டான்...

    Wednesday, January 11, 2006

    காக்டெய்ல்

    டீக்குடித்துக்கொண்டிருந்த நண்பனுக்கு திடீர் சந்தேகம்,
    "டேய், 'காக்டெய்ல்'ன்னா என்னடா?"

    பெப்ஸி குடித்துக்கொண்டிருந்த மற்றொருவன், "இதுதான்டா, 'காக்டெய்ல்'" என்றபடி, பெப்ஸியை டீயில் ஊற்றிவிட்டான்.

    பால் திரிந்து, டீ பாழாகியது...(கவித கவித...)

    வைகைப்புயலும் பேப்பர்திருத்துதலும்...

    வைகைப்புயல் வடிவேலு, ஆசிரியராக இருக்கும்போது, 'மஜாவாக' விடைத்தாள்கள் திருத்தப்போனார்.

    விடைத்தாள்களில், பக்கம் பக்கமாக கதை எழுதிவைத்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்தார் வடிவேலு,

    "அங்க வந்தேன் டெர்ம் டெஸ்ட்ல கதையடிச்சு வச்சிருந்திங்க, போனாபோகுதுனு பெருந்தன்மையா பாஸ்போட்டுட்டு வந்தேன். இப்போ யுனிவர்ஸிட்டி எக்ஸாம்லயே பக்கம்பக்கமா எழுதிவச்சிருக்கேனா,

    புரிஞ்சுபோச்சுடா புரிஞ்சுபோச்சு. இனிமே 'யாரையும் ஃபெயில் ஆக்க மாட்டேன்'னு எங்க சீஃப்கிட்ட சத்தியம் பண்ணதை எப்படியோ ரகசியமா தெரிஞ்சுவச்சுக்கிட்டுதானே இப்படி எழுதிவச்சுருக்கீங்க?

    சத்தியத்தை இப்பவே கான்சல் பண்ணிபுடுவேன்டா...கான்சல் பண்ணிபுடுதேன்.

    ஏழுவயசு புள்ளையா இருந்தபோது எங்கப்பன்ட்ட 'எக்ஸாம்னா என்னப்பா?'னு ஒரு ஆர்வத்துல கேட்டேன்...

    உடனே, 'சிவனே'னு ரோட்ல போனவனை உட்காரவச்சு, எக்ஸாம் எழுதவச்சு,அதை திருத்தி, 'இதாண்டா மவனே எக்ஸாம்'னாரு...அப்பேற்பட்ட எச்சீகேட்டட் ஃபேமிலியில பிறந்த எச்சீகேட்டட் ஆளுக்கு பிறந்த எச்சீகேட்டட் ஆளுடா இந்த புலிப்பாண்டி..."

    Monday, January 09, 2006

    "Key கொடுடா..."

    அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்த இரவில், தாமதமாக வந்து சேர்ந்தான் அறை நண்பன்...

    மாடி ரூம் பூட்டியிருந்தது...
    கீழே படுத்திருந்தவர்களிடம் வந்து, "டேய் மச்சான், 'கீ' கொடுடா மாடிக்கு போகணும்" என்று நச்சரித்தான்.

    தூக்கக்கலக்கத்தில், ஒருத்தன் சொன்னான், "த சும்மா 'கீ கொடு கீ கொடு'ங்காத. 'கீ கொடுத்து' மாடிக்குப் போறதுக்கு நீ என்ன பொம்மையா?"

    இன்னொரு குரலும் கேட்டது,
    "டேய் மச்சான்...எந்திரிக்கிற நிலமையில இல்ல...ஒண்ணு நீயா கீ கொடுத்துக்கோ...இல்ல, பேட்டரி வாங்கிப்போட்டுகிட்டு மாடிக்கு போய்க்கோ"

    Sunday, January 08, 2006

    கடுக்காய் வைத்தியர்

    புகழ்பெற்ற வைத்தியர் ஒருவருக்கு, தன் முட்டாள் மகனின் முன்னேற்றத்தைப்பற்றி பெரிய கவலை...

    அதனாலேயே ஒருநாள் உயிர் துறந்துவிட்டார்.

    தந்தையின் காலத்திற்குப்பிறகு, 'வைத்தியம் பார்க்கப்படும்' என்று அறிவித்துக்கொண்டான்...

    ஒருத்தன் வந்தான்.காணாமல்போன தன் விலையுயர்ந்த நகை திரும்பக்கிடைக்க ஒரு வைத்தியம் சொல்லுமாறு கேட்டான்.

    "4 கடுக்காய்கள் சாப்பிடு! நகை கிடைக்கும்" என்றான் தயக்கமில்லாமல்.

    4 கடுக்காய்கள் சாப்பிட்டவனுக்கு வயிறு தாங்காமல் பேதியாயிற்று...

    அடிக்கடி குளத்தங்கரைக்கு போய் தளர்ந்து அங்கேயே படுத்துவிட்டான்...காற்றில் அசைந்த மரத்தின் உச்சியிலிருந்து, சிறிய துணிமுடிப்பு ஒன்று கீழே விழுந்தது...எடுத்துப்பார்த்தால் தொலைந்த நகை !

    கடுக்காய் வைத்தியர் புகழ் பரவிற்று...

    அந்நாட்டு மகாராணியார் ஒரு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ("எப்பொழுதும் அந்தப்புரத்திலேயே இருக்கும் மன்னர் திரும்பிவரவேண்டும்")

    "6 கடுக்காய் கொடுங்கள்" என்று தனக்குத் தெரிந்த வைத்தியத்தை சொன்னார் வைத்தியர்...

    உள்ளே போன கடுக்காய்கள் சும்மா இருக்குமா?
    மன்னருக்கு பயங்கர பேதியாகி, அரண்மனையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.
    'என்ன ஆச்சோ?' என்று பதற்றத்துடன் பணிவிடை செய்த மனைவியின் அன்பைப்புரிந்துகொண்டார்.

    தன் திறமையால்(?) அரண்மனை வைத்தியர் ஆகவும் ஆனார்.

    சிலநாட்களுக்குப்பிறகு, மன்னர் கவலையுடன் இருப்பதைக்கண்ட மகாராணி, 'என்ன ஆச்சு?' என்று வினவ, "பக்கத்து நாட்டு மன்னன் பெரும்படையுடன் போருக்கு வருகிறான். சிறுசைனியத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என வருந்தினார்.

    "இதுக்குப்போயா கவலைப்படுவது? நம் அரண்மனை வைத்தியரிடம் சொன்னால் ஏதாவது செய்வாரில்லையா?"

    "நம் படையிலுள்ள அத்தனை பேருக்கும் தலா 10 கடுக்காய்கள் கொடுங்கள்" என்றார் வைத்தியர்...

    ஒற்றர் மூலம் இதையறிந்த பக்கத்துநாட்டு மன்னன் தன் சைனியத்திற்கு தலா 20 கடுக்காய்கள் தர உத்திரவிட்டான்.

    20 கடுக்காய்கள், 10 கடுக்காய்களை விட அதிகமாக வேலையைக்காட்டியது.

    போரில் அண்டைநாட்டு மன்னன் தோற்றோடினான்.

    கடுக்காய் வைத்தியருக்கு விலையுயர்ந்த வெகுமதிகள் தரப்பட்டன...

    தனக்குத் தெரிந்த எல்லா மருத்துவத்தையும் சொல்லிவிட்டவருக்கு, இப்பொழுதுதான் பயங்கர பயம்.

    தன் வீட்டுக்கு தீ வைத்தார். ("மருத்துவக்குறிப்புகள் எல்லாம் சாம்பாலாகிவிட்டன. இனி என்ன செய்யபோகிறேன்?")

    மன்னர் அவருக்கு ஆறுதல் சொல்லி, அவர் வாழ்நாளுக்கு தேவையான வெகுமதிகள் கொடுத்து உதவிசெய்தார்.

    **************

    கதைசொல்லி: ஆகவே மக்களே...இதன் நீதி என்னவென்றால்...

    பொதுஜனம்: 'கடுக்காயை மறக்கமுடியாது'. அதானே?

    க.சொ: இல்லப்பா. 'வாழ்க்கையில தன்னம்பிக்கை முக்கியம்' அதான் நீதி.

    பொ.ஜ: யே என்னப்பா இவன் இப்படி பழம் ஆகிட்டான்?

    BAPASI 29வது புத்தகக்காட்சி - ஒரு திருவிழா

    எல்லோருக்கும் சிற்றிலக்கியங்கள் பற்றி ஒரு awareness கிடைத்திருப்பது, ஆரோக்கியமான விஷயம்.

    புத்தகப்பிரியர்கள் அதிகரிப்பதில் லாபம் எல்லோருக்கும்தான். மொழிக்கு உட்பட...
    எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில், மிகக்குறைந்த விலையில் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவைகளை வெளியிட்டிருக்கிறார்கள். (கையடக்க பொ.செ. பதிப்புகளில், சுருக்கியிருப்பார்களோ?) வரவேற்கவேண்டியது.

    எப்பொழுதும் இல்லாமல், திடீர் புகழ்பெற்ற சில புத்தகங்களையும் பார்க்கமுடிகிறது. (சுந்தரகாண்டம், சூ|டோ|கூ, Albert Einstein...)

    இது தவிர 'உன் வாழ்வு உன் கையில்' என்பது போன்ற சுயமுன்னேற்றநூல்கள், குழந்தைபுத்தகங்கள், சமையல் புத்தகங்கள், நிறைய இலக்கிய நூல்கள், ஒரு பெரிய திருவிழாதான் அது.

    மூலிகை மருத்துவநூல்கள் வாசிக்கும்போது, கடுக்காய் கதை ஒன்று ஞாபகம் வந்தது(அடுத்த பதிவில் அதைத்தான் சொல்லபோகிறேன்).

    வழக்கமாக, நிறைய மி.மு.ம.க்களை(VIP தமிழாக்கம்) இங்கே பார்க்கலாம்.

    சென்ற தடவை, (சமீபத்தில் மறைந்த) சுரா அவர்கள், சுகிசிவம்,கனிமொழி, ருத்ரன், 'நக்கீரன்' கோபால், டைரக்டர் விக்ரமன் ஆகியோர் இருந்தார்கள்.

    அப்பொழுது, அப்பாவிற்காக வாங்கிய 'நெடுங்குருதி'யில் கையெழுத்திட்டுத்தந்தார் மனுஷ்யபுத்ரன்.

    இன்று மனுஷ்யபுத்ரனையும், பத்ரி(கிழக்கு பதிப்பகம்)யையும் பார்க்கமுடிந்தது.

    'காயிதே'க்கு வெளியில் பழைய புத்தகங்கள் கடை 'காயுமே' என்று நினைத்தது தப்பு...பயங்கர கூட்டம் அங்கேயும்...

    Friday, January 06, 2006

    செல்போன்கள் ஜாக்கிரதை...

    செல்போன்கள் அதிகம் அறிமுகமாகாத காலக்கட்டம் அது.
    சண்முகா வளாகத்தில் யாராவது செல்பேசினால்,
    பாலிடெக்னிக் மாணவர்களின் கவலை இதுதான்...

    "அய்யோ, ஆரு பெத்த புள்ளையோ தனியா பேசிச்சிரிச்சிக்கிட்டிருக்கு..."

    ஒரு மன்னரின் கவலை...

    ஒரு மன்னர் இருந்தார்.
    அவருக்கு தீராத மனக்கவலை ஒன்று இருந்தது.
    அது அவருடைய வழுக்கைத்தலை பற்றியது.
    என்னசெய்தும் தலையில் முடி வளரமாட்டேன் என்கிறது...

    அரண்மனை வைத்தியர்களுக்கெல்லாம் கெடு வைத்தார்...
    ("இன்னும் ஒரு மாதத்தில் மருந்து கண்டுபிடித்து கொண்டுவராவிட்டால் சிறைதண்டனை !!!")

    எல்லா மருத்துவர்களும் கலங்கிக்கொண்டிருந்தபோது, வயதான ஒருவர் முன்வந்தார், "மன்னரிடம் என்னைக்கூட்டி போங்கள்"

    மன்னரிடம் ஒரு தைலத்தை கொடுத்தார் பெரியவர்...
    "மன்னா...இது மிகவும் சக்திவாய்ந்த தைலம்...இதை தினமும் காலையில் தலையில் தடவிவந்தால், கேசம் வளர்ந்துவிடும். ஆனால் ஒரு நிபந்தனை...இதை உபயோகப்படுத்தும்போது, எக்காரணம் கொண்டும் 'தேங்காயை' நினைத்து விடக்கூடாது!!!"

    'நாம் என்றைக்கு 'தேங்காயை' நினைத்திருக்கிறோம் இன்றைக்குமட்டும் திடீரென நினைப்பதற்கு?'

    மறுநாள்...

    தைலத்தை கையில் எடுத்தார் மன்னர்..."மிக முக்கியம்...தேங்காயை நினைத்துக்கொண்டால் மருந்து வேலை செய்யாது..."

    "ஆ...ஐயோ நினைத்துவிட்டேனே...வேறு வழியில்லை. நாளைக்குத்தான் பயன்படுத்தவேண்டும் !!!"

    அடுத்தநாள்...

    "இன்றாவது தேங்காயை நினைக்கக்கூடாது...அடச்சே!!!"
    இவ்வாறே பலநாள் தொடர்ந்தது...

    சற்றுநாளைக்கெல்லாம் 'தேங்காய் எண்ணை, இளநீர்,தேங்காய் பர்பி எல்லாம் கூட' ஞாபகத்திற்கு வந்தது.

    தேங்காயைக் கண்டாலே வெறுக்க ஆரம்பித்தார் மன்னர். திடீரென ஒரு நாள்..."ஏன் இந்தத் தலைக்கு என்ன? தேங்காயை விட நன்றாகத்தானே இருக்கிறது ???!!!" என்று அவர் கருதினார்.

    இது தோன்றியதற்குப்பிறகு மன்னரின் கவலை மறைந்தது.

    (Courtesy: The Hindu - Young World)
    * * * * * *

    கதைசொல்லி: ஆகவே இதன் நீதி என்னவென்றால்...
    பொதுஜனம்: என்ன...?
    க.சொ: எப்பேற்பட்ட ஆளாக இருந்தாலும்...
    பொ.ஜ: இருந்தாலும்...?
    க.சொ: என்ன முயற்சி செய்தாலும்...
    பொ.ஜ: செய்தாலும்...?
    க.சொ: தேங்காயை மறக்கமுடியாது !!!
    பொ.ஜ: புய்யாங்க...நீயும் உன் நீதியும்!!!

    Thursday, January 05, 2006

    விடைத்தாள்கள் திருத்தப்போகும் இடத்தில்...

    விடைத்தாள்கள் திருத்தும்பணிக்காக, சென்னை பொறியியல் ஆசிரியப்பெருமக்கள் திருவிழா போல வந்திருந்தார்கள்.

    டூவீலரில் வருகிற ஒரு நண்பர், மிகத்தாமதமாக வந்துசேர்ந்தார்.

    "கெல்மெட் போட்டிருந்ததால இடம் தெரியாம (பழைய மகாபலிபுர சாலையில்) ரொம்ப தூரம் போயிட்டேன்"

    கேட்டுக்கொண்டிருந்த நண்பர், ஆறுதல் சொல்கிறவாறு இப்படி சொன்னார்... "பார்த்துங்க...இப்பல்லாம் பஸ்ல போறவங்ககூட கெல்மெட் போட்டுக்கிறாங்களாம்"

    ("அதான் காலேஜ் வாசல்ல, அம்மாம்பெரிய ஆர்ச் கட்டிவச்சிருக்காங்கல்ல?")

    நிஜ ஸ்டால்

    சமீபத்தில், அயோத்தியா மண்டபம் பக்கம் நானும் மற்ற இரண்டு நண்பர்களும் போயிருந்தோம்.

    ஒரு நண்பர் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

    'என்ன?' என்றபோது,
    "இங்கு ஒரு போளி ஸ்டால், ரொம்ப நல்லா இருக்கும். அதான் தேடினேன்"

    இன்னொரு நண்பர் சரியான ரவுசு பார்ட்டி...உடனே சொன்னார்,"யப்பா, ஏதாவது 'நிஜ' ஸ்டாலுக்குக் கூட்டிட்டுப்போங்கப்பா"

    Monday, January 02, 2006

    நன்றி தினமலர்...

    சென்ற சனிக்கிழமை தினமலர் 'டாட்காமில்'(31/12/05) தமிழ்ப்பூ பற்றி வந்திருந்தது என்று நண்பர்கள் சொன்னார்கள் (காசி, சந்தோஷ்). இதில் உள்ள ஒரு சிறு சம்பவத்துடன் முகவரியைத் தந்திருந்தார்கள்...

    ரொம்ப சந்தோஷம்...

    இந்த ப்ளாக்கின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிற என் நண்பர்களுக்கும்...

    அனைவருக்கும் என் நன்றி...

    Search This Blog

    Powered by Blogger.

    Pages